விட்டல் நாமம் சொன்ன வறட்டி!

விட்டல் நாமம் சொன்ன வறட்டி!
Published on
நாமதேவர் – ஜனாபாய் பக்தி

-ரேவதி பாலு
ஓவியம்: தமிழ்

நாட்டின் எல்லா மூலைகளிலிருந்தும் பக்தர்களை பண்டரிபுரத்துக்கு இழுத்து அவர்களை ஆட்கொண்டவன் ஸ்ரீ பாண்டுரங்கன்.  அதில் முக்கியமானவர்கள், துகாராம், நாமதேவர், சக்குபாய், கானோபாத்ரா, ஜனாபாய் போன்றோர்.

தான் சிறு பெண்ணாக இருந்தபோது ஜனாபாய் தன் பெற்றோருடன் பண்டரிபுரம் வருகிறாள். அங்கேயே மனம் லயித்து விட, வீடு திரும்ப விரும்பாத ஜனாபாய் தன் பெற்றோரிடம் "விட்டலன் தான் எனது தந்தை.  ருக்மாயி தான் என் தாயார். நான் பண்டரிபுரத்தை விட்டு வரவே மாட்டேன்" என்று அடம் பிடிக்கிறாள், அழுகிறாள். அவள் பெற்றோர் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்கள். அப்போது பாண்டுரங்கனின் பரம பக்தரான நாமதேவர் அங்கே விட்டலனின் தரிசனத்திற்காக வருகிறார்.  'அவர்களுக்கு என்ன பிரச்னை, அந்த குழந்தை ஏன் அழுது கொண்டிருக்கிறாள்' என்று கேட்க அவர்களும் தங்கள் மகள் கூறுவதைச் சொல்கிறார்கள்.  நாமதேவர் அவர்களை சமாதானப்படுத்தி தானும் ஒரு பாண்டுரங்க பக்தன் என்று கூறி,  அவளை தன் வீட்டிற்கு அழைத்துப்போவதாகவும், அவர்கள் இனிமேல் அவளைப் பற்றிக் கவலைப்பட வேண்டாமென்றும் கூறுகிறார்.

எப்போதும் பூஜை, பாண்டுரங்க பஜனை என்று நாமதேவர் குடும்பத்தவர் எல்லோரும் இருந்தது ஜனாபாயிற்கு மிகவும் பிடித்துப் போனது.  இயந்திரத்தில் மாவரைப்பது, பாத்திரங்கள் தேய்ப்பது, வறட்டி தட்டுவது என்று எந்த காரியத்தைச் செய்தாலும் 'விட்டல' நாமத்தை ஜெபித்தவாறே செய்யப் பழகிக் கொண்டாள் அவள். தன் பக்தையின் மேல் பேரன்பு கொண்ட பாண்டுரங்கன், ஒரு பெண்மணியின் வடிவத்தில் அந்த வீட்டிற்கு வந்து ஜனாபாய் செய்யும் எல்லா காரியங்களிலும் அவளுக்கு உதவுகிறார்.

அப்படி பக்த ஜனாபாயின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவந்தான் இது.  ஒருநாள் ஜனாபாய் அடுப்பெரிக்க பசுவின் சாணத்திலிருந்து வறட்டியைத் தட்டிக் கொண்டிருந்தாள்.  'விட்டல விட்டல' என்று நாமத்தை உச்சரித்தபடியே அவள் தன் பணியைச் செய்ய, இவளுடைய பக்கத்து வீட்டுப் பெண் இவர்கள் வீட்டில் குவிந்து கிடக்கும் வறட்டிகளைப் பார்த்து பொறாமைப்பட்டு கொஞ்சம் வறட்டிகளை திருடிக்கொண்டு போய் தன் வீட்டில் வைத்துக் கொள்கிறாள்.

தான் தட்டிய வறட்டிகள் கணக்கில் குறையவே,  ஜனாபாய் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் கேட்கிறாள். அவளோ "எங்கள் வீட்டில் இருப்பதெல்லாம்  நான் தட்டிய வறட்டிகள் தான்.  உன்னுடையது இல்லை." என்று கூறி அவளை விரட்டி விடுகிறாள்.

"இந்த வறட்டிகள் நான் தட்டியவை தான் என்று என்னால் நிரூபிக்க முடியும்" என்று தீர்மானமாகச் சொல்கிறாள் ஜனாபாய்.

"ஏன்? இவற்றில் உன் பெயர் எழுதப்பட்டிருக்குமா?" என்று பக்கத்து வீட்டுப் பெண் கேலியாகக் கேட்க,

"என் பெயர் இல்லை!  ஆனால் நான் சதா ஜெபித்துக் கொண்டிருக்கும் விட்டலனின் பெயர் ஒவ்வொரு வறட்டியிலும் இருக்கும். அவ் விரட்டிகளில் அவனது நாமம் ஒலிக்கும். நீ வேண்டுமானால் சோதித்துப் பார்த்துக் கொள்!" என்கிறாள் ஜனாபாய்.

க்கத்து வீட்டுப் பெண் ஜனாபாயை நம்பாமல்,  சந்தேகத்துடன் சில வறட்டிகளை எடுத்து காதருகே வைத்துக் கேட்கிறாள். ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!  'விட்டல, விட்டல!' என்று நாமம் கேட்கிறது. அந்தப் பெண் ஆத்திரத்துடன் அந்த வறட்டிகளை கீழே போட, கீழே விழுந்து உடையும் வறட்டிகளிலிருந்து 'விட்டல, விட்டல, விட்டல, விட்டல!' என்னும் நாமம் முழக்கமாக மேலெழும்பி ஒலிக்கிறது. ஜனாபாயின் புனிதத்தன்மையை உணர்ந்த அந்தப் பெண் அவரைப் பணிந்து அவரிடம் மன்னிப்புக் கேட்கிறாள்.

பாண்டுரங்கரின் அதீத பக்தரான நாமதேவருக்கு மிக அதிக எண்ணிகை யிலான அபங்கங்களை பாண்டுரங்கன் மேல் இயற்ற வேண்டும் என்பது ஆசை.  இதில் தனக்கு உதவி செய்யும்படி அவர் தன் வீட்டிலிருக்கும் எல்லோரையும் கேட்டுக் கொள்கிறார்.  அவர் வீட்டில் தங்கி வேலை செய்து கொண்டிருந்த மிகச் சிறந்த பாண்டுரங்க பக்தையான ஜனாபாயும் ஆர்வத்தோடு அபங்கங்களைப் பாடுகிறாள். ஜனாபாய் இயற்றிய அபங்கங்கள் சுமார் 300 ஆகும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com