
-சேலம் சுபா
செல்வம் மிகுந்த பிறந்த வீட்டில் ஒரே செல்லப்பெண். புகுந்த வீடும் வசதியானது. இடையில் விதியின் சதியால் பொருளாதாரம் இழந்து திசை மாறிய வாழ்க்கை. வெளியுலகம் அறியாத. பள்ளி இறுதிவரை மட்டுமே படித்திருந்த ஒரு பெண்ணால் என்ன செய்ய முடியும்? சாதாரணப் பெண் என்றால் தன் விதியை நினைத்து கிடைத்த வேலைக்குச் சென்று முடங்கிப்போயிருப்பாள். ஆனால், சேலம் பொன்னம்மாப்பேட்டையைச் சேர்ந்த ரேகா ரவிக்குமார் முடங்கவில்லை. முயற்சி செய்தார். தடைபட்ட விரும்பிய கல்வியைப் பயின்று குடும்பத்தைத் தாங்கினார். இன்று பல இல்லத்தரசிகளுக்குப் பணி வாய்ப்பைத் தரும் அளவிற்கு உயர்ந்துள்ளார். யார் இந்த ரேகா ரவிக்குமார்? அவரின் நிறுவனம் என்ன? அவர் சந்தித்த அனுபவங்கள் மற்றும் வெற்றி பற்றி நம்முடன் பகிர்ந்து கொண்டவை இதோ:
"என் சொந்த ஊரே சேலம்தான். என் பெற்றோரான செல்வம் – ராணிக்கு ஒரேமகள் நான் என்பதால் செல்லத்துக்கு எல்லாம் குறைவில்லை. ஆனால் பிளஸ் டூ முடித்து கல்லூரியில் சேர்ந்த ஒரே மாதத்தில் திருமணம். கணவர் ரவிக்குமார். புகுந்த வீடும் நல்ல வசதியுடன் கூட்டுக் குடும்பம். பிறந்த வீட்டிலும் சரி புகுந்த வீட்டிலும் சரி வசதிகளுக்கு எந்தக் குறையும் இல்லை என்பதால் வசதிகளற்ற வாழ்வின் மறுபக்கம் எனக்கு தெரிந்ததில்லை.
திருமணமாகி ஐந்தாம் வருடம் குடும்பத்தின் ஆணிவேரான மாமனாரின் திடீர் இறப்புக்குப் பின் எங்கள் நகைத் தொழில் பாதிக்கப்பட்டது. நாங்கள் சுதாரிக்கும் முன்னே அனைத்தும் எங்களை விட்டுச் சென்றன. அதே நேரம் என் தந்தையின் தொழிலும் நட்டத்தில் சென்று மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்தோம். அந்த உண்மை எனக்குப் புரியவே வெகு நாட்களாயிற்று. பொருள் இழப்புத் தந்த வலியை விட கொடியது மற்றவரின் உண்மை முகங்களைக் காண்பது. நம் வாழ்வில் உயரத்தில் உள்ள போது ஒட்டி உறவாடுபவர்களின் உண்மை முகத்தை நாம் வீழும் போது மட்டுமே காண முடியும். அதை நானும் பார்த்தேன். ஓ நாம் நினைக்கும் உலகம் வேறு வாழும் உலகம் வேறு என்பதை சில வேதனை தரும் நிகழ்வுகள் எனக்குப் புரிய வைத்தன.
அப்போதே பெரியவள் ரோஷிணியும் சின்னவள் பவித்ராவும் பிறந்து வளர்ந்து விட்டனர். ஒரு கட்டத்தில் இப்படியே இருந்தால் எதிர்காலம் என்ன ஆவது எனும் சிந்தனை எழுந்தது. எனக்கான பாதையைத் தீர்மானிக்கும் காலமும் பொறுப்பும் வந்தது. செல்வம் இருந்தபோது கணவருடன் அனுபவித்த வாழ்வை, அது இல்லாதபோது இருவரும் கை சேர்த்துகொண்டு செல்வதுதானே வாழ்க்கை என உணர்ந்தேன்.
