ஒரு வார்த்தை!

ஒரு வார்த்தை!
Published on

ரொம்ப நாளாச்சே கதை சொல்லி? ஜெயராஜ் கதை சொல்லப்போறேன்… அதாவது, ஜெயா+ராஜூ! ஜெயா – ஒரு பெண்… ராஜூ ஒரு குதிரை! ஒ.கே கண்மணீஸ்? ப்ளீஸ் பின் தொடருங்க!

டிப்பு, அழகு, கைகாரியம், சமையல் எல்லாவற்றிலும் ஒரு சுமாரான பெண் ஐெயா! ஆனால், நிறைய எதிர்பார்ப்பு உள்ள, நடுத்தரமான, பெரிய குடும்பத்துக்கு மூத்த மருமகளாகப் போகவேண்டிய அமைப்பு வந்துவிட்டது. விதியின் சதி!

அவளுடைய கணவர் போன ஜென்மத்தில் மனோதத்துவ மேதையாக இருந்திருக்க வேண்டும்.

நைஸாக, பாராட்டிப் பாராட்டியே வேலை வாங்குவார். நான் அப்போது சின்னப் பெண் என்பதால் எனக்கு அந்த டெக்னிக் புரியவில்லை.

எல்லோரும் அமர்ந்திருக்கும் கல்யாண விருந்துக் கூடத்தில், "இதெல்லாம் ஒரு பாயசமா? எங்க ஜெயா, போன வாரம் செஞ்சா பாருங்க… ஒரு கசகசா பாயசம்… தேவாமிர்தம் ஆஹா!" என்பார், சத்தமாக.

எனக்கு 'பக்' என்று இருக்கும். அந்தக் கண்றாவியை நானும் சுவைத்திருப்பேன்.

"நாற்பது ஹிந்தி ஹோம்வர்க் நோட் புக்ஸை ஜெயாகிட்ட கொடுத்துட்டு, உட்கார்ந்தேன். டூ அவர்ஸ்லே… என்ன அழகா கரெக் ஷன் போட்டிருந்தா தெரியுமா… சடா சட்!" என்று ஓப்பனாகப் பாராட்டிதழ் வாசிப்பார்.

இப்படி, கிட்டத்தட்ட நாற்பது வருஷமா, 'ஆஹா… ஓஹோ' என பாராட்டி, முதுகைத் தட்டிக் கொடுத்துக் கொடுத்து, ஜெயாவையே, 'தான் பெரிய கெட்டிக்காரி' என நம்ப வெச்சுட்டாருன்னா… பாருங்களேன்! அவளும் 'மாங்கு மாங்கு' என உழைச்சு, கணவர் வீட்டாரை ஒரு நிலைக்குக் கொண்டு வந்ததோடு, ரொம்ப கான்ஃபிடன்ட் லேடி ஆகி விட்டாள்!

ஜெயா ஒல்ட் மாடல்! நியூ மாடல் பற்றி அப்புறமா எழுதறேன்…

ப்ப குதிரைக் கதைக்கு வருவோம்! கந்தப்பன் ஒரு விவசாயி. அவரோட பண்ணை வேலைக்கு உதவுறதுக்கு 'ராஜூ'ங்கிற குதிரையைப் பழக்கியிருந்தாரு. ஒரு நாள் அந்தி சாயுற நேரம்… கந்தப்பனைத் தேடிக்கிட்டு வெளியூர்க்காரர் ஒருத்தர் வந்தாரு.

"நான் மலைப் பகுதிக்குப் போகணும்… எனக்குப் பழக்கமில்லாத பாதைங்கிறதால, என்னோட கார் ஒரு பள்ளத்துல இறங்கிடுச்சு. அதை வெளியே எடுக்கணும். உங்கக்கிட்ட ஒரு குதிரை இருக்குதுன்னு சொன்னாங்க… கொஞ்சம் உதவ முடியுமா? ப்ளீஸ்"னு கேட்டாரு.

