இராணுவப் பயிற்சி கற்பிக்கும் வாழ்க்கைப் பாடங்கள்!

இராணுவப் பயிற்சி கற்பிக்கும் வாழ்க்கைப் பாடங்கள்!
Published on
முத்தான பத்து: நம் வாழ்க்கை கெத்து!

-வெங்கடராமன் ராமசுப்ரமணியன்

மெரிக்காவின் இராணுவத்தில் 37 வருடங்களுக்கு மேல் பணியாற்றி, இராணுவப்படையின் அடிமட்டத்திலிருந்து, படிப்படியாக பெரும் பதவிகளை வகித்தவர்,  அட்மிரல் வில்லியம் மெக்ராவன். அவர் 2014ம் ஆண்டு, டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில், தனது இராணுவப் பயிற்சியின்போது கற்றுக்கொண்டவற்றைப் பற்றி ஒரு உரை நிகழ்த்தினார். அந்த உரை மிகவும் பிரபலமானது. அந்த உரைசார்ந்து,  பின்னர் ஒரு புத்தகம் எழுதினார். அந்தப் புத்தகத்தின் பெயர் 'உங்களது படுக்கையைச் சரிசெய்யுங்கள்: சின்னஞ் சிறிய விஷயங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம்.  மேலும், உலகத்தினைக் கூட மாற்றலாம்' (Make your bed: Little things that can change your life and may be the world).

இந்தப் புத்தகத்தில் வில்லியம் அவர்கள் பகிர்ந்துக்கொண்ட விஷயங்களைப் பார்ப்போம்.

