ஞான முத்திரையுடன் ஆனந்த மூர்த்தி!

ஞான முத்திரையுடன் ஆனந்த மூர்த்தி!
Published on
தமிழக புராதன வைணவத் திருத்தலங்கள்.
பகுதி – 4
Dr. சித்ரா மாதவன்

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்திற்கு அருகில் ஒரகடம் கிராமத்தில் அமைந்துள்ளது கோதண்டராம சுவாமி ஆலயம். இந்தப் பழைமையான கோயில் அஹோபில மடத்தின் ஆறாம் குரு ஶ்ரீ சாஸ்தா பராங்குச யதீந்திர மகா தேசிகரால் நிறுவப்பட்டதால், இந்த ஊர்,
'ஶ்ரீ பராங்குசபுரம்' என்று அழைக்கப்பட்டது. இதைப் போலவே, அருகேயுள்ள பொன்விளைந்த களத்தூர் கிராமத்திலும் ஓர் அழகிய ராமர் கோயிலையும் ஓர் அக்ரஹாரத்தையும் அவர் நிறுவியுள்ளார்.

இத்தலம் பல்லவர் காலமான எட்டாம் நூற்றாண்டிலிருந்தே மிகவும் பிரசித்தி பெற்று விளங்குவது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள கல்வெட்டு, இந்த ஊர் முற்காலத்தில், 'உரகடம்' என்றும், 'பல்லவமல்ல சதுர்வேதிமங்கலம்' என்றும் பல்லவப் பேரரசன் இரண்டாம் நந்திவர்மன் பல்லவ மல்லன் (கி.பி. 731 – 796) பெயரால் அழைக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது. மேலும் இந்த ஊர், 'அகரம் உரகடம்' என்றும் அழைக்கப்பட்டுள்ளதால், இந்தத் தலம் வேதத்தில் தேர்ந்த அந்தணர்கள் வாழ்ந்த அக்ரஹாரமாகவும் இருந்துள்ளது என்பதை அறியலாம்.

மூன்று நிலை ராஜகோபுரமும், தீப ஸ்தம்பமும், பலிபீடமும், கோயிலின் வாயிலை அலங்கரிக்கின்றன. கருவறையில் ஸ்ரீராமபிரான் கிழக்கு நோக்கிய திருக்கோலத்தில், இடது காலை மடக்கி, வலது காலை நீட்டி ஆனந்த விமானத்தினுள் அழகாக, கம்பீரமாக வீற்றிருக்கின்றார். மூர்த்தி சிறிதாயினும் கீர்த்தி பெரிதாக விளங்கும் ஸ்ரீராமரின் வலப்புறம் சீதா தேவி அமர்ந்திருக்க, கூப்பிய கரங்களுடன் வில், அம்பு தரிக்காமல் லட்சுமணர் உடனிருக்க பட்டாபிஷேகக் கோலத்தில் காட்சி தருகின்றனர். ஸ்ரீ ராமபிரானின் வலது கரம் ஞான முத்திரையுடன் திகழ்வது விசேஷம்.

கருவறை மூலவரின் கீழே, கருங்கல்லினால் ஆன இந்த ஆலயத்தின், 'ஸ்நாபன மூர்த்தி' திருச்சிலை அமைந்துள்ளது. பெரும்பாலான தலங்களில் இந்தச் சிலை உலோகத்தினாலேயே அமைந்திருக்கும். ஆனால், இத்தலத்தில் கருங்கல்லில் அமைந்திருப்பது சிறப்பு. இந்த மூர்த்திக்கு தினமும் திருமஞ்சனம் செய்விக்கப்படுகிறது. மேலும், கருவறையில் கைகூப்பிய கோலத்தில் அனுமனுக்கும் ஒரு கற்சிலை அமைந்துள்ளது. இது தவிர, கோயிலின் வாயிலில் அனுமனுக்கு ஒரு தனிச் சன்னிதியும் அமைந்துள்ளது.

கருவறை மூலவர் போலவே ஸ்ரீ ராமபிரானுக்கு மற்றுமொரு திருச்சிலையும் இக்கோயிலில் உண்டு. இந்தச் சிலை கோயிலின் அருகே உள்ள மலையிலிருந்து கொண்டுவரப்பட்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் தை மாதம் ஐந்தாம் நாள் இந்த மூர்த்தி அந்த மலை வரை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறார். இந்த நாள், 'பிரதிஷ்ட தின மகோத்ஸவம்' மற்றும் 'பரிவேட்டை உத்ஸவம்' என்றும் மக்களால் அறியப்படுகிறது.

