திருமழிசை ஆழ்வார்!

திருமழிசை ஆழ்வார்!
Published on
கட்டுரை -ரேவதி பாலு
பெருமாளே! உன் பைந்நாகப் பாயைச் சுருட்டிக்கொள்!

ழ்வார்கள் திருமாலின் பெருமைகள் என்னும் பெருங்கடலில் ஆழ்ந்துத் திளைத்து பக்தி செலுத்தியவர்கள் என்பதால்தான் அவர்களுக்கு ஆழ்வார்கள் என்னும் பெயர் வந்தது. இவர்களால் வைணவம் வளர்ந்தது. இவர்கள் தங்கள் தாய்மொழியாகிய தமிழ் மொழியில் பெருமாளைப் போற்றிப் பாடியிருக்கிறார்கள்.   இவர்கள் மங்களா சாஸனம் செய்த 108 திருக்கோயில்கள், 108 திவ்ய தேசங்கள் என்று புகழ் பெற்றன.

திருமழிசை ஆழ்வார் தை மாதம் மகம் நட்சத்திரத்தில் பெருமாளின் ஆயுதமாகிய சக்கரத்தின் அம்சமாகப் பிறந்தவர்.  இவர் திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை என்னும் தலத்தில் பார்க்கவ முனிவருக்குப் புதல்வராகப் பிறந்தார். திருமழிசையில் பிறந்ததால் இவருக்கு திருமழிசை ஆழ்வார் என்று பெயர் வந்தது. இவர் முதலாழ்வார்கள் மூவர் காலத்தைச் சேர்ந்தவர். இவர் தனது எட்டாவது வயதிலேயே சகல சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார்.  ஸ்ரீமந் நாராயணனையே சதா சர்வ காலமும் தியானித்து யோகத்தில் ஆழ்ந்திருந்தார்.  நாலாயிர திவ்யபிரபந்தத்தில் திருச்சந்த விருத்தம், நான்முகன் அந்தாதி உட்பட  திருமழிசையாழ்வார் பாடிய பாசுரங்கள் 216.

இவரும் இவரது சீடன் கணிகண்ணனும் காஞ்சிபுரம் அருகிலுள்ள  திருவெஃகா என்னும் தலத்தில் தங்கி அங்கே குடி கொண்டுள்ள யதோத்காரி பெருமாளுக்கு கைங்கர்யம் செய்து வந்தார்கள். கணிகண்ணன் தினந்தோறும் உஞ்சவிருத்தி எடுத்து குருவுக்கு சேவை செய்தான்.  இங்கே குடி கொண்டுள்ள பெருமாளுக்கு 'சொன்னவண்ணம் செய்த பெருமாள்' என்னும் திருநாமம் உண்டு.  இந்தப் பெயர் வந்ததற்கு ஒரு சுவாரசியமான சம்பவம் காரணமாக அமைந்தது.

இவர்கள் தங்கியிருந்த குடிலை தினமும் சுத்தம் செய்து இவர்களுக்கு சேவை செய்து வந்தாள் வயதான ஒரு பெண்மணி. வயது முதிர்ந்ததால் தனக்கு ஏற்பட்ட இயலாமை, சோர்வு ஆகியவற்றைக் குறிப்பிட்டு அதனால் சரிவர சேவை செய்ய இயலவில்லை என்று ஒரு நாள் ஆழ்வாரிடம்  மனம் வருந்தினாள்.  உடனே ஆழ்வார் அந்தப் பெண்மணி என்றும் இளமையாக இருக்கும்படி வரம் நல்கினார்.  இளமையும் வனப்புமாக பேரழகுடன் விளங்கிய அந்தப் பெண்ணைப் பார்த்து மயங்கிய பல்லவராஜன் அந்தப் பெண்ணை மணந்து கொள்கிறான்.  ஒருநாள் அவள் தான் எவ்வாறு ஒரு முதிய பெண்ணாக இருந்து இப்போது இளமை ததும்பும் இளம்பெண்ணாக மாறினேன் என்ற கதையை மன்னரிடம் கூற,   வயதான அந்த அரசனுக்கும் தானும் இளமையாக மாற வேண்டும் என்னும் அவா ஏற்படுகிறது.  அந்தப் பெண் அரசனை ஆழ்வாரிடம் போய்க் கேட்கச் சொல்கிறாள்.

அரசன் ஆழ்வாரின் சீடன் கணிகண்ணனை அரசவைக்கு அழைத்துவந்து, அவனுடைய குருவிடம் தன்னையும் இளமையாக மாற்றும்படி  கூறச் சொல்கிறான். கணிகண்ணனோ தனது குரு அவ்வாறெல்லாம் செய்ய மாட்டார் என்று மறுத்து விடுகிறான்.  உடனே கோபங்கொண்ட அரசன் கணிகண்ணனை நாடு கடத்தும்படி உத்தரவிடுகிறான்.  இதைக் கேள்விப்பட்ட திருமழிசை ஆழ்வார் மிகுந்த  கோபத்துடன், "உன்னுடன் நானும் வருவேன்" என்று கூறியதுடன் கச்சிப்பதிக்கு சென்று பெருமாளிடம்,

கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி

              மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா – துணிவுடைய

              செந்நாப் புலவன் யான்  செல்கின்றேன் நீயும் உன்தன்

              பைந் நாகப் பாய் சுருட்டிக்கொள்!

