வாழ்வின் வழிகாட்டிகள்!

வாழ்வின் வழிகாட்டிகள்!
Published on
ஆசிரியர் தினம் 05-09-2022
-ரேவதி பாலு, சென்னை

மாதா, பிதா வரிசையில் தெய்வத்திற்கும் முன்பாக மூன்றாவது இடம் பெற்றுள்ளவர்கள் தான் குரு.  ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு என பல்வேறு விஷயங்களை நமக்கு கற்பித்து வாழ்வில் உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியப் பெருமக்களே!  வெறும் புத்தகத்தில் உள்ளவற்றை மட்டுமே கற்பிப்பவர்களா ஆசிரியர்கள்? இந்த ஏட்டுக் கல்வியைத் தாண்டி வாழ்க்கையை வாழக் கற்றுக் கொடுக்கிறார்கள்.  வாழ்க்கையின் அடிப்படை கூறுகளான ஒழுக்கம், ஆற்றல், தன்னம்பிக்கை, விடாமுயற்சி பொது அறிவு உள்ளிட்டவற்றை கற்பிக்கிறார்கள்.

இவர்கள் மாணவர்களுக்கு ஒரு ஆசிரியராக மட்டுமல்லாமல் ஒரு நல்ல நண்பனாக, வழிகாட்டியாக இருக்கிறார்கள். ஒரு தேசத்தின் வளர்ச்சியில் ஆசிரியருக்கு மிகப் பெரிய பங்கு இருக்கிறது. ஆசிரியர்கள் தங்கள் கடின உழைப்பு அர்ப்பணிப்பு மூலம் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குகிறார்கள் என்றால் அது நிச்சயமாக மிகையல்ல. ஆனால் இப்பணியை செய்வதற்கு மிகவும் தியாக மனப்பான்மை இருக்க வேண்டும். தன்னலம் அறவே இருக்கக்கூடாது.    தான் எதிர்கால தலைமுறையை உருவாக்கும் உன்னதமான பணியில் இருக்கிறோம் என்னும் பெருமித உணர்வு மேலோங்கி இருக்க வேண்டும்.

சிரியர்கள் தினம் கொண்டாடும் வழக்கம் எப்படி வந்தது தெரியுமா? ஆசிரியப் பணியைப் புனிதப் பணியாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன் உதாரணமாக விளங்குவோரை சிறப்பிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.   அப்படி செயல்பட்டவர் தான் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி திரு.எஸ். ராதாகிருஷ்ணன்.  இவர்  செப்டம்பர் 5 ஆம் தேதி 1888 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திருத்தணியில் பிறந்தவர். இருபதாம் நூற்றாண்டின் தன்னிகரற்ற மனிதராக விளங்கினார். மிகச் சிறந்த தத்துவ மேதையாகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார்.  சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசு தலைவராக முதலில் பதவி ஏற்றார். பிறகு சில வருடங்கள் கழித்து இரண்டாவது ஜனாதிபதியாகவும் பணியாற்றினார்.

ஆசிரியர் பணியாற்றி, நல்லாசிரியராக மாணாக்கர்களின் உள்ளங் கவர்ந்தவர். 1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக் கழகத்தின் தத்துவப் பேராசிரியராக தேர்வானார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உலகின் பல்வேறு மேடைகளில் மகத்தான சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். மெட்ராஸ் மாநிலக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றிய இவர் பாரத தேசத்தின் இரண்டாவது குடியரசுத் தலைவராக 1962 முதல் 1967 வரை செயல்பட்டார்.  இவர் மாபெரும் தத்துவ மேதையாகவும் விளங்கினார். இவரை கௌரவிக்கும் வகையில் இவருடைய அனுமதி பெற்று 1965 முதல் இவருடைய மாணாக்கர்கள் இவர் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாட ஆரம்பித்தனர்.

இவர்  அளித்த சில முக்கியமான அறிவுரைகள்:

1)  நமக்குத் தெரியும் என்று நினைக்கும்போதே நாம் கற்றுக் கொள்வதை நிறுத்தி விடுகிறோம்.

2)  அறிவு நமக்கு சக்தியைத் தருகிறது.  ஆனால் அன்பு தான் நமக்கு முழுமையை அளிக்கிறது.

3)  நம்மைத் தூண்டி நம்மையே சிந்திக்க வைப்பவர்களே உண்மையான ஆசிரியர்கள்.

4)  அறியாமையை போக்கி அறிவையும் தெளிவையும் பெறுவதே ஞானம்.

5)  கலாச்சாரங்களுக்கிடையே பாலம் கட்டி இணைப்பவை புத்தகங்கள்.

6)  ஆசிரியர்கள் நாட்டின் சிறந்த சிந்தனையாளர்களாக இருக்க வேண்டும்.