உடன் விளையாட யாருமில்லாததால் சிறு வயதிலிருந்தே ஆசிரியப்பணி மீது எனக்கு ஆர்வம் அதிகம். வீட்டில் யாருமில்லாத நேரங்களில் சேலையைச் சுற்றிக்கொண்டு எதிரில் இல்லாத குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தருவது என் பால்யத்தின் பொழுதுபோக்கு. கல்வியின் மீதான என் ஆர்வத்தை மீண்டும் உள்ளிருந்து பெருகச் செய்தேன். என் கவலைகளின் போது நான் தேடியது புத்தகங்களைத்தான். பொதுவாகவே வீண் அரட்டையிலும் தொலைகாட்சியிலும் நான் நேரங்களைத் தொலைக்க விரும்புவதில்லை. வாசிப்பு மட்டுமே என் பொழுதுபோக்காக இருந்தது. தினம் பத்துப் பக்கங்களாவது படித்தால் மட்டுமே என் நாட்கள் நகரும் என்பதால் சோதனையான காலங்களில் நான் பற்றிக் கொண்டது படிப்பு எனும் அஸ்த்திரத்தைத்தான்.
என் பெண்களுக்கு சொல்லித் தரும் நேரங்களில் நானும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி. எஸ் ஸி சைக்காலஜியைப் படித்து தேறினேன். நான் பணிக்குச் செல்ல முடிவெடுத்த போது என் பெரிய மகள் பள்ளி இறுதி முடித்திருந்தாள், என் கணவரும் திருப்பூரில் உள்ள நண்பரின் கம்பெனியில் பணியில் சேர்ந்தார்.
பெண்ணின் எல்லை வீடு வரை மட்டுமே என்று நினைத்த குடும்பத்தி லிருந்து வந்தவள்தான். வேலைக்குசெல்லஎங்கும்அனுமதியில்லை. ஆனால் எங்கள் எதிர்காலம்?
என் படிப்புச் சான்றிதழுடன் சேலத்தின் பிரபலப் பள்ளியான வித்யாப் பீடத்தில் நேர்காணலுக்குச் சென்றேன். அங்கு ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். என் வித்யாசமான டீச்சிங் அவர்களைக் கவர்ந்து. அங்கிருந்து எனக்கான பாதை துவங்கியது எனலாம் .அங்கு நானே விரும்பி கே ஜி குழந்தைகளுக்கு ஆசிரியையாக பொறுப்பேற்றேன். காரணம் நம் மனக்கவலைகளை அவர்களின் புன்னகைகளே மறக்கடிக்க முடியும் என்பதே அங்கு இருந்த பத்து வருடங்கள் எனக்குப் பொற்காலம் என்பேன். வருமானம் எங்கள் அன்றாட வாழ்விற்குப் பயன்பட்டது எனினும் தினம் தினம் புதிது புதிதாகக் கற்றுக்கொள்ள ஏராளமான விஹயங்கள் இருந்தது. பள்ளியின் இன்சார்ஜ் ஆகவும் கவுன்சிலராகவும் பொறுப்புகளைப் பெற்றேன்.
அங்கிருந்த போதே பள்ளி ஆலோசகராக பணிபுரிய பெற்றோர் மற்றும் குழந்தைகள் நல ஆலோசகருக்கான சான்றிதழ் படிப்பையும் முடித்தேன் . அதன் பயனாக இரண்டு வருடங்கள் ஒரு பள்ளியின் குழந்தைகளுக்கான ஆலோசகராகவும் பணியில் இருந்தது மறக்கமுடியாத அனுபவம்.
சற்று ஓய்வு எடுத்து நலம் பெற்றபின் என்னால் என் பொழுதுகளை வீணாக்க முடியவில்லை. வீட்டிலிருந்தே குழந்தைகளுக்கான பாடங்கள் மற்றும் மனநலம் குறித்த ஆலோசகராக பணிபுரிய எண்ணினேன. அதே சமயம் என் அனுபவத்தின் சாரங்களைத் தொகுத்து ஒரு நிறுவனத்தைத் துவங்கி எனக்கான அடையாளத்தை உருவாக்கவும் ஆர்வத்துடன் இருந்தேன். இதற்கான ஊக்கத்தை நான் அடைய காரணம் என் மகள்களும் நான் பணியில் இருந்த பள்ளிகளின் தாளாளர்களான திருமதி. உமா சீனிவாசனும் அர்ச்சனா சுகுமாரும்தான். என் திறமைகளை அவர்களே அடிக்கடி சுட்டிக்காட்டி எண்ணத்துக்கு வலிமை சேர்த்தனர். கணவரும் நானும் இணைந்து தற்போது என் நிறுவனத்தின் பணிகளைக் கவனித்து வருகிறோம்.