உத்ஸவ மூர்த்தி ஸ்ரீ ராமர் வில், அம்புடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். உடன் சீதா தேவி மற்றும் லட்சுமணர் உள்ளனர். கலைநயத்துடன் விளங்கும் இந்த மூர்த்திக்கு கோதண்டராமர், சந்தான ராமர் என்றும் வேறு பெயர்கள் உண்டு. 'பாகவத உத்தமன்' என்றறியப்படும் புஜங்களில் சங்கு, சக்கரம் முத்திரை பொரிக்கப்பட்ட பக்த அனுமனின் வெண்கலச் சிலையும் இங்கு உண்டு. இதனைத் தவிர, நவநீதக் கிருஷ்ணர், சுதர்சனர் மற்றும் ஶ்ரீனிவாசரின் வெண்கலச் சிலைகளும், வெள்ளியால் ஆன நவநீதக் கிருஷ்ணரின் சிலையும் இங்கே உத்ஸவ மூர்திகளாக வணங்கப்படுகின்றன.

ஆலயத்தின் பெரிய மண்டபத்தில் ஆழ்வார்கள் மற்றும் ஆசாரியர்களின் கற்சிலைகளும், வெண்கலச் சிலைகளும் உள்ளன. கோயிலில் அமைந்துள்ள பெரிய மடைப்பள்ளி, ஒருகாலத்தில் மக்கள் புழக்கம் அதிகமுள்ள திருக்கோயிலாக இது இருந்திருக்க வேண்டும் என்பதைப் பறைசாற்றுகிறது. ரகுநாத புஷ்கரணி ஆலய தீர்த்தமாக விளங்குகிறது. இது, கோயிலின் அருகே மலையடிவாரத்தில் உள்ளது. இந்தக் கோயிலின் சம்ப்ரோக்ஷனம் 2000ம் ஆண்டு அஹோபில மடத்தின் 45வது ஜீயரால் நடத்தப்பெற்றது.

அபூர்வ சிற்பங்கள்: கோயிலின் வெளி மண்டபத்தில் அமைந்த ஓர் தூணில், திருமால் தனது இடது கையில் ஒரு மேளமும், அதனை ஒலிக்கச் செய்ய வலது கையில் ஓர் குச்சியும் வைத்திருப்பது போல அரிதான சிற்பம் ஒன்று காணப்படுகிறது. அதே தூணில் லட்சுமி நாராயணரின் சிற்பம் ஒன்றும் சங்கு, சக்கரத்துடன் உள்ளது. உள் மண்டபத்தில் யோக நரசிம்மரின் விசேஷ சிற்பம் ஒன்று அமைந்துள்ளது. அதற்கு தினமும் இருவேளை பூஜை செய்யப்படுகிறது. அதே தூணில் மிகவும் அரிதான விபந்தகரின் மகன், ரிஷ்ய சிருங்கர் யாகம் செய்வது போல அமைந்திருக்கும் சிற்பம் ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள லட்சுமி நரசிம்மரின் சிற்பம், பக்தர்களை நோக்காமல், ஒருவரையொருவர் நோக்கியபடி அமைந்துள்ளது அரிதான திருக்கோலம்.

கல்வெட்டுகள்: இந்தக் கோயிலுக்கு பொது மக்கள் அளித்த நிவந்தங்களையும், கொடைகளையும் பறைசாற்றும் வண்ணம் பழைய கல்வெட்டுகள் பல தமிழில் உள்ளன. மூலவர் ரகுநாதப்பெருமாள், சக்ரவர்த்தி திருமகன் போன்ற நாமங்களால் பண்டை காலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறார் என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. 'நல்லராயன்' என்பவர் ஶ்ரீராம நவமி திருவிழாவிற்காக சிறிது நிலத்தை கொடையாக அளித்துள்ளார் என்பதையும் கல்வெட்டு மூலம் அறியலாம்.

திருவிழாக்கள்: இந்தக் கோயிலில் பிரதான திருவிழா என்றால், சித்திரை மாதம் நடைபெறும் ஶ்ரீராம நவமி உத்ஸவம்தான். வெகு விமரிசையாக பத்து நாட்கள் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அதேபோல், தை மாதத்தில் பரிவேட்டை விழாவும், புரட்டாசி மாதத்தில் ஶ்ரீ வேதாந்த தேசிகர் விழாவும், கார்த்திகை திருவிழாவும் இங்கே மிகவும் விசேஷம்.

ஒரகடம் திருத்தலம் ஒரு காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சதுர்வேதி மங்கலமாக விளங்கியது. இத்தல ஆலயமும் மூர்த்திகளும் மிகவும் அருட்பெருமையுடன் விளங்கி உள்ளனர். தற்போது இந்த ஆலயம் மிகவும் சிதிலமடைந்து, பெரிதாக மக்கள் வரவு இன்றி காட்சி தருவது பெரிதும் வருத்தமளிக்கும் விஷயமாகும். மன அமைதியும் சந்தோஷமும் தரும் வரப்ரசாதிகளாகத் திகழும் இத்தல இறைவனை வணங்கி வாழ்வில் பேரின்பம் அடைவோம்.

தரிசன நேரம்: காலை 9 முதல் 12 மணி வரை. மாலை 5.30 முதல் 7 மணி வரை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com