  • ரு வேலையை முடிப்பதோடு, உங்களது நாளினைத் தொடங்குங்கள்; உங்களது படுக்கையைச் சரிசெய்வதன் மூலம் உங்களது நாளினை ஆரம்பியுங்கள்; இராணுவப் பயிற்சியின்போது, காலையில் எழுந்தவுடனே, படுக்கையானது சரி செய்யப்பட்டிருக்க வேண்டும். போர்வை செவ்வகமாக மடிக்கப்பட்டு, படுக்கைவிரிப்பு கசங்கல் இன்றி விரிக்கப்பட்டு, மெத்தை ஏற்றத்தாழ்வுகள் இன்றி சரிசெய்யப்பட்டு, தலையணை சரியாக வைத்திருக்க வேண்டும். இராணுவ மேலதிகாரி படுக்கையை மேற்பார்வைஇட்டு, ஒரு நாணயத்தினைப் படுக்கையின் மீது சுண்டினால்,  அந்த நாணயம் துள்ளிக்குதித்து, கையில் வரவேண்டும். படுக்கை சரியாக இல்லாவிட்டால், தண்டனை உண்டு. இவ்வாறு, நாளின் முதல் வேலையைக் கச்சிதமாக சின்னஞ்சிறிய விஷயங்களையும்கூடக் கவனித்து செய்து முடிக்கும்போது, அது தன்னம்பிக்கையைத் தூண்டுகிறது. எந்த ஒரு வேலையையும் கச்சிதமாக முடிக்கும் பழக்கத்தை வளர்க்கிறது. ஒருவேளைநாள் கடினமாக இருந்தால்கூட, இரவு படுக்கும்போது, கச்சிதமாக உள்ள படுக்கை, அடுத்தநாளைக் குறித்த நம்பிக்கையை வளர்க்கிறது.
  • வாழ்க்கையில் உங்களால் தனியாகப் பயணிக்க முடியாது. நீங்கள் துடுப்பு போட உதவும் நபரைக் கண்டுபிடியுங்கள்; இராணுவப் பயிற்சியில், படகில் குழுவாகப் பயணிக்கும்போது, ஒருவர் மட்டும் துடுப்புப் போட்டால், படகு பயங்கர அலைகளில் கவிழ்ந்துவிடலாம். குழுவின் மற்ற அங்கத்தினர்களும், மற்றவரது துடுப்பு இயக்கத்திற்கு ஏற்ப, தங்களது துடுப்பினை இயக்கவேண்டும்.  ஒருவருக்கு உடல் நலமில்லாவிட்டால், மற்றவர்கள் இன்னும் வேகமாகத் துடுப்பு போடுவார்கள். இவ்வாறு,  ஒரு மாற்றத்தை உருவாக்க விரும்பினால், அந்த மாற்றத்தை உருவாக்க, உங்களுக்கு உதவும் நபர்களைத் துணையாக்கிக்கொள்ளுங்கள். மேலும், உங்களால் கடினமாக காலங்களை, அவர்களின் துணையுடன் கடக்கமுடியும்.
  • தயத்தின் அளவுதான் முக்கியம். ஒரு மனிதனை அவனது இதயத்தின் அளவின்படி மதிப்பிடுங்கள்; குள்ளமாக, ஒல்லியாக உள்ள பல இராணுவ வீரர்கள்,  பெரிய அளவில் பணியாற்றி, விருதுகள் பெற்றுள்ளனர். இதற்குக் காரணம்,  அவர்கள் இதயத்தைப் பலமாக வைத்திருந்ததுதான். இவ்வாறே, ஒரு மனிதனின் இதயத்தின் அளவுதான் முக்கியம். அவன் எந்தநாடு, எந்த இனம், எந்த ஊர், கருப்பா, சிவப்பா, ஒல்லியா, குண்டா, குள்ளமா, நெட்டையா என்பதெல்லாம் முக்கியமல்ல. அவனது இதயத்தின் பலமே அவனது வெற்றியை நிர்ணயிக்கிறது.
  • வாழ்க்கை நியாயமானது அல்ல. கடந்துசெல்லுங்கள். இராணுவப் பயிற்சியில், ஒருவர் எவ்வளவு சரியாக இருந்தாலும், சில சமயங்களில், காரணமே இன்றி, அவர்கள் சர்க்கரை மிட்டாய் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். சர்க்கரை மிட்டாய் தண்டனை என்பது, இராணுவ உடையில், உடல் முழுவதும் அங்குலம், அங்குலமாக மண்படுமாறு கடற்கரை மணலில் புரள வேண்டும். இவ்வாறு காரணமே இல்லாமல், தண்டனைக்கு உள்ளாவது, மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால், தண்டனையை ஏற்றுக்கொண்டு, அடுத்த வேலையைப் பார்க்கச் செல்லவேண்டும். இவ்வாறே, வாழ்க்கையில் சில சமயங்களில், காரணமே இல்லாமல், நாம் பாதிக்கப்படலாம். அதனை ஏற்றுக்கொண்டு, அடுத்தக் காரியத்தை நோக்கிச் செல்லவேண்டும்.