இதில் துவங்கியதுதான் ஈ ஸ்மார்ட் (E- SMART) எனும் கல்வி நிறுவனம் இணையதளம் மூலமாக அனைத்து வயதினருக்கும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு பல விதங்களில் கற்றுத்தந்தும் ஆலோசனைகள் தந்தும் என்நேரங்களை பயனுள்ளதாக ஆக்கிவருகிறேன். . ஆனால் இது அவ்வளவு எளிதாக நடந்துவிட வில்லை. இரண்டு வருடங்கள் வெறுமனே சோசியல் மீடியாவில் எனது நிறுவனம் குறித்த செய்திகளை விடாமல் வெளியிட்டேன். அதன் பின் அதைப் பார்த்து துபாயிலிருந்து என் முதல் மாணவி கிடைத்தாள். அதன் பின் வந்த கொரானா காலத்தில் வீட்டில் இருந்து படிக்கவேண்டிய கட்டாயம் என்பதால் எங்கள் நிறுவனத்தின் தேவை அதிகமாகி நற்பெயருடன் வெற்றிகரமாக நடந்து வருகிறது இன்றும். என்னிடம் பணிபுரியும் பெண்களின் திறமையான அணுகுமுறையும் எங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கு ஒரு காரணம் " நிறுத்தி பின் பேசினார் ரேகா.
"எவ்வளவு வேதனைகள் இருந்தாலும் என் மகள்களுக்கு நல்ல கல்வியையும் எந்த சூழலிலும் வாழ்வை எதிர் கொள்ளக்கூடிய துணிவையும் அவர்களின் திறமைகளை உற்சாகப்படுத்தியும் வந்தேன். நான் போட்ட விதைக்கு பலன் இருந்தது. அவர்கள் இருவருமே கல்லூரிகளில் ஆல்ரவுண்டர் மாணவிகள் எனும் பெருமையுடன் பேசப்பட்டனர். தற்சமயம் இருவருக்கும் திருமணமாகி வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.
எனக்கு சிறந்த ஆசிரியை மற்றும் சிறந்த ஆலோசகர் விருதும் . தமிழ்நாடு அளவில் நடந்த மகளிர் தின விழாவில் வுமன் வாரியர் ( Woman Warrior) எனும் அவார்டும், வீட்டிலிருந்து கற்றுத்தரும் சிறந்த ஆன்லைன் நிறுவனமாக எனது நிறுவனத்துக்கு அவார்டும் கிடைத்துள்ளது. ஆனால் இதற்குப் பின் உள்ள உழைப்பும் முயற்சியும் முக்கியமாக கல்வியின் மீது எனக்கிருந்த ஆர்வமும் என் பலம் என்று நினைக்கிறேன். மேலும் என்னை ஊக்கப்படுத்தி என் வெற்றியைக் கொண்டாடிய நட்புகளும் எனக்கான எனர்ஜி.
வாழ்வில் எல்லா நேரங்களும் நமக்கு சாதகமாக இருக்காது. பாதகமான காலங்களில் நமக்கான மாற்றுப்பாதை தயாராக உள்ளது என்பதை அறிந்து கொண்டு ஒவ்வொரு பெண்ணும் மனவலிமையுடன் முயற்சித்தால் வெற்றி நிச்சயம். முக்கியமாக குடும்பத்தினரின் ஆதரவு அவசியம் தேவை. என் வெற்றிகளுக்கு அடிப்படையும் எனது குடும்பமே.
விநாயகர் சதுர்த்தி அன்று தனது ஐம்பதாவது வயதை எட்டும் ரேகா சிறப்புக் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஆலோசனைகளை இலவசமாக வழங்கி சேவைகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. வெளியில் சென்று பணிசெய்ய முடியாத சூழலில் இவரிடம் வரும் திறமையான பெண்களுக்கு அவர்களுக்குத் தகுந்த பயிற்சியை அளித்து வேலை வாய்ப்பையும் வழங்கிவருகிறார்.
மேலும் மேலும் கல்வியில் கவனத்தை செலுத்தி வருவதும் இவரின் சிறப்பு வீட்டை விட்டு வெளியே வராத ஒரு பெண் நினைத்தால் சாதிக்கலாம் என்பதை கல்வியின் மூலம் நிரூபித்து மற்ற பெண்களுக்கு முன் உதாரணமாக திகழும் ரேகா ரவிக்குமார் பாராட்டுக்குரியவர்.