கண்கள் முக்கியம் கண்மணிகளே! 

கண்கள் முக்கியம் கண்மணிகளே! 
Published on
 –ரேவதி  பாலு

கொரனாவால் தாமதமாகிக் கொண்டிருந்த  வழக்கமான கண் பரிசோதனைக்கு மூன்று வருடங்கள் கழித்து போன வாரந்தான் போக முடிந்தது.  படிக்கும் கண்ணாடியில் பவர் அதிகமாகி விட்டதா என்று பரிசோதிக்கப் போனபோது எனக்கு க்ளூகோமா முதல் கட்டம் இரண்டு கண்களிலும் உருவாகியிருக்கிறது என்றார் கண் டாக்டர்.

விவரமாக சொல்ல வேண்டும் என்றால்,  என் கண்களிலிருந்து திரவம் வெளியேறும் பாதையில் அடைப்பு  ஏற்பட்டு, அதனால் கண்களில் 'பிரஷர்' அதிகரித்துவிட்டது.  அந்த திசுக்களை வெட்டி, அடைப்பை நீக்கி திரும்பவும் ஓடு பாதை அமைக்க வேண்டுமாம். 'ஏதோ சரக் சரக் கென்று கத்தியால் கண்ணுக்குள் வெட்டப் போகிறார்,' என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, அவர் அடைப்பின் மீது லேசர் ஓளியை செலுத்தி அதன் மூலம் அடைப்பை அகற்றப் போவதாகச் சொன்னார். இது  க்ளூகோமா முதல் கட்டம் தான் என்பதால் பயப்பட தேவையில்லை என்றும் அடுத்த வாரம் லேசர் செய்து விடலாம் என்றும் சொன்னார்.

ஆனால், டாக்டரிடம் போய் வந்த ரெண்டாவது நாளே, காலை எழுந்திருக்கும்போதே கண்களைத் திறக்க முடியாமல் தலைவலி, கண்களை சுற்றி வலி என்று ஒன்றும் முடியாமல் எழுந்திருந்தேன்.  இரண்டு நெற்றிப் பொட்டுகளிலும் (கண்ணோரங்கள்) யாரோ உள்ளேயிருந்து ஒரு சுத்தியலால் விடாமல் அடிப்பதைப் போல தாங்க முடியாத வலி.  அன்று ஞாயிற்றுக் கிழமை க்ளினிக் விடுமுறை நாளாகப் போய் விடவே, அடுத்த நாள் ஃபோன் செய்தபோது லேசருக்கு வரச் சொன்னார்கள்.

மிக அழகாக கம்பீரமாக வீற்றிருந்த மெஷினில் என் தாடையைப் பொருத்தினார்கள்.

"இப்போ என் இடது காதைப் பாருங்க…"

என் எதிரே டாக்டர் அமர்ந்திருந்தார்.  அவருக்கு அருகில் வலப்புறம் ஒருவர், இடப்புறம் ஒருவர், உதவியாளர்கள் நின்றிருந்தனர். தலைவலி வேறு, என்ன செய்யப் போகிறார்கள் என்று ஒன்றும் புரியாத நிலை வேறு, இந்த அழகில் சத்தியமாக யார் காதைப் பார்க்கணும் என்று எனக்குத் தெரியவில்லை.  நான் முழிப்பதைப் பார்த்து டாக்டரே தன் காதைத் தொட்டுக் காண்பித்தார். நல்லா,  மகாத்மா காந்தி காது, கமலஹாஸன் காது மாதிரி தனியாக நீட்டிக் கொண்டு 'இதோ இருக்கேனே' என்று காட்டிக் கொண்டிருந்தது.

"ஒண்ணுமில்லீங்க.  ஒரு எறும்பு கடிக்குற ஃபீலிங் தான் இருக்கும். அவ்வளவு தான்.  சும்மா ஜாலியா இருங்க!" டாக்டர் எனக்கு செய்யப்போகிற  லேசர் அறுவை சிகிச்சையைப் பற்றி தான் சொன்னார்.

ஏற்கெனவே ஒரு மணி நேரமாக கண்களில் சொட்டு மருந்து விட்டு 'பாப்பா'வை சுருக்கிக் கொண்டிருந்தார்கள். இப்போ வலது கண்ணில் முதலில் லேசர் ஒளி செலுத்தி 'பட்' 'பட்'  டென்று சப்தம் வர அந்தக் கண்ணில் அறுவை சிகிச்சை முடிந்தது. அதே போல இடது கண்ணிலும்.  ஆனால் ஒவ்வொரு 'பட்' 'பட்' சப்தத்திற்கும் யாரோ நடு மண்டையில் 'லொட்' 'லொட்' டென்று சுத்தியலால் அடிப்பது போல வலி.

லேசர் முடிந்து ஆசுவாசமாக வெளியே புறநோயாளிகளுக்காகப் போடப் பட்டிருந்த நாற்காலியில் போய் அமர்ந்தபோது ரெண்டு நாட்களாக இருந்த தலைவலி காணாமல் போயிருந்தது.  கண்களைச் சுற்றி மட்டும் லேசாக ஒரு வலி. முதல் நிலையாக இருந்த 'க்ளூகோமா' ரெண்டே நாட்களில் அடுத்த நிலைக்கு மாறியிருக்கிறது. கண்களிலிருந்து திரவம் வெளியேற முடியாமல், கண்களில் 'பிரஷர்' அதிகரித்து கண்ணோரங்களில் அலை மோதியதால் என் நெற்றிப் பொட்டுகளில் வலி இருந்து, இப்போது ஓடு பாதை சரியானதும் வலி சரியாகிவிட்டது  என்று டாக்டர் சொன்னதை வைத்து ஒருவாறு புரிந்து கொள்ள வேண்டியிருந்தது.

அருமைத் தோழிகளே! அறுவது வயதிற்கு மேற்பட்ட எல்லோருமே வருடம் ஒருமுறை க்ளூகோமா பரிசோதனை  பண்ணிக் கொள்வது மிக மிக அவசியம். ஏனென்றால் அது எந்த விதமான அறிகுறிகளும் இல்லாமல் இருந்து கண் பார்வைக் குறைவு ஏற்பட்டு தான் கண்டுபிடிக்கும்  படியாக இருக்குமாம்.  அதுவும் என்னைப் போல் கனியிதழ்கள் மட்டுமே இனிக்காமல், உடல் முழுவதுமே ரத்தத்தில் சர்க்கரைபாகு ஓடுவதால் இனித்துக் கொண்டிருக்கும் (அதாங்க, சர்க்கரை நோயாளிகள்) உடனே கண்பார்வையை பரிசோதித்து க்ளூகோமா ஆரம்ப நிலையில் இருந்தால் கண்டுபிடித்து சரி செய்து கொள்ளுங்கள்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com