  • தோல்விகள் உங்களைப் பலசாலியாக மாற்றலாம். இராணுவப் பயிற்சியில், சரியாகப் பயிற்சியை நேரத்தில் முடிக்காவிட்டால், தினமும் சாயந்திரம் நடக்கும் சர்க்கஸ்கூடாரத்தில், பல்வேறு கடினப் பயிற்சி களுக்கு உள்ளாக்கப்படுவார்கள். உதாரணமாக, நீச்சல்செய்து, ஆற்றினைக் கடக்க நேரமானால், சாயந்திரம் சர்க்கஸில் பல்வேறு கடின கால்பயிற்சிகளுக்கு உள்ளாக நேரிடும். ஆனால், அந்தக் கால் பயிற்சிகள் காலை பலமாக்கி, நீச்சலை இன்னும் எளிதாக்கும். இவ்வாறு, வாழ்க்கையில் தோல்விகளால் நாம் துன்புறநேர்ந்தால், அதனைக்கண்டு, துவளாமல், அதனை ஏற்றுக்கொள்வதன்மூலம், நாம் இன்னும் அதிகமனதைரியத்தோடு, சிக்கல்களை எதிர்கொள்வோம்.
  • மிகவும் துணிச்சலாக இருக்கவேண்டும். தடையிலிருந்து தலை முன்னோக்கிப் பயணிக்க வேண்டும்; இராணுவப் பயிற்சியில், மூன்றாவது மாடியிலிருந்து, முதலாவது மாடிக்குக் கயிறு கட்டப்பட்டு இருக்கும். அதில் குறிப்பிட்டக் காலத்திற்குள் இறங்கவேண்டும். தலை முன்னோக்கி வைத்தால் மட்டுமே வேகமாக இறங்கமுடியும். அதற்கு அதிக துணிச்சல் வேண்டும். இவ்வாறு, வாழ்க்கையில் தடைகளைக் கண்டுஅஞ்சாமல், துணிச்சலாகச் செயல்பட்டால் மட்டுமே, தடைகளை வெற்றிக்கொள்ள முடியும்.
  • யமுறுத்துபவர்களை எதிர்த்து தைரியமாக நிற்கவேண்டும். இராணுவப்பயிற்சியில், சுறாக்கள் நிறைந்த கடலில் நீச்சல் செய்து இலக்கை அடைய வேண்டும். சுறாமீன் ஒரு வேளை எதிர்த்தால், பலம்கொண்ட மட்டும்,  கையை முஷ்டியாக்கி, முகத்தில் குத்தவேண்டும். சுறா திரும்பிவிடும். இவ்வாறு,  வாழ்க்கையில் எவரேனும் பயமுறுத்தினால், பயந்து திரும்பாமல், அவர்களை நேருக்கு நேராகச் சந்தித்து, அவர்களை வெல்லவேண்டும்.
  • டினமான நேரங்களில், துவளாமல், வீறுகொண்டு எழ வேண்டும்; இராணுவப் பயிற்சியில், இரவில், கடலுக்கு அடியில் நீச்சலடித்து, பெரிய கப்பலுக்கு அடியில் உள்ள பொருளை எடுத்து வரவேண்டும். கும்மிருட்டு, கடல் பாசிகள், கடுமையான குளிர்ந்தநீர் போன்ற மிகவும் கடினமான நேரத்தில், ஒரே ஒருடார்ச் விளக்கு மட்டும் கொண்டு, மங்கிய வெளிச்சத்தில், கடலின் அடியில் நீச்சலடித்து, இலக்கை அடைய வேண்டும். அந்தக் கடினமான நேரத்தில், நமது திறமைகளின் உச்சக்கட்ட வெளிப்பாட்டினைச் செய்யவேண்டும். இவ்வாறே, வாழ்க்கையின் கடினமான காலங்களில், நமது மிகவும் சிறப்பான பங்களிப்பைக் காட்டி, அந்தக் கடினமாக காலத்தினைக் கடந்து, வாழ்க்கையில் வெற்றி அடையவேண்டும்.
  • ராணுவப் பயிற்சியில், கடினமான சேற்றில் நீந்தி, இலக்கினை அடைய வேண்டும். சேற்றில் நீந்துவது கடினம். அந்தக் கடினமாக சூழ்நிலை யினைச் சமாளிக்க, ஒருவன் பாட்டுப் பாடத் துவங்கினால், அது மற்றவர்களுக்கும் பரவி, எல்லாரும் பாட்டுப்பாடி, இலக்கினை அடைவது எளிதாகும். இவ்வாறு, கடினமான சூழ்நிலையில் ஒருவன் பாட்டுப் பாடுவதைப்போல், நம்பிக்கையை நீங்கள் மற்றவர்களுக்கு உண்டாக்குங்கள். உங்களது நம்பிக்கை மற்றவர்களுக்கும் பரவி, மாற்றத்தை உருவாக்கும்.
  • ருபோதும், முயற்சியைக் கைவிடாதீர்கள். இராணுவப் பயிற்சியின் போது, கடினமான பயிற்சியிலிருந்து விடுதலை பெறநினைத்தால், இராணுவப்பயிற்சி கல்லூரியில் நடுவில் இருக்கும் மணியை மூன்று முறை அடித்தால், இராணுவப்பயிற்சியைக் கைவிட்டு வீட்டிற்குச் சென்று விடலாம்.ஆனால், அவ்வாறு கைவிடுவது, வாழ்நாள் முழுவதும் காயத்தை உண்டாக்கும். ஒருபோதும், மணி அடிக்கக்கூடாது. இவ்வாறே, வாழ்க்கையில் பல்வேறு கடினமான செயல்கள் செய்ய வேண்டி யிருந்தால், அதனைச் செய்யவேண்டும். அந்தக் கடினமான செயலைக் கைவிடக்கூடாது.

முடிந்தால், இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். இவற்றை நீங்கள் கடைப்பிடித்தால், நீங்கள் உங்கள் வாழ்வில் மட்டுமல்ல, உலகத்திலும் மாற்றங்களை உருவாக்கலாம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com