பறக்கும்  பாவைகள்!

பறக்கும்  பாவைகள்!
Published on
'எங்களாலும் பறக்க முடியும்'
-ஜி.எஸ்.எஸ்.

பகுதி – 4.

சுபாஷ் சந்திர போஸுக்கும் விமான ஓட்டியான அமேலியா மேரி இயர்ஹார்ட் என்ற பெண்மணிக்கும் ஒருவிதத்தில் தொடர்பு உண்டு.  அது என்ன என்பதைப் பிறகு பார்ப்போம்.

தனியாகப் பறந்து அட்லாண்டிக் பெருங்கடலை கடந்த முதல் பெண் விமான ஓட்டி அமேலியா.

அமேலியாவின் அப்பா சாமுவேல் எட்வின் இயர்ஹார்ட் ஒரு வழக்கறிஞர்.  அம்மா செல்வச் செழிப்பான குடும்பத்தில் இருந்து வந்தவர்.  அமேலியாவின் தாய்வழிப் பெற்றோர்கள் இறந்த பிறகு இவரது குடும்பம் பொருளாதாரத்தில் தள்ளாடியது.  காரணம் இவர் அப்பா மதுவுக்கு அடிமையானதுதான்.

சிறு வயதிலிருந்தே தன் தங்கையை ஆட்டி படைப்பார் அ​மேலியா.   அவர்கள் இருவரும் ஈடுபடும் விளையாட்டில் எப்போதுமே கேப்டனாக இருப்பது அமேலியாதான்.  தலைமைப் பண்புகளை அப்போதே பெற்றிருந்தார்.

1916ல் சிகாகோவில் தன் பள்ளிப் படிப்பை முடித்தார்.  ஒருமுறை கனடாவிலிருந்த தன் சகோதரியைப் பார்க்கச் சென்றார். அப்போது முதலாம் உலகப்போர் நடந்து முடிந்த நேரம். ராணுவ வீரர்களின் மீது அக்கறை கொண்ட அமேலியா. டொரண்டோவில் உள்ள செவிலியர் பயிற்சிக் கூடத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

போர் முடிவுக்கு வந்த பிறகு நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான முயற்சிகளில் இறங்கினார்.  ஆனால் அவர் தங்களுடன் கலிபோர்னியாவில் தங்க வேண்டும் என்று பெற்றோர் வற்புறுத்தியதால் தன் மருத்துவக் கனவை இவர் மறக்க வேண்டிய கட்டாயம்.

1920இல் இவரது முதல் விமானப் பயணம் நடந்தேறியது. அப்போதிலிருந்து விமான ஓட்டியாக வேண்டும் என்பது அவர் மனதில் ஆழப் பதிந்தது.  அதற்கு அடுத்த வருடம் ஒரு சிறிய ஆகாய விமானத்தை கடனுக்கு வாங்கினார்.  தன்னுடைய திறமையால் போதிய பயிற்சி எடுத்துக்கொண்டு அடுத்த இரண்டு வருடங்களிலேயே விமான ஓட்டி உரிமத்தைப் பெற்றார்.  பின்னர் வெளிநாடுகளிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் பாஸ்டன் நகரில் தங்க வைக்கப்பட்ட போது அங்கு சென்று சமூக சேவை செய்தார்.  ஆக ஒருபுறம் சமூகசேவை மறுபுறம் விமானம் ஓட்டும் பயிற்சி என இரண்டிலுமே ஈடுபட்டார்.

னது பறக்கும் அனுபவங்கள் குறித்து அமேலியா நூல்கள் எழுதியுள்ளார்.   20 மணி நேரமும் 40 நிமிடங்களும், ஃபார் தி ஃபன் ஆஃப் இட் ஆகிய அந்த ​நூல்கள் விற்பனையில் சாதனை படைத்தன. பெண்களின் உரிமைகளைப் பேசும் 'தொண்ணூற்று ஒன்பது' என்ற அமைப்பை நிறுவுவதில் தூண்டுகோலாக இருந்தார்.  பர்டியூ பல்கலைக்கழகத்தில் வான்வழிப் பயணத் துறை விரிவுரையாளராக இருந்து பெண்கள் இத்துறையை தேர்ந்தெடுக்க உந்துதலாக இருந்தார். சம உரிமை திருத்த மசோதாவிற்கு ஆதரவாளராகவும் இருந்தார். தேசியப் பெண்கள் கட்சியின் உறுப்பினரானார்.

1937ல் நடைபெற்றது அந்த எதிர்பாராத நிகழ்வு.  உலகம் சுற்றிவரும் சாதனை ஒன்றில் அவர் பங்கு பெற்றார். ஒரு தனி விமானத்தில் அவரும் ஃப்ரெட் நூநான் என்ற மாலுமியும் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்தனர்.  பின் மத்திய பசிபிக் கடலுக்கு மேல் சென்று கொண்டிருந்தபோது அவர்கள் இருவரும் மாயமாய் மறைந்து விட்டனர்!   இந்த நிகழ்வு ஹவுலாண்ட் தீவுக்கு அருகே நடைபெற்றது.

1937  ஜூலை 2 அன்று அவர்களிடமிருந்து கடைசியாக தகவல் தொடர்பு வந்தது. அதற்குள் அவர்கள் உலகின் மிகப் பெரும்பாலான பகுதியை விமானத்தில் கடந்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  பல இடங்களில் தேடியும் அவர்கள் இருவரின் உடல்கள் கிடைக்கவில்லை.  அதற்கு ஒன்றரை வருடங்களுக்கு பிறகு அவர்கள் இருவரும் இறந்து விட்டதாக அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டது.  அவரது இறப்பின் மர்மம் (சுபாஷ் சந்திரபோஸ் மரண மர்மம் போலவே) இதுவரை விடுவிக்கப் படவில்லை.

அமேலியாவின் பெயரில் அமெரிக்காவில் இப்போது பல நினைவுச் சின்னங்கள் உள்ளன. 'தி லாஸ்ட் ஃப்ளைட்' என்று பெயரிடப்பட்ட அவரது நூல் அவர் இறந்த பிறகு வெளியிடப்பட்டது.
(தொடர்ந்து பறப்பார்கள்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com