‘நன்றி எனும் சொல்!’

‘நன்றி எனும் சொல்!’
Published on
– ஆர். மீனலதா, மும்பை
ஓவியம்; பிள்ளை

தேவைப்படும் நேரம் பிறர் உதவினாலும் சரி; உதவாமல் சாக்குபோக்கு சொன்னாலும் சரி; "எல்லாம் நன்மைக்கே என நல்லவிதமாக நினைத்து "நன்றி சொல்வது நல்லுணர்வினை வளர்க்கும்.

எப்படி என்கிறீர்களா? இதோ என் அனுபவம்:

திடீரென பயணம் செல்ல வேண்டி இருந்ததால் அட்வான்ஸ் ஆக டிரெயின் டிக்கெட் புக் செய்ய இயலவில்லை. ஸ்டேஷனுக்குச் சென்று டிக்கெட் வாங்கியபின், ஏதோ ஒரு நம்பிக்கையில், டிக்கெட் பரிசோதகரை அணுகி விபரம் கூறி, ஒரு பெர்த் (Berth) கிடைக்குமா? என்று பணிவாகக் கேட்கையில், "இல்லை! கிடைக்காதம்மா! முகத்தில் அடித்தாற்போல கூறி நகர்ந்து சென்றார்.

அவர் சொன்ன விதம் கோபத்தை வரவழைத்தபோதும், சிறு புன்முறுவலுடன் "பெர்த் இல்லைன்னா, நீங்களும்தான் என்ன பண்ண முடியும். தாங்க்ஸ் சார்! என்று சொல்லி, இன்று அன்ரிஸர்வ்ட் பயணம்தான் என மனதில் நினைத்து, சற்று தொலைவு சென்று அவரைக் கவனித்துக் கொண்டிருந்தேன்.

டிரெயின் புறப்பட பத்து நிமிடங்கள் இருந்தன.  பெர்த் டிக்கெட் ஏதோ கேன்சலாகிய விபரம் தெரிந்த சிலர், டிக்கெட் பரிசோதகரைச் சுற்றி நின்று கேட்டுக் கொண்டிருந்தனர்.

"இல்லை! இல்லை! எரிச்சலுடன் கூறியவாறே நகர்ந்தார்.

மேலும் 5 நிமிடங்கள் கரைகையில் என்னைக் கவனித்தவர், அருகே வந்து மேடம்! என்று மெதுவாக கூப்பிட,

"சொல்லுங்க சார்! என்றேன்.

"ஒரு பெர்த் கேன்சல். நீங்கள் ஏறிக்கொள்ளலாம். ரிஸர்வ்டு என்றவரிடம்,

மீண்டும் அதே புன்முறுவலுடன் "தாங்க்ஸ் என்றேன்.

இருந்தாலும், எனக்கு எப்படிக் கொடுத்தார்? என்ன காரணம்? புரியவில்லை.

பெர்த்துக்கு ரசீது கிழித்துப் பணம் பெறுகையில், "உங்க அப்ரோச் சூப்பர் மேடம்! திடீரென ஏற்பட்ட தலைவலியால் ஒரே டென்ஷன். நீங்க திரும்ப திரும்ப கேட்டு தொந்தரவு கொடுக்காமல், "இல்லை! என நான் கத்துகையில், "தாங்க்ஸ் என்று சொல்லி நாசூக்காக விலகிச் சென்றீர்கள். அதுதான் கேன்ஸலான பெர்த்தை உங்களுக்குக் கொடுக்கத் தோன்றியது" என்றாரே பார்க்கலாம்.

நன்றி எனும் சொல்லக் கூற நேரம் காலம் பார்க்கத் தேவையில்லை. கைக்காசு செலவில்லை. இன்றில்லை எனினும் நாளை கைகொடுக்கும். நாம் கூறும் "நன்றி எனும் சொல். உயிரோட்டத்துடன் சொல்வது அவசியம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com