
-மாலதி சுந்தரராஜன்
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா, கேட்கும் ஒலியெல்லாம் நந்தலாலா என்று எங்கும் நந்தலாலாவைக் கண்ட மகாகவிபோல் கேரளாவில் ஓணம் சமயத்தில் நாம் எங்கும் ஆனந்த ராகத்தைக் கேட்கலாம், கண்ணுக்கு விருந்தாக பல கலை நிகழ்ச்சிகளைக் காணலாம். சுருக்கமாக, ஐம்புலன்களுக்கும் விருந்தாக அமையும் பண்டிகை ஓணம்!
பாரம்பரியமும் கலாசாரமும் மிக்க பண்டிகையாகக் கடவுளின் சொந்த நாடான கேரளாவில் கொண்டாடப்படுகிறது. விழா என்றே கூறலாம். அத்தனை மகிமையும் சிறப்பும் பெற்ற பண்டிகை. அசுர குலசக்கிரவர்த்தி மகாபலி தன்நாட்டு மக்களைக் காணவரும் நன்னாள் ஓணப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது ஓணம் பண்டிகை. இதன் பின்னணி சுருக்கமாகப் பார்ப்போம்.
மகாபலி சக்ரவர்த்தி கேரளத்தை ஆண்டு வந்த மன்னன். அசுர குல மன்னன் என்றாலும் நல்லமுறையில் நாட்டை ஆண்டுவந்தான். தானம், தர்மம், செய்வதில் வல்லவன். அசுர வம்சத்திலேயே மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட அரசன். ஆனால், மமதைகொண்டவன். தன்னை வெல்ல யாருமில்லை என்ற ஆணவத்துடன் ஒரு சமயம் மூவுலகையும் ஆளுவதற்காக யாகம் ஓன்று நடத்தினான். இந்த யாகம் நடத்தினால் அசுரர் பலம் ஓங்கிவிடும் என்று தேவர்கள் பயந்து. மகாவிஷ்ணுவின் உதவியை நாடினர். மகாபலியின் கர்வத்தை அடக்க, பகவான் வாமனனாக குள்ள வடிவம் எடுத்தார். இதனால்தானோ என்னவோ, இன்றும், 'கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே' என்ற சொல் நிலவுகிறது!
தானம் பெறுவதற்குச் சென்றார் பகவான். ஒரு கையில் தாழம்பூ குடையுடனும் மற்றொரு கையில் கமண்டலத்துடனும் யாகத்திற்குச் சென்ற வாமன பகவான் மகாபலியிடம் மூன்றடி நிலத்தைத் தானமாகக் கேட்டார். குரு சுக்கிராச்சாரியாரின் எச்சரிக்கையையும் மீறி, தானம் தர இசைந்தான் மகாபலி. வந்திருப்பது மகாவிஷ்ணு என்று அறிந்ததும் அதிர்ச்சி அடையவில்லை. மாறாக மகிழ்ச்சி அடைந்தான்! தெய்வமே இறங்கி வந்து யாசகம் கேட்பது தனக்குப் பெருமை என்று கருதினான்! திருவிக்கிரமனாக, உலகளந்த பெருமாளாகவானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார் விஷ்ணு பகவான்! தன் முதல் அடியால் பூமியை அளந்தார்; அடுத்த அடியால் வானத்தை அளந்தார்! மூன்றாவது அடியை எங்கு வைக்க என்று கேட்க, தன் தலையைக் காண்பித்து வணங்கி நின்றான் மகாபலி! அவன் செருக்கும் ஆணவமும் பகவான் முன் மண்டியிட்டுக் கிடந்தன. தன் மக்கள் மீது மிகவும் பிரியம் வைத்திருந்த மகாபலி அப்போது வரமொன்று வேண்டினான். ஆண்டுதோறும் அவர்களைக் காண பூலோகம் வர அருள வேண்டுமென்று கோரினான். அவனது நியாயமான வேண்டுகோளை நிறைவேற்றி அருள்புரிந்தார் மகாவிஷ்ணு. இந்த நம்பிக்கையின் பேரில் கேரள மக்கள் மன்னன் மகாபலியை வரவேற்கும் நாளை திருவோணத் திருநாளாகக் கொண்டாடுகின்றனர்!
