
சுருக்குப்பை
அப்பத்தா இறந்தபின், அழுக்கு,பிசுக்கு என முகம் சுழித்து, சுருக்குப்பையை முனியம்மாவிடம் வீசினர் மூன்று மருமகள்களும், உள்ளே மாமியாரின் வைரமூக்குத்திகள் இருப்பது தெரியாமலே…
– என்.கோமதி, நெல்லை.
———-
உணர்வு
பேச்சுப் போட்டியில் சுதந்திரம் என்ற தலைப்பில் பேசி வெற்றிபெற்ற நந்தினி ,வீட்டிற்கு வந்ததும் ஆசையாய் வளர்த்த கிளிகளின் கூண்டைத் திறந்து வானில் பறக்கவிட்டாள் .
பலன்
பாலில் நீர் கலந்து கொண்டிருந்த வியாபாரியின் மகன், தனது பிராகரஸ் கார்டில் அப்பாவின் கையெழுத்தை போட்டுக் கொண்டிருந்தான் .
யதார்த்தம்
பாரதியார் நினைவு நாளில் ஓடி விளையாடு பாப்பா பாடலை பாடி முடித்து வகுப்புக்கு வந்த மாணவர்களை பார்த்து "இந்த வாரம் முழுவதும் விளையாட்டு கிடையாது அதற்கு பதிலாக ஸ்பெஷல் கிளாஸ் நடக்கும், "எனக் கூறினார் வகுப்பு ஆசிரியர் .
– பானு பெரியதம்பி, சேலம்.
———-
ஹெல்மெட்
சாலையோரத்தில் ஹெல்மெட் வியாபாரம் செய்து கொண்டிருந்தவன், வியாபாரம் முடிந்ததும் கடையை கட்டிக்கொண்டு கிளம்பினான் டூவீலரில், ஹெல்மெட் அணியாமல்.
கணக்கு
தன் வீட்டுத் திருமணத்தில் எதிர்பார்த்ததை விட விருந்து செலவு கூடிவிட்டது என்று சொன்னவர் மொய் வருகை அதிகரித்தது என்று எவரிடமும் சொல்லவில்லை.
விளையாட்டு
"சமத்தா விளையாடிட்டு இருக்கணும்! நாங்க கடைக்கு போயிட்டு வந்துடறோம்!" என்று தன் டேப்லட்டை குழந்தைகளிடம் கொடுத்துவிட்டு கிளம்பினாள் அந்தத் தாய்.
பூமராங்க்
"இந்த வயசுல நான்…" என்று சொல்ல ஆரம்பித்த அப்பாவை இடைமறித்து "உங்க அப்பாவும் இப்படித்தான் உங்களை குறை சொல்லிக்கிட்டு இருந்திருப்பாரு!" என்றான் மகன்.
புரட்சி
பசுமைப் புரட்சியை பற்றி பாடத்தில் படித்துக் கொண்டிருந்த குழந்தையின் வீடு விவசாய நிலத்தை விற்று வந்த வருமானத்தைக் கொண்டு கட்டப்பட்டு இருந்ததை பாவம் அந்த குழந்தை அறிய வில்லை!
விளம்பரம்
ச்சீ ச்சீ! அசிங்கமப்பா! திறந்த வெளியில் மலம் கழிக்காதீர்கள்! என்று விளம்பரம் எழுதியவன் எழுந்தான். அவசர அவசரமாக சென்று மரத்தடியில் ஒதுங்கினான்.
– எஸ்.வேதஜனனி, நத்தம்.
———-
அறியாமை
சிங்கத்தை யார் திருடப்போகிறார்கள் என்று நினைத்து அதன் கூண்டுக்கதவைத் திறந்து வைத்த காவலாளி, எஜமான் தன்னை ஏன் வேலையை விட்டுத் தூக்கினார் என்று புரியாமல் விழித்தான்.
துன்பத்தில் இன்பம்
என் பணம், வாட்ச், போன் அனைத்தையும் இழந்தபோது மகிழ்ந்தேன் என்னை மிரட்டியவன் கத்தியைக் கீழே போட்டதனால்.
சுயதொழில்
நான் பயணித்துக் கொண்டிருந்த வாடகைக் காரின் ஓட்டுநர் "என்னை யாரும் எதுவும் செய்யச் சொல்ல முடியாது, நானே எனக்கு எஜமான்," என்றபோது, நான் சொன்னேன், இடது பக்கம் திரும்பு என்று.
– ஹேமலதா சீனிவாசன், பம்மல்.
———-
பாசம்
"அடுத்த ஏழு ஜென்மத்துக்கும் நீங்க தான் என் கணவரா வரணும் " என்று மனைவி மாலா சொன்னதைக் கேட்டு பூரித்துப்போனான் அவள் கணவன் சிவராமன்.
"என் மேலே இவ்வளவு பாசமா மாலா?" என்று சிவராமன் மனம் திறந்து கேட்டான். "அதில்லீங்க! அடுத்த ஏழு ஜென்மத்துக்கும் சமையல் வேலை செய்யவும், துணி துவைக்கவும் வேற ஆளைத்தேட வேண்டாமே!"
– சி. ஆர். ஹரிஹரன், கேரளா.