
புதுசா கல்யாணமாகி, புகுந்தவீடு வரும் பெண்ணுக்கு நிச்சயம் பற்பல சங்கடங்கள் உண்டுதான்! 'இட்லிக்குத் தொட்டுக்க என்ன?" என்பதிலிருந்து 'குல தெய்வத்துக்கு என்ன படையல்?' வரை எல்லாமே மாறுபடும். ஆனால், அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.
ஆனால், தங்கள் பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டுல கடுகளவுப் பிரச்னைன்னா கூட 'தாம்தூம்'னு பெண் வீட்டார் குதிப்பதும், கல்யாணமாகி இரண்டு வருஷம் ஆச்சு! நம்ப வீட்டுக் காரியம் எதுவும் இன்னும் பழகல!"ன்னு மாமியார் மருதுவதும் வீட்டுக்கு வீடு வாசல்படி!
இதுக்கெல்லாம் நல்ல தீர்வு கிடைக்குமோங்குற ஆர்வத்துல ஆரம்பிக்கப்பட்டதுதான் மத்தியப் பிரதேசம், போபாலில் உள்ள 'Manju Samaskar Kendra'
இங்க கல்யாண வயசுல இருக்குற பொண்ணுங்களுக்கு மூணு மாச கோச்சிங் கிளாஸ் நடத்தறாங்க. புகுந்த வீட்டு மனுஷாளோட அனுசரனையா, அன்பா பழகி, 'நல்ல மனைவி'ன்னு பேர் வாங்குறது எப்படின்னு சொல்லித் தர்றாங்களாம்!
1987ல இருந்து இந்த 'நல்ல பெண்மணி' பயிற்சிப் பள்ளியை ஆரம்பிச்சு நடத்தி வரும் ஹேம்னானி என்ன சொல்றார்னா…
"ஒரு பெண், தனது வீட்டுக் கடமைகளைத் திறம்பட செய்ய மறுப்பதால், பல குடும்பங்களில் பிளவு, விவாகரத்துன்னு பிரச்னை ஆயிடுது. நம்ப இந்தியாவின் பாரம்பரிய குடும்ப அமைப்பு சீர் கெட்டுப் போகுது! அதனால, குடும்ப உறவுகள் நிலைக்க என்ன செய்யணும்னு போதிக்கிறோம்…
இதுல வெறும் வீட்டு வேலைகள் மட்டும் சொல்லித் தராமல், சமய நூல்கள், வழிபாடு, இயற்கை வைத்தியம், ரொமான்ஸ் ரகசியங்கள், நிர்வாகம் என எல்லாமே சொல்லித் தந்து அவர்களை 'சூப்பர் மனைவிகள் ஆக்குகிறோம்!' என்கிறார்.
"என்னய்யா சொல்றீங்க? அப்ப குடும்பங்கள் உடையவும், விவாகரத்துகள் அதிகரிக்கவும் பெண்கள்தான் கரணமா? இந்த ஆண்கள் எல்லாம் தேவர்களா? தெய்வங்களா? இதெல்லாம் பெண்களின் அடிமைத்தனத்தை வளர்க்கிறதா இருக்கு!"ன்னு பலர் எதிர்த்து வந்தாலும் 'மஞ்சு கேந்தரா' வெற்றிநடை போட்டுக்கிட்டுதான் இருக்காம்!
இதுவரைக்கும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவங்க இங்க படிச்சு 'நல்ல பெண்மணி' பட்டம் வாங்கிட்டுப் போய், மாமியார் வீட்டுல அன்பா, அடக்கமா, குடும்பக் குத்துவிளக்கா இருக்காங்காம்!
எனக்கு இந்த நியூஸைப் படிச்சதிலிருந்து மனசுக்குள்ள ஒரே பர…பர…நாம் ஏன் 'பஞ்சு வீட்டுக்கார் கேந்திரா" என ஒரு கோச்சிங் கிளாஸ் ஆரம்பிக்கக் கூடாது? அங்க நல்ல திறமைமிக்க ஹவுஸ் ஹஸ்பெண்டுகளை உருவாக்கப் பயிற்சித் தரலாமேன்னு உயரிய உத்தேசம்! அதுக்கு நம்ப பக்கத்து வீட்டு இளங்கோவை பிரின்ஸிபாலாகப் போடலாம் எனவும் ஒரு கூடுதல் ஐடியா!
புதுசா கல்யாணமாகி (அரேன்ஜ்ட் மேரேஜ்) தனிக்குடித்தனம் வந்திருக்கும் இளங்கோவுடன் ஒரு ஹேன்ட் ஷேக்!
காலையில் எழும் இளங்கோ, ஜிம்முக்குப் போய்விட்டு, வரும் வழியில் பால், மூட்டை, பிரெட், இட்லி மாவு, இன்ஸ்டன்ட் காபி டிகாக்ஷன் எல்லாமே வாங்கி வருகிறான்.
டீ, ஆம்லெட் போட்டு இளம் மனைவியை எழுப்புகிறான்!
அவள் குளித்துவிட்டு வந்ததும், அவளுக்கு சுடச்சுட டிபன் கொடுத்து, அலுவலகத்துக்கு டிராப் செய்துவிட்டுத் திரும்புகிறான்.
பின்னர், வாஷிங்மிஷினில் துணி போட்டு அழகாய் ~கிளிப்" மாட்டுகிறான். பின்பு "வர்க் ஃப்ரம் ஹோம் செய்கிறான். நடுவே மனைவியை செல்லில் அழைத்து நலம் விசாரிக்கிறான். சாயங்காலம் மனைவியை அழைத்து வருகிறான். அவள் அம்மாவுடனோ, யாருடனோ ஃபோனில் பேசிக் கொண்டிருக்க, இளங்கோ பாத்திரம் தேய்க்கிறான். சிறிது நேரத்தில் "ஹனி, டின்னர் ரெடி! என்கிறான் காதலுடன். செல்ஃபோன் பேச்சு தடைப்பட்ட எரிச்சலில் அவள் "என்ன?" என்று பார்வையாலேயே கேட்க, "நேரத்துக்கு சாப்பிடணும் பேபி! ப்ளீஸ்! என்று வழிகிறான்.
நம்ப 'பஞ்சு வீட்டுக்கார் கேந்திராவுக்கு இவன்தான் ரைட் சாய்ஸ். கரெக்டா கண்மணிஸ்!
கட்டம் போட்டு சொல்ல வேண்டிய செய்தி:
திருந்துங்க ஆண்களே! பொண்ணுங்க எப்பவோ 'மூவ்" ஆயிட்டாங்க! ஆயிட்டே இருக்காங்க! நீங்க அங்கயே பாட்டி – அம்மா காலத்துலயே தேங்கித் திணறி நின்னுட்டா எப்படி?
கண்ணிலே கருணையும்
முகத்திலே புன்னகையும்
நாக்கிலே இனிமையும்
இதயத்திலே தூய்மையும்
கைகளிலே உழைப்பும்… என இந்த ஐந்து அணிகலன்களைக் கொண்டு பெண்கள் இருக்கணும் என்பது மஞ்சு கேந்திராவின் மோட்டோவாம்!
ஏன்… ஆம்பளைங்களும் அப்படி இருக்கலாமே!
ஜஸ்ட் ட்ரை பண்ணுங்க ஜென்டில்மேன்…
நல்ல மகனாகவும், நல்ல கணவனாகவும்
நல்ல தந்தையாகவும், ஏன் நல்ல மாமனாராகவும்
கூட நீங்கள்ளாம் இருந்தால், குடும்பம் ஏன் உடையப் போகுது? ரைட்டா?