எல்லோரும் மிக விரும்பிக் கொண்டாடும் வைபவம் ஓணம். அதை பொன் ஓணம் என்றே கூறி மகிழ்வர்! மழைக்காலம் முடிந்து எங்கும் பசுமை மனதைத் தாலாட்ட, அதைக் கண்டு மகிழ்ந்து வருகிறார் மகாபலி சக்கிரவர்த்தி! சாதி, மதம், மொழி, ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் கொண்டாடப்படும் திருவிழா ஓணம் என்று கூறலாம் ஆவணி முதல் நாள் மலையாள ஆண்டின் முதல் நாளாகும் அதை சிங்கம் ஒண்ணு என்று சிறப்பாகக் கொண்டாடுவர். பின் ஹஸ்தம் நட்சத்திரம் முதல் திருவோணம் வரை பத்து நாட்கள் ஓணம் பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
இப்பண்டிகையின் சிறப்பு அம்சம் அத்தப்பூ எனப்படும் பூக்கோலம் ஆகும். இதற்கு பூக்களம் என்று பெயர். ஹஸ்தம் என்பதை அவர்கள் அத்தம் என்று கூறுவதால், அத்தப்பூ என்ற பெயர் வந்தது. மகாபலியை வரவேற்கும் விதத்தில் பத்து நாட்களும், விதவிதமாகப் பல வண்ணப் பூக்களால், கண்களைக் கவரும் வகையில் வீடுகள், அலுவலகங்கள், கடைகள் முன்பு, கோயில்களின் முன்பு என்று எங்கும் அழகினைத் தரும் இப்பூக்கோலங்களைக் கண்டு; ரசிக்கலாம்!
பூக்களப் போட்டிகளும் நடைபெறும்! ஆண் பெண் இருபாலரும் மிகுந்த உற்சாகத்துடன் இதில் கலந்துகொள்வர்! வண்ணப் பூக்களால் புராண சித்திரக் கதைகளை வடிவமைப்பதில் திறமை கொண்டவர் கேரள மக்கள்! குருவாயூர் கோயில் முன் பெரிய அளவில் மகாபலிக்கு பகவான் வரம் கொடுக்கும் நிகழ்ச்சி மிகத் தத்ரூபமாக பூக்களால் வரையப்பட்டிருக்கும்!.
வைபவத்திற்கு மேலும் அழகு சேர்ப்பது பாட்டும், நடனமும். ஓணமும் இதற்கு விதி விலக்கல்ல! பெண்கள், கசவுமுண்டு என்ற வெண்ணிற ஆடை அணிந்து, தலை நிறைய பூவைத்து, மகாபலியை வரவேற்கும் பாடல்கள் பாடி, திருவாதிரக்களி, கைகொட்டுக் களி என்ற நடனங்களைச் சுற்றிச்சுற்றி வந்து ஆடுவர். களி என்றால் நடனம் என்று பொருள். பார்க்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்! இது தவிர, பாரம்பரிய விளையாட்டுக்களான கயிறு இழுத்தல், களறி, படகு போட்டிகள் நடைபெறும். படகுகள் செலுத்தும்போது, ஒரே ராகத்தில், ஒரே தாளத்தில் பாடும் வஞ்சிப்பாட்டுக்கள் மிகப்பிரசித்தி பெற்றவை.
தத்தத்தை, தத்தத்தை… திகுதிகுதிகுதிகு… தத்தத்தை… என்று மனதை வருடும் பாடல்கள் கேட்டு நம் கைகளும் தாளம்போடும்! கோரஸாகப்பாடி படகைச் செலுத்துவது கண்கொள்ளாக்காட்சி!
அடுத்தது மிக முக்கியமாகக் கருதப்படுவது ஓணம் விருந்து! இதற்கு ஓணசத்திய என்று பெயர். திருவோணத்தன்று மதிய உணவிற்குக் குறைந்தபட்சம் 30 உணவு வகைகள் காணப்படும்! சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிவது போல் எட்டு வகை பாயசத்துடன், இனிப்பு வகைகளும் சேர்ந்து பரிமாறப்படும்! எல்லாச் சுவைகளிலும் உணவு வகைகள் இலையில் நிறைத்திருக்கும்; மனதை மகிழ்ச்சி நிறைத்திருக்கும்! பாரம்பரிய உணவு வகைகள், மிகுந்த ருசியுடன் சமைத்து, உற்றார் உறவினருடன் சேர்ந்து உண்பர்! கானம் விற்று ஓணம் உண்ணு' என்பது பழமொழி! அதாவது காணி நிலம் கையில் இருந்தால் கூட, அதை விற்றாவது ஓணம் விருந்து படைக்க வேண்டும் என்று நினைப்பவர் கேரள மக்கள்!