'என் சீடன் கணிகண்ணனை அரசன் நாடு கடத்தி விட்டான், அவனுடன் சிறந்த புலவனாகிய நானும் போகிறேன். பக்தர்கள் இல்லாத ஊரில் உனக்கு என்ன வேலை?  நீயும் உன் பை நாகப்பாயை (ஆதிசேஷனை) சுருட்டிக் கொண்டு என் பின்னே வா!' என்று கட்டளையிட்டு விட்டு ஊரை விட்டுப் போக, பெருமாளும் தான் சயனம் கொள்ளும் ஆதிசேஷனை பாய் போல சுருட்டிக்கொண்டு கிளம்ப, மூவருமாக நடந்து சென்று ஓரிடத்தில் இரவு தங்குகிறார்கள். அவர்கள் ஓரிரவு அங்கே தங்கியதால் அந்த ஊருக்கு 'ஓரிக்கை' என்னும் பெயர் வந்தது.  பிற்காலத்தில் காஞ்சி மஹா சுவாமிகள் அந்த இடத்தில் சில வருடங்கள் தங்கி அருள்பாலித்தார்கள்.

நாராயணன் ஊரை விட்டு வெளியேறியதும், அவன் மார்பில் வாசம் செய்யும் லட்சுமி தேவியும் அந்த ஊரை விட்டு நீங்கினாள்.  திருவும் இறையும் இல்லாத ஊரை விட்டு அனைத்து தேவர்களும் நீங்கினார்கள்.  இறைவனின் சாந்நித்யம் போனதால் காஞ்சி மாநகரம் தனது களையை இழந்தது.  மறுநாள் கோயிலில் பூஜை செய்ய வந்த அர்ச்சகர்கள், கோயிலில் பெருமாள் இல்லாததைக் கண்டு திடுக்கிட்டு அரசனிடம் சென்று முறையிட்டனர்.

நடந்ததையெல்லாம் அறிந்த அரசன், திருமழிசையாழ்வாரின்  மகிமையை உணர்ந்தான்.  தனது குற்றத்தை உணர்ந்து மனம் வருந்தி ஓடோடிச் சென்று ஆழ்வாரின் பாதங்களில் வீழ்ந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினான்.

              ஆழ்வாரும் அவனை மன்னித்து பெருமாளைப் பார்த்து,

'கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி

              மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் – துணிவுடைய

              செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்

              பைந்நாகப் பாய் படுத்துக்கொள்.'

"கணிகண்ணன் ஊர் திரும்புகிறான், மிகுந்த தைரியமுடைய புலவனாகிய நானும் அவனோடு போகிறேன்.  பெருமாளே! நீயும் உன் பைந்நாகப்பாயை சுருட்டிக் கொண்டு எங்கள் பின் வந்து கோயிலில் உன் இடத்தில் சென்று படுத்துக்கொள்!" என்று பெருமாளுக்கு மறுபடியும் கட்டளையிடுகிறார்.

சீடன் முன்னே செல்ல, ஆழ்வார் அவன் பின்னே வர, பெருமாளும் அவர்கள் பின்னே தன் பாம்புப் படுக்கையைச் சுருட்டிக் கொண்டு திருவெஃகாவிற்கு மீண்டும் வந்து சயனத் திருக்கோலத்தில் சேவை சாதிக்க ஆரம்பிக்கிறார். பெருமாள் மற்ற தலங்களைப் போல இடமிருந்து வலமாக சயனிக்காமல், இந்தத் தலத்தில் வலமிருந்து இடமாக சயனித்திருப்பார்.  தன் பக்தனாகிய ஆழ்வாரின் கட்டளைக்கு இணங்கி அவர் பின்னே சென்றதால் பெருமாளுக்கு 'ஆராவமுத ஆழ்வார்' என்னும் திருப்பெயரும் உண்டு.  பக்தரின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு அவர் சொன்னவண்ணம் செய்ததால், இந்தப் பெருமாளுக்கு 'சொன்னவண்ணம் செய்த பெருமாள்' என்னும் திருநாமம் ஏற்பட்டது.  இந்தக் கோயிலும் அந்தப் பெயரிலேயே 'சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில்' என்று அழைக்கப்படுகிறது.

அதன் பின் கும்பகோணத்துக்கு வந்த திருமழிசையாழ்வார் அங்கே சில காலம் தங்கி பெருமாளுக்கு சேவை செய்தார். இவர் 13 திவ்ய தேசங்களை மங்களா சாஸனம் செய்துள்ளார்.  தமிழகத்தில் கும்பகோணத்தில் சாத்தார தெருவில் திருமழிசை ஆழ்வாருக்கு ஒரு திருக்கோயில் அமைக்கப்பட்டு ஆராதனைகள் செய்விக்கப்படுகின்றன.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com