அங்கிங்கெனாதபடி எங்கும் மணத்தக்காளி!

அங்கிங்கெனாதபடி எங்கும் மணத்தக்காளி!
Published on

கட்டுரை:  – ராஜி ரகுநாதன்

பூமியில் தானாகவே புல், பூண்டு முளைப்பதைப் பார்க்கிறோம்.
அவை அனைத்துமே ஏறக்குறைய மூலிகைத் தாவரங்களே. உதாரணத்திற்கு,  முழுமுதற் கடவுளான விநாயகருக்கு உகந்த அருகம்புல் தானாகவே முளைக்கிறது.  அதன் மருத்துவப் பயன்பாடு குறித்து அனைவரும் அறிவோம். ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி என்ற முதுமொழி கூட உள்ளது.

அதுமட்டுமின்றி ஓரிலைத் தாமரை அம்மாம் பச்சரிசி, கீழாநெல்லி, குப்பைமேனி, தும்பை போன்ற செடிகளை சாலை ஓரங்களிலும், எங்குச் சென்றாலும் பார்க்க முடிகிறது. இவை அனைத்தும் இறைவன் நமக்கு அளித்த வரங்களே!  நமக்கு முன்னிருந்த தலைமுறை வரை மூலிகைத் தாவரங்கள் பற்றிய புரிதல் நம் முன்னோருக்கு இருந்தது. ஆனால், இப்போது இவற்றின் அருமைத் தெரியாமல் அனைத்தையும் களை என்ற பெயரில் களைந்து எறிகிறோம். இது காலத்தின் கொடுமை.

வட இந்தியாவில் ஹிமாச்சல் பிரதேசத்தில் வசிக்கும் என் தோழி கூறுவார். அங்கு காட்டுச் செடி போல் கருவேப்பிலை வளர்ந்து மண்டிக் கிடைக்குமாம். அதை யாருமே உபயோகிப்பது இல்லையாம். இப்போது யூடியூப் சமையல்கள் வந்த பிறகு கர்ரி லீவ்ஸ் என்ற பெயரில் அவற்றைச் சிறிது உபயோகித்து வருகிறார்கள்.

அதுபோல்தான் நம் மணத்தக்காளியும். அருமை தெரியாத இடங்களில் புதராக மண்டி வளர்ந்து வருவதைக் காணும்போது ஆச்சரியம் ஏற்படுகிறது. மணத்தக்காளி செடி சுண்ணாம்புச் சத்தும் பாஸ்பரசும் அதிகம் கொண்ட மூலிகைத் தாவரம். இதனை ஆங்கிலத்தில் பிளாக் நைடிங்கேல் என்கிறார்கள். தெலுங்கில் இதனை 'காமஞ்சிக் காயலு' என்கிறார்கள்.

பழங்கள் கருப்பாக, உருண்டையாக, சிறியதாக இருக்கும். சிவப்பு பழங்கள் கொண்ட மணத்தக்காளிச் செடிகளும் இருந்தன. தற்போது அவை அதிகம் தென்படுவதில்லை.

மணத்தக்காளி பல மருத்துவப் பயன்கள் கொண்ட தாவரம். தானாகவே வளரக்கூடியது. இதன் இலையும் காயும் பழமும் தொண்டைச் சளியை அகற்றி, வியர்வை வரச் செய்யும். இருமலுக்கு நல்லது. வாய் மற்றும் குடல் புண்ணைப் போக்கக்கூடியது. இலைகளைப் பறித்து நெய்யில் வதக்கி அப்படியே சாப்பிடலாம், ஜீரணத்திற்கு நல்லது. இலைகளை பருப்பு போட்டு வேகவைத்து, தேங்காயுடன் சிறிது மிளகு சேர்த்து அரைத்து கூட்டும் செய்யலாம். பழங்களை அப்படியே பறித்து உண்டு சுவைக்கலாம். காய்களைப் பறித்து குழம்பு செய்யலாம். தயிரில் ஊறப்போட்டு வற்றலாக காயவைத்து வறுத்தும் பயன்படுத்தலாம்.

தமிழகத்தில் மட்டுமேயன்றி, மணத்தக்காளி செடி உலகெங்கும் விளைகிறது. ஆஸ்திரேலியாவிலும் கனடாவிலும் மணல் தக்காளிச் செடி எங்கு பார்த்தாலும் சாலை ஓரங்களில் மண்டிக் கிடப்பதைப் பார்க்க முடிந்தது. காயும் பழமுமாகக் கொட்டிக் கிடக்கிறது. ஆனால், அதனை அங்கு யாருமே கண்டுகொள்வதில்லை. அங்கு இதனைக் காட்டுச் செடி என்று கூறி, அங்குள்ள தமிழர்களே சமைத்து உண்ண அஞ்சுகிறார்கள்.

நான் ஆஸ்திரேலியா சென்றபோது, சாலையோரத்தில் செழிப்பாக வளர்ந்திருந்த மணத்தக்காளிச் செடிகளைப் பிடுங்கி எடுத்து வந்து வீட்டில் வைத்து ஆசை தீர வளர்த்தேன். அதன் காய்களைப் பறித்து வற்றல் குழம்பு செய்தேன். அதன் இலைகளை நெய்யில் வதக்கி கூட்டாகச் சமைத்தும் உண்டு மகிழ்ந்தோம். அந்தச் செடிகளைப் பார்க்கும்போது நம் கிராமத்தில் இருப்பது போலவே உணர்ந்தேன்.

யாருமே சாப்பிடாத ஊரிலும் எதற்காக வளருகிறதோ! இறைவனின் கருணையை என்னவென்பது? எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா! என்று எண்ணத் தோன்றுகிறது.

——————————

சுடச் சுட … மணத்தக்காளி தேங்காய் பால் சூப்!

தேவையான பொருட்கள்: மணத்தக்காளி கீரை -அரை கட்டு
சின்ன வெங்காயம் -10, பூண்டு – ஆறு பல், தேங்காய் பால் – ஒரு கப்
உப்பு தேவையான அளவு, மிளகுத்தூள் சிறிதளவு,  வெண்ணெய் – சிறிதளவு

செய்முறை: மணத்தக்காளி கீரை நன்கு ஆய்ந்து சுத்தம் செய்து மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம் பூண்டு தோலுரித்து மிகவும் பொடியாக நறுக்கவும். அடி கனமான வாணலியில் வெண்ணெய் விட்டு பூண்டு வெங்காயம் சேர்த்து சிறிது வதக்கி, பிறகு பொடியாக நறுக்கிய கீரையும் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி இரண்டு கப் தண்ணீர் தேவையான உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் வேக விடவும். பிறகு மிளகுத்தூள் தேங்காய் பால் சேர்த்து கலந்து பரிமாறவும். வயிற்றுப் புண்ணுக்கு நல்ல மருந்து இந்த சுவையான அருமையான சூப்.
-ஆதிரை வேணுகோபால்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com