ஆண்டு தோறும் சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக மாநில, மத்திய அரசுகளால் 'நல்லாசிரியர் விருது' வழங்கப்படுகிறது.  நம் நாட்டின் தலை சிறந்த பாரத ரத்னா விருது திரு எஸ். ராதகிருஷ்னனுக்கு 1954 ஆம் வருடம் வழங்கப்பட்டது.  1975 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் மறைந்தார்.

குமாரபுரம் ஸ்டேஷன் என்று ஒரு சிறுகதையை எழுத்தாளர் திரு கு. அழகிரிசாமி அவர்கள் எழுதியிருக்கிறார்.  அது ஒரு காட்டு ஸ்டேஷன்.  அரை மைல் சுற்றளவுக்கு எந்த ஊரும் கிடையாது.  இந்த ஸ்டேஷனில் ஏறி அருகிலுள்ள கோவில்பட்டிக்கு ஏழாம் வகுப்பு சேரப் போகும் நான்கு கிராமத்து சிறுவர்களைப் பற்றிய கதை இது.  அவர்களை அழைத்துக் கொண்டு போகும் பெரியவர் ரயிலில் மற்றப் பயணிகளோடு நடத்தும் உரையாடலில்,  ஆறாம் வகுப்பு வரை மட்டுமே உள்ள இடைச்செவல் கிராமப்பள்ளி தலைமையாசிரியர் எப்படி அந்த நான்கு சிறுவர்களையும் தன் வீட்டுக்கே தினமும் வரவழைத்து ஏழாம் வகுப்பு சேருவதற்கு எழுதப்போகும் நுழைவு தேர்வுக்காக பயிற்சி கொடுத்தார் என்பதை, "ஒரு தகப்பனைப் போல இந்தப் பசங்களை கவனித்துப் படிக்க வைத்தார்" என்று மனமாரக் கூறுகிறார்.  என்ன மாதிரி வார்த்தைகள்! ஒரு பள்ளி ஆசிரியர் ஒரு தகப்பனைப் போல மாணவர்களை கவனிக்கிறார் என்றால் அது எப்பேர்ப்பட்ட விஷயம்! அந்த தலைமை ஆசிரியருக்கு எப்படிப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வு என்றே வியக்கத் தோன்றுகிறது.  அவர் சொல்லிக் கொடுத்தது அப்படியே வந்து அந்த சிறுவர்கள் நுழைவுத்தேர்வு எழுதி புது பள்ளிக்கூடத்தில் ஏழாம் வகுப்பு சேருகிறார்கள்.  ஒரு கிராமத்தில் கல்வியில் ஆர்வம் உள்ளவர்களை கண்டுபிடித்து அவர்களை ஊக்கப்படுத்தி மேற்கல்வி படிக்க வைப்பது என்பது ஒரு தலைமுறையின் வளர்ச்சிக்கே வித்திடுமே?

அடுத்தத் தலைமுறையை ஒழுக்கமுள்ளவர்களாக,
தன்னம்பிக்கை உள்ளவர்களாக
சீர்படுத்தி அமைக்கும் ஆசிரியர்
பணி எப்பேர்ப்பட்ட அறப்பணி?
இவர்களைக் கொண்டாடி இவர்களுக்கு
நன்றி சொல்ல  வருடத்தில் ஒரு நாள்
போதுமா?  வருடம் முழுவதும்
அன்புடனும் மதிப்புடனும் மரியாதையுடனும் நடத்தப்பட்டு கௌரவிக்கப்பட வேண்டியவர்கள் நம் மதிப்பிற்குரிய ஆசிரியர்கள்.

*****************

அன்புள்ள ஆசான்!
கவிதை!

– செ.கலைவாணி, மேட்டூர் அணை
ஓவியம்: சுதர்ஸன்

குடத்திலிட்ட விளக்காய்
அடைக்கலம் நான் உங்களிடம்!
மடமையைப் போக்கி என்னைக்
குன்றின் மேலிட்ட விளக்காய்
அறிவுச் சுடரேற்றி வைத்தீர்.

வெற்று வெள்ளைத்தாளாய்
இருந்த என்னை
கற்க வைத்து வண்ணமாக்கி மகிழ்ந்தீர்.

சாதாரண பாறையாய் இருந்த என்னை
அறிவு உளிகொண்டு செதுக்கி
அழகு சிலையாக்கி மகிழ்ந்தீர்.

என் பலம் யாதென அறியச் செய்தீர்.
என் பலவீனத்தைப் பலமாக்கிட
உதவி செய்தீர்.

குப்பைமேடாய் இருந்த
என் மனத்தைத் தூய்மையாக்கி
என்னுள் புதைந்திருந்த
வைரச்சுரங்கத்தை அடையாளங் காட்டினீர்.
பட்டைத் தீட்டி ஒளிவீசச் செய்தீர்.
ஆசானே!
உங்களின் தாசன் நான்.
நான் வாழும் காலம் வரை
நீங்களும் வாழ்வீர்கள்,
என் நெஞ்சில் நீங்காமல் நிலைத்து.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com