பாட்டொன்று கேட்டேன்!

பாட்டொன்று கேட்டேன்!
Published on

இது மங்கையர்மலரின் விவிதபாரதி…

பகுதி-7

சையமைப்பாளர் சங்கர் கணேஷ் அவர்களின் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கவிதை புனைய, கே ஜே யேசுதாஸ் – பி சுசிலா (உள்ளத்தை ஊடுருவும்) குரலில் அமைந்த தேனினும் இனிய பாடல்.. 1981ஆம் ஆண்டு இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த" சிவப்பு மல்லி" என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற "ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்.. தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும்" என்ற பாடல்…

இசையமைத்த சங்கர் கணேஷ் அவர்கள்… (விஸ்வநாதன் ராமமூர்த்தி கோலோச்சிய காலத்தில்) பட்டையை கிளப்பிய பல பாடல்களை கொடுத்தவர். மெல்லிய உணர்வு பாடல்கள் ஆயினும் சரி குத்தாட்டம் (வெறியாட்டம் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்) பாடல்கள் ஆயினும் சரி இவர் இசையமைத்த பாடல்களில் சிறந்த எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. "நான் பாடும் பாடல் நலமாக வேண்டும் இசை வெள்ளம் நதியாக ஓடும்"… என்ற பாடலைப் போல் மனதை உருக்கும் மென் பாடல் ஏதாவது இருக்க முடியுமா?"பௌர்ணமி நேரம் பாவை ஒருத்தி மின்னல் போலே முன்னால் போனாள்.." என்கின்ற "பாலைவனச்சோலை" படத்தில் இடம் பெற்ற பாடலை மிஞ்சிய ஆட்டப்பாடலை எங்காவது கேட்டிருக்கிறோம்.

ஒரு படத்திற்கான இசை அமைப்பை மிக விரைவில் முடித்துத் தர வேண்டிய கட்டாயம் இருப்பின், இயக்குனர்கள் தேடி செல்வது இவர்களைத்தான். இவர்களும் அதை செவ்வனே செய்து கொடுத்தார்கள்.

'இசை கவிஞர் வழங்கிய தேவரின்…' என்று தலைப்பில் குறிப்பிடப்படுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அதற்கான காரணம்…

தொடக்க காலத்தில் விசுவநாதன் வீட்டிற்குச் சென்று, தவம் கிடந்து, தம்மை உதவியாளராக ஏற்றுக்கொள்ள வேண்டினர் ஷங்கரும் கணேசனும். பிறகு ஷங்கர் விஸ்வநாதன் இடமும் கணேஷ் ஜி.கே. வெங்கடேஷ் இடமும் பணியாற்றினர். பிற்பாடு இருவரும் விஸ்வநாதனிடம் சேர்ந்தும் பணியாற்றி உள்ளனர். அச்சமயம் கண்ணதாசனுடன் ஏற்பட்ட தொடர்பால் அவரிடம் இசை அமைப்பாளர் வாய்ப்பு பெற்றுத் தர கூறினர். கண்ணதாசன் இரண்டு படங்களுக்கு வாய்ப்பு பெற்றுத் தந்துள்ளார். அவை வெளியாகவில்லை. மீண்டும் கவிஞரிடம் வேண்டியபோது அவர் இவர்களை தேவரிடம் பரிந்துரைத்தார்.

தேவர் தயாரிப்பில் வெளியான "மகராசி" (1967) என்ற படம்  ஷங்கர் கணேஷ் அவர்களின் இசை பயணத்தை தொடங்கி வைத்த படம். அந்த நன்றி உணர்ச்சியினால் தலைப்பில் அவ்வாறு குறிப்பிடக் கேட்டுக் கொண்டார்கள் என்பது செய்தி.

ஒவ்வொரு இசையமைப்பாளருக்கும் தனித்த பெண் குரல் ஒன்று அமைந்தது. விஸ்வநாதனுக்கு சுசீலாவும், இளையராஜாவுக்கு ஜானகியும் அமைந்தாற் போல் சங்கர் கணேஷூக்கு வாணி ஜெயராம் அமைந்தார் என்று பலரும் சொல்லுவர். அந்த அளவுக்கு அவர் இசையமைப்பில் வாணி ஜெயராம் பாடிய பாடல்கள் எல்லாம் பயங்கர ஹிட்டானது மேகமே மேகமே… பால் நிலா தேயுதே எனும் பாடலை வேறு குரலில் நினைத்துப் பார்க்க முடியுமா என்ன? அப்படி ஒரு கனத்த துயரம் வழிகின்ற குரல் அது!… சரி நம் பாடலுக்கு வருவோம்.

ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்

தொட்டு கொள்ள ஆசைகள் துள்ளும்

பூவை கையில் பூவை அள்ளி கொடுத்த பின்னும்

தொட்டு தந்த கையில் மணம் வீசுது இன்னும்…

எவ்வளவு அழகாக வைரமுத்து அவர்கள் பாடல் எழுதியிருக்கிறார்.
இடது சாரிக்கொள்கைகளைப் பற்றிய படத்தில் இதைவிட மென்மையாக ஒரு காதலை கூற முடியுமா என்ன?!

சாந்தி கிருஷ்ணாவின்முகம் பாடலுக்கு பாங்கான முகம். பாடல் முழுவதும் சந்திரசேகர் அவர்கள் வெள்ளை மழையாக சிரிப்புடனே இருப்பார்.

"எடுத்து கொடுக்கையில் 

இருவிரல் போதும்…

 நகங்கள் உரசிக் கொண்டால் 

அனல் உருவாகும்."

இரு நல்லவர்கள் காதலிக்கும் போது காதல் எவ்வளவு உயர்வானதாக இருக்கிறது. இப்படி எல்லாம் கூட இசையை உருவாக்க முடியுமா?! இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ் சேவை யில் அதிக அளவில் ஒலித்த பாடல் இது என்றால் மிகையன்று. இந்தப் பாடலைக் கேட்க ஒரு ஜென்மம் போதாது.

சங்கர் கணேஷ் அவர்கள் இசைக் கோர்த்த பாடல்கள் மக்களை மகிழ்வித்தன.. தயாரிப்பாளர்களை வாழ வைத்தன… காற்றுள்ளவரை இந்தப் பாடல்கள் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com