
'வாழ்வில் வசந்தம்' என்பார்கள். அந்த வசந்த காலம் என்பது சித்திரையும் வைகாசியுமான அழகு மாதங்கள்தாம்.
சித்திரையும் வைகாசியும் வசந்த ருது. அதாவது இளவேனிற் காலம். உத்தராயண காலத்தின் ஐந்தாவது மாதம் வைகாசி. வெயிலின் கொடுமை அதிகமாக இருக்கும்.
அக்னி நட்சத்திரம், கத்ரி வெயில் என்றெல்லாம் சொல்வது வைகாசியில் தான். வைகாசியின் வீர்யம் அதில் தெரியும். ஆனாலும் பருவ மழை வைகாசியில் பொழியும் என்கிறது சாஸ்திரம்.
வைகாசி என்று சொல்வதையே விசாகம் என்றும் சொல்வதுண்டு. விசாகம் என்றால் மலர்ச்சி என்று பொருள்.
இதன் காரணமாகவே வசந்த ருதுவாக இளவேனில் காலம் என்று வைகாசி பருவ காலம் அழைக்கப்பட்டு வருகிறது.
கால சாஸ்திரத்தை நிர்ணயம் செய்துள்ள பெரியோர்கள் சித்திரை மாதத்தை 'மது மாதம்' என்றும் வைகாசி மாதத்தை 'மாதவ மாதம்' என்றும் நிர்ணயம் செய்து இருக்கிறார்கள்.
'மாதவ மாதம்' என்ற தனிச்சிறப்பு பன்னிரு தமிழ் மாதங்களில் வைகாசிக்கு மாத்திரமே உண்டு. வைகாசி மாதம் தெளிந்த குளிர்ந்த நீராடல் பூர்ணத்துவ மானது என்கிறது சாஸ்திரம். இந்த வைசாக ஸ்நானம் பற்றி – விஷ்ணு ஸ்ம்ருதியில் உயர்வாகப் பேசப்படுகிறது. அது "வைசாக ஸ்நானம் நியமம் குர்யாத் ஸங்கல்ப பூர்வகம்" என்கிறது.
இந்த வைகாசி மாதம் மாதவ மாதமல்லவா? அவனை துளசி பத்ரங்களால் பூஜை செய்து பலன்கள் நிறையப் பெற்று புண்ணிய பேறு அடைகிற பெரும் தவம் நிறைந்த மாதம்!
ஆயுள், செல்வம், மக்கட் செல்வம் அனைத்தும் தரவல்ல பருவ காலம் வைகாசி மாதம் என்பதை நூல்களும் அழகாக எடுத்தியம்புகின்றன!
-முத்து. இரத்தினம், சத்தியமங்கலம்.
———————————–
27 நட்சத்திரங்களில் ஒன்றாகிய விசாகத்தன்று 'வைகாசி விசாகத் திருநாள்' சிறப்பாக கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமான் அவதரித்த நாள். வைகாசி விசாகத்தன்று அனைத்து முருகன் திருத்தலங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். திருச்செந்தூர் முருகன் கோயிலில் விசாகத் திருவிழா பத்து நாட்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அநேக மக்கள் முருகப் பெருமானை மனதில் நினைத்து, விரதமிருந்து அபிஷேகம் மற்றும் பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.
முருக வழிபாடு: பூஜையறையை சுத்தம் செய்து, கோலமிட்டு அதன்மீது நன்கு துலக்கிய ஐந்து முக குத்துவிளக்கை வைத்து அதற்கு சந்தனம் – குங்குமம் இட வேண்டும். அதில் ஐந்துவித கலந்த எண்ணெயை விட்டு, பஞ்சுத் திரி போட்டு ஏற்ற வேண்டும். விநாயகர், முருகர் படங்கள் அல்லது.உருவச் சிலைகளை வைக்க வேண்டும். விநாயகரை வணங்கியபின், முருகனுக்கு உகந்த செந்நிற மலர்களாகிய செம்பருத்தி, அரளி, சிகப்பு ரோஜா ஆகியவைகளை கொண்டு முருகரை அலங்கரித்து கந்த சஷ்டிக் கவசப் பாராயணம் செய்து, பின்னர் சிறு பருப்பு பாயசம்; எலுமிச்சை சாதம், சர்க்கரைப் பொங்கல், ஐந்து வகை பழங்கள் வைத்து நிவேதனம் பண்ணி தீபாராதனை காட்டி எல்லோருக்கும் விநியோகம் செய்ய வேண்டும்.
அபிஷேக வழிபாடு:- இதில் பல வகை உண்டு. ஒவ்வொரு விதமான அபிஷேகத்திற்கும், ஒவ்வொரு விதமான பலன் கிடைக்குமெனக் கூறப்படுகிறது.
நல்லெண்ணெய் அபிஷேகம் – நல்லன நடக்கும்.
பசும்பால் அபிஷேகம் – ஆயுள் அதிகரிக்கும்
பஞ்சாமிர்தம் அபிஷேகம் – காரியம் கைகூடும்.
இளநீர் அபிஷேகம் – இனிய சந்ததிகள் உருவாகும்.
சந்தனம் அபிஷேகம் – சரும நோய் அகலும்.
பன்னீர் அபிஷேகம் – பலர் போற்றும் செல்வாக்கு
தேன் அபிஷேகம் – தித்திக்கும் குரல் வளம்
திருநீறு அபிஷேகம் – திக்கெட்டும் புகழ் பரவும்.
மாம்பழச் சாறு அபிஷேகம் – மகிழ்ச்சி தரும்.
எலுமிச்சைச் சாறு அபிஷேகம் – எம பயம் நீக்கும்.
இதர வழிபாடு: பல்வேறு முருகன் திருத்தலங்களில் பக்தர்கள் காவடி, பால் குடம் போன்றவைகளை எடுத்தும், அலகு குத்தியும் வழிபடுவது வழக்கம்.
உலகத்திலுள்ள உயிர்களனைத்தையும் உய்விக்கும் பொருட்டு, சிவபெருமான் செய்த திருவிளையாடல் மூலம் ஆறுமுகப் பெருமான் அவதரித்த வைகாசி விசாக தினத்தினை வழிபட்டு கொண்டாடுவோம்.
-ஆர். மீனலதா, மும்பை