
-என்.கே.பாலசுப்ரமணியன்.
வாரப்பத்திரிகைகளில்
வண்ணப்படங்களுடன்
வகை,வகையாய்
தொடர்கதைகள்,
வித விதமாய்
சிறுகதைகள்
வெளிவந்த
காலங்களில் – அவைகளை
வணிகப் பத்திரிகைகள் என
மலினப்படுத்தி,
அவர்களை வணிக எழுத்தாளர்களென
வசைபாடி,
நாங்கள் தான் இலக்கியம்
படைக்கிறோமென மார் தட்டி மகிழ்ந்தனர்
சிற்றிதழாளர்கள்.
கால ஓட்டத்தில்
வாட்ஸ்அப் வருகையில்
வாசிப்பின் மீதே
நேசிப்பு குறைந்ததில்
கழுதை தேய்ந்து
கட்டெறும்பானது போல்
தொடர் முற்றி,
சிறுகதை வற்றி,
ஒரு பக்கக்கதையென
உருமாறி,
அதுவும் அதிகம் என
நிமிடக்கதையாகி,
ஒரு வரிக்கதையாகி
அடுத்து என்னவோ
அதிர்ச்சியில் திகைக்கையில்
ஏங்குது என் மனம்
'எப்ப வருவாரோ கல்கி, சுஜாதா' போல
ஒருவர் தன்னுடைய எழுத்தால்
தமிழனைக் கட்டிப்போட?`
நீங்கள் இலக்கியம் படைப்பது இருக்கட்டும்,
வாசகனைப் படிக்க வைக்கும்
இலக்கணம் புரியட்டும் முதற்கட்டம்!