கந்தப்பனும் கயிறு, கம்பி, மூங்கில், கொம்புன்னு சில உபகரணங்களை எடுத்துக்கிட்டு, ராஜூவையும் கூட்டிக்கிட்டுப் போனாரு.

சின்ன கார்தான்… குட்டையும் பெருசா ஆழமில்லை. ஆனால், காரை வெளியே எடுக்க ராஜூ கொஞ்சம் சிரமப்படுமோன்னு தோன்றியது.

கந்தப்பன், கயிறுகளைக் காரில் கட்டி, இழுப்பதற்குத் தோதாக குதிரையுடன் இணைத்தார்.

கொஞ்ச நேரம் எதுவும் செய்யாமல் சும்மா இருந்துவிட்டு, குரல் கொடுத்தார்.

அப்புறம், "எங்கடா மணி… இழுடா வேகமா?"னு சத்தமாகக் குரல் கொடுத்தார்.

ராஜூ அசையாமல் நின்றது.

"டேய்… கருப்பா… நீ இழுடா பார்ப்போம்" என்று குரல் கொடுத்தார்.

குதிரை நகரவே இல்லை…

"ராஜூ… நீதான்டா பலசாலி! இவனுங்க எல்லாம் சொங்கி! நீ இழுடா… உம்… இன்னும் வேகமா… பேஷ்! சூப்பர்டா! பலே!" என்று குதிரையைத் தட்டிக்கொடுத்து, உற்சாகப்படுத்தினார். அவ்வளவுதான்.

ராஜூ, கயிற்றை இழுத்து முன்னேறியது… கார், பள்ளத்திலிருந்து மேலே ஏறிவிட்டது.

வெளியூர்க்காரர், கந்தப்பனுக்கு நன்றி சொன்னார்.

"ஐயா, நீங்க ஏன் உங்கக் குதிரையை விதவிதமான பேருல கூப்பிட்டீங்க… உங்கக் குதிரை பேரு ராஜூதானே?"

"என் ராஜூவுக்குக் கண்ணு தெரியாது. தான் மட்டும் கஷ்டமான வேலையைச் செய்யப்போறோம்னு அது நினைச்சுடக் கூடாது இல்லியா? அதுதான், அதுகூட இன்னும் இரண்டு குதிரைங்க உதவிக்கு இருக்குற மாதிரியும், ஆனா இது மட்டுமே பலசாலி, புத்திசாலிங்கிற மாதிரியும் நம்ப வச்சேன். அதுக்கும் நம்பிக்கை வந்து, காரை வெளியே இழுத்துடுச்சு!" என்றார்.

எஸ்… மை டியர் நட்புகளே… வார்த்தைகளின் மகிமை அபாரமானது. 'உன்னால் முடியும்; உன்னால் மட்டுமே முடியும்… நீ எல்லாம் சாதிப்பே!" என்று சொல்லிச் சொல்லி, அதாவது மோட்டிவேட் செய்தால் நல்ல பலன்களைப் பெறலாம்ங்கிறது கதையின் நீதி.

ஜெயா, ஓல்ட் மாடல்! நியூ மாடல் பற்றி எழுதறேன்னு சொன்னேன் இல்லியா?  ராஜூவோ ஐந்தறிவு விலங்கு… ஜெயா, அந்தக் காலத்துப் பெண்மணி. அதனால் இதெல்லாம் சாத்தியம்.

"என்ன… இப்படி எல்லாம் ஐஸ் வெச்சுப் பேசினா, நான் மோடிவேட் ஆகி இன்னும் நல்லா வேலை செய்வேன்னுதானே ட்ராமா போடறே…! இந்த காக்காய் பிடிக்கிற வேலை எல்லாம் என்கிட்ட வெச்சுக்காதே!" என இந்தக் காலத்து இளசுகள் மூஞ்சிக்கு நேராகவே சொல்லிடுதுங்களே! அப்ப என்னதான் செய்யறது?

எங்க பருப்பு வேகுமோ, அங்க செய்யுங்க சாம்பாரை!

நிமிர்த்த முடியலையா! விட்டுடுங்க நாய் வாலை!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com