
நம்பிக்கையே வாழ்க்கை!
சூரியன் அஸ்தமித்தாலும்
காதலுடன்
தன் இணைக்காக
காத்திருக்கிறது
அந்தப் பறவை…
நம்பிக்கைதானே வாழ்க்கை!
தனித்திருப்போம் – விழித்திருப்போம் – ஜெயித்திருப்போம்!
அதோ தெரிகிறதே
ஆரோக்கிய உதயம்…
பாதைகளும் பயணங்களும் நீள்கின்றன…
ஆனாலும்,
நம் நம்பிக்கை இழையோ
அதையும் தாண்டி
நீண்டுகொண்டே போகிறது
தலைமுறை தலைமுறைகளாக!
நம்பிக்கை எனும்
உயிரோட்டம் இருக்கும் வரை நாங்களும் அழகுதான்
உன்னைப் போலவே!
– சுசீலா மாணிக்கம், திருவானைக்காவல்.
…………………………………………………………………………
புத்தாண்டு
பூஜை செய்து
பூத்தூவி,
புது நாட்காட்டி
சுவரில் மாட்டி,
டைரியில் எழுதி,
வாழ்த்துக்கள் பகிர்ந்து,
விருந்து உண்டு
இனிதாய்த் தொடங்கி,
ஓரிரு நாட்களிலேயே மெல்ல நகர்ந்து
நல்லது காட்டும்
புத்தாண்டு…!
– எஸ்.ராஜம், திருச்சி
…………………………………………………………………………
முனைந்திடுங்க…
மண் வளத்தைக் காத்திடுங்க;
பெய்யும் மழை நீரை சேகரித்திடுங்க!
கண் போன்ற விளை நிலங்களை விற்காதீங்க;
அடர்ந்த காடுகளை இனி அழிக்காதீங்க!
கரையோரம் வீடுகளைக் கட்டாதீங்க;
பெரும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்காதீங்க!
குடிநீரை சிக்கனமா செலவிடுங்க;
மற்றவர்க்கு உதவிகள் செய்திடுங்க!
தானமும் தர்மமும் உங்களைக் காத்திடுங்க;
பெற்ற தாயையும் தந்தையையும் போற்றி வணங்கிடுங்க!
வானமும் வையகமும் செழிக்க உழைத்திடுங்க;
உங்கள் வாழ்க்கையை அதுவே உயர்த்திடுமுங்க!
தமிழ் மொழியில் பேசிடுங்க;
அதுவே தாரக மந்திரமாய் திளைத்திடுங்க!
அமிழ்தினிலும் இனிய மொழி தமிழுங்க;
அந்த அரிய மொழியை வளர்க்கப் பாடுபடுங்க!
விவசாயிகள், செழிக்க வழி வகுங்க;
அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற உதவிடுங்க!
உங்கள் கவலைகளைத் தூக்கிப் போடுங்க;
கண்ட கனவை எல்லாம் நனவாக்க முனைந்திடுங்க!
– ஜி.பாபு, தீரன் நகர்.
…………………………………………………………………………
பொலிக புத்தாண்டு!
நாடு நலம் பெற
கொடும் நோய் ஒழிந்திட
நல்வினைகள் நல்கிட
தெய்வ அருள் பெற்றிட
தூய்மையான உள்ளத்துடன்
புன்னகை மிளிரும் முகத்துடன்
நல்லொழுக்கம் பேணி
நாம் வேண்டிடுவோம்!
தன்னலம் பேணாமல்
தோல்வியால் உள்ளம் தளராமல்
நாளும் உழைத்திடுவோம்
வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கிறோம்
அனைவரையும் அணைத்துத் தழுவி வாழ்த்துக்கள் சொல்ல…
பொற்காலமாய் புத்தாண்டு பொலிந்து வருக!
– சுதா திருநாராயணன், ஸ்ரீரங்கம்.
…………………………………………………………………………
வாராயோ புத்தாண்டே!
வானளாவிய உயரத்தில்
எல்லோரையும் வாழவைக்கும்
புத்தாண்டே!
புதுமைகள் பல்துறைகளில்
புதுப்புது ஊற்றாய்
பிரவாகமெடுக்கப் புறப்பட்டு
விட்டாயோ புத்தாண்டே!
நெஞ்சமெல்லாம் மலர்ச்சியுடன்
எண்ணி எண்ணித் துணிந்து
புதுப்புது செயல்பாட்டில்
வெற்றியைப் பூரிப்புடன்
தருவாயோ புத்தாண்டே!
உலகத்தார் ஏற்றத்துடனும்
ஏழை, எளியோர் மகிழ்வுடனும்
அன்பு, பண்பு, பாசம்,
கடலலையாய் பொங்கிட
வாராயோ புத்தாண்டே!
– து.சேரன், ஆலங்குளம்