கோயில்களிலும் சிறப்பான அலங்காரங்கள் காணப்படும். எங்கும் இசை நிகழ்ச்சிகள், ஆடித் தள்ளுபடி போல் ஓணத் தள்ளுபடி பொருட்கள், பொருட்காட்சிகள் என்று நகரமே ஜே ஜே என்று இருக்கும்! கடந்த இரண்டு வருடங்கள் கொரானாவின் தாக்கத்தினால் சில கட்டுப்பாடுகள் இருந்தாலும், மக்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு இப்பண்டிகையைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
இவ்வாறு, மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்படும் பண்டிகை ஓணத் திருவிழா! கேரளத்தில் மட்டுமல்லாது, இதர மாநிலங்களிலும் அயல் நாடுகளிலும் சாதி மத வித்தியாசமின்றி ஒற்றுமையாகக் கூடி மகிழ்ந்து கொண்டாடுகின்றனர். மகாபலிக்கு பிரியா விடை கொடுத்து, அடுத்த ஆண்டும் இனமுகத்துடன் வரவேற்க ஆயத்தமாகின்றனர் கேரளா வாழ் மக்கள்! அவர்களுடன் நாமும் சேர்ந்து, கைகோர்த்து, மகாகவிபாரதியுடன் உன்னத பாரதநாடு எங்கள் நாடே, ஓதுவோம் இதை எமக்கில்லை ஈடே என்று பாடி,ஒற்றுமையுடன் உற்சாக வரவேற்பை நல்குவோம்! வாழ்க ஓணத் திருநாள். வளர்க பாரம்பரியம்!
*****************************
சிநேகிதி விஜயலெக்ஷ்மி கூறியபடி…
தேவை: சலித்த ஈர அரிசி மாவு – 3 கப், ஃப்ரெஷ் தேங்காய்ப் பூ – 2 கப், உப்பு, தண்ணீர் – தேவையானது, ஏலப்பொடி – 1 டீஸ்பூன்
செய்முறை: வாயகன்ற பாத்திரமொன்றில் அரிசி மாவு, உப்பு, தண்ணீர் ஆகியவைகளைப் போட்டு நன்கு பிசைந்து கொள்ளவும். தேங்காய்ப் பூவுடன் ஏலப்பொடியை மிக்ஸ் செய்யவும்.
புட்டுக் குழலிற்குள் லேசா நெய் தடவி முதலில் கொஞ்சம் தேங்காய்ப் பூ போட்டு, கொஞ்சம் பிசைந்து வைத்திருக்கும் மாவைப் போடவும். இதுபோல் அடுக்கடுக்காக குழலின் முக்கால் பாகம் வரை போட்டு மூடி ஆவியில் வேகவைத்து வெளியே எடுக்கவும். தேங்காய் சேர்த்த வெந்த மாவு கமகமவென மணக்கும். இப்போது புட்டு ரெடி.
தேவை: ப்ரெளன் அல்லது கறுப்பு நிறக் கொண்டைக்கடலை (சிறிது) – ½ கிலோ, ஃப்ரெஷ் தேங்காய்ப் பூ – 3 கப், தேங்காய் எண்ணெய் – 100 மி.லி., சின்ன வெங்காயம் (உரித்தது) – 10, மஞ்சள் பொடி – ¼ டீஸ்பூன், மிளகாய்த் தூள் – ½ டீஸ்பூன், கரம் மசாலா – 1 டீஸ்பூன், சிகப்பு மிளகாய் வற்றல் – 5, கடுகு/சீரகம் – ½ டீஸ்பூன், உப்பு, தண்ணீர் – தேவைக்கேற்ப, கறிவேப்பிலை – கொஞ்சம்.
செய்முறை: கொண்டைக் கடலையை சுமார் 2 மணி நேரம் ஊற வைத்து அலம்பி, மஞ்சள்பொடி, சிறிது உப்பு சேர்த்து குக்கரில் மலர வேக வைத்தெடுக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், தேங்காய்ப் பூவை பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். பின்னர் அதே எண்ணெயில் மிளகாய் வற்றல், கறிவேப்பிலை வறுத்து தேங்காயுடன் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
மீண்டும் சிறிது எண்ணெய் விட்டு சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி எடுக்கவும். கடுகு, சீரகம், தாளிதம் செய்து, அதில் அரைத்த விழுது, வதக்கிய வெங்காயம் மிளகாய்த்தூள், கரம் மசாலா போட்டு, தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். பின்னர் வெந்த கொண்டைக்கடலையை சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து, தேவையான உப்பு மற்றும் கொத்துமல்லி இலை மிக்ஸ் பண்ணி இறக்கி, தேங்காய்ப்புட்டுடன் சாப்பிட சுவையோ சுவை!
– ஆர். மீனலதா, மும்பை