க்யூட் கல்யாணி

க்யூட் கல்யாணி
Published on
ராகவ்குமார்

'ஹீரோ' படத்தில் ஹீரோயினாக அறிமுகமான கல்யாணி பிரியதர்ஷன், தற்போது வெளியாகி உள்ள, 'மாநாடு' படம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சியுடன் இருக்கிறார். கல்யாணி பிரபல டைரக்டர் பிரியதர்ஷன் லிசி தம்பதியின் மகள். எளிமை, இனிமை, பொறுமையின் உருவம் கல்யாணி. எவ்வித, 'டாம் டூம்' இல்லாமல் மிக இயல்பாக, நம்ம வீட்டு க்யூட் பெண்ணாக மங்கையர் மலருக்கு கல்யாணி அளித்த பேட்டியிலிருந்து

'மாநாடு' தந்த மகிழ்ச்சி : ஒரு விஷயம் ரொம்ப சுலபமா கிடைக்கறதை விட, கஷ்டப்பட்டு கிடைச்சாதான் அதில் ஒரு கிக் இருக்கும். 'மாநாடு' படம், முதல் கோவிட் ஊரடங்கு நேரத்திலேயே வெளியாகி இருக்க வேண்டியது. பல தடைகளைக் கடந்து இப்போது வெளியாகி உள்ளது. மக்கள் இப்படத்தைக் கொண்டாடுகிறார்கள். வரும் 2022 புத்தாண்டு, 'மாநாடு' தந்த மகிழ்ச்சியுடன் துவங்குகிறது.

ஸ்பார்க் சிம்பு : சிம்பு சார் வெறித்தனமா வேலை செய்வார். அபார அர்ப்பணிப்பு. 'மாநாடு' படத்தின் முதல் நாள் சூட்டிங்கிலேயே அந்தக் கேரக்டர்க்கான transformation அவரிடம் தெரிந்தது. டைரக்டர் சொல்றதை அப்படியே உள்வாங்கி கூட, குறைச்சல் இல்லாமல் சரிவிகிதத்தில் தரக்கூடிய திறமை பெற்றவர். அபார திறமை உள்ளவர். நான் சிம்புவுடன் நடித்தது எனக்கு அதிர்ஷ்டம் தந்த வாய்ப்புதான்.

ஜாலி சிவா : எனக்கு சிவா சாரிடம் பிடித்தது டைமிங் காமெடி. ஸ்பாட்டில் அவர் ரொம்ப கேசுவலா, ஜாலியா இருப்பார். ஒருத்தரையும் காயப்படுத்தாமல் அவருக்கே பிடித்த மாதிரி காமெடி செய்வதில் கெட்டிக்காரர் நம்ம சிவா. கிரேட் பர்சன்.

லெஜெண்ட் லாலோட்டன் : மோகன்லால் சாருடன் இரண்டு படங்கள் பண்ணியிருக்கேன். இன்னமும் ஓரிரு நாட்களில் லால் சாருடன் நடித்த மரக்கார் அரபிகடலிண்டே ஸிம்ஹம் படம் வெளியாக உள்ளது. இது ஒரு pan இந்தியா படம். அதாவது, இந்தியா முழுக்க பல்வேறு மொழிகளில் வெளியாகும் படம். இந்தப் படம் வித்தியாசமான படம் மட்டுமில்லை; எனக்கு லால் சாருடன் பழகும் வாய்ப்பு தந்த படம். தனது புகழின் அடையாளங்களை மனதில் ஏற்றுக்கொள்ளாதவர். மிக எளிமையாகப் பழகக்கூடியவர். லால் சாருடன் பழகினால் தெரிந்து கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருந்தாலும், அவரிடம் நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விஷயம், சாரின் சிம்பிளிசிட்டி. சினிமாவில் நடிக்கும் அனைவரும் லால் சாருடன் சேர்ந்து ஒரு படமாவது நடிக்க வேண்டும். எனக்கு அந்த பாக்கியம் கிடைத்தது.

அப்பாவின் அட்வைஸ் : அப்பா பெரிய டைரக்டராக இருந்தாலும், நடிப்பை பொறுத்தவரை அட்வைஸ் எதுவும் செய்ய மாட்டார். 'உனக்கு என்ன தோணுதோ அதுபடி நடி' என்பார். நடிப்பு என்பது நாமாக உணர்ந்து உள்வாங்கி நடிக்க வேண்டும் என்பது அப்பாவின் கருத்து. தமிழ் மற்றும் மலையாளத்தில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர் என்ற உணர்வு அப்பாவிடம் நீங்கள் பழகினால் இருக்காது. அனைவரிடமும் நன்கு பழகுவார். சினிமாவில் ஏற்ற, இறக்கங்கள் இயல்பானது. வெற்றி வந்தால் துள்ளக் கூடாது, தோல்வி வந்தால் துவளக் கூடாது என்ற எண்ணம் கொண்டவர். இதை நான் என்னுடைய வாழ்க்கையிலும் பின்பற்றுகிறேன். நான் எளிமையாக இருப்பதும், நடிப்பு என்பது மற்ற பணிகளைப் போல் ஒரு பணி என்று நான் உணர்வதும், அப்பா சொன்ன அட்வைஸ் அல்ல. அப்பாவைப் பார்த்து நான் பின்பற்றுவது.

படிப்பும் நடிப்பும் : அமெரிக்காவில், பி.ஆர்க் படித்தேன். ஆர்ட் டைரக்‌ஷன் செய்யலாம் என்ற எண்ணத்தில் இருந்த எனக்கு, 'நீங்க ஏன் நடிக்க வரக் கூடாது' என பலர் கேட்டதால் நடிக்க வந்து விட்டேன்.

கெட்டதிலும் நல்லது : அம்மா லிசியும் பெரிய அளவில் எனக்கு அட்வைஸ் செய்தது இல்லை. எந்த ஒரு மோசமான விஷயத்திலும் ஒரு நல்ல விஷயம் இருப்பதை பார்க்கக் கற்றுத் தந்தவர் என் அம்மா. வாழ்வில் கெட்ட விஷயங்கள் நடப்பது கூட நல்லதுக்குதான் என்று எனக்குப் புரிய வைத்தது என் அம்மா. கடவுள் உனக்காக ஒரு நல்ல திட்டத்துடன் இருப்பார் என்று என் அம்மா அடிக்கடி என்னிடம் கூறுவார்.

அப்பா இயக்கிய படங்களில் பிடித்தது : எனக்கு நகைச்சுவை படங்கள் மிகவும் பிடிக்கும். ஏனென்றால், அப்போதுதான் மறுபடியும் மறுபடியும் சிரிக்க முடியும். அப்பா இயக்கத்தில் வெளிவந்த தேன்மாவின் கொம்பத்து, கிளுக்கம் படங்கள் எனக்கு மிகவும் பிடித்த படங்கள்.

உங்களின் ரோல் மாடல் : எனக்கு ரோல் மாடல் என்று ஒருவர் மட்டும் கிடையாது; பலர் இருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் பல விஷயங்களை நான் கற்றுக் கொள்கிறேன்.

பிடித்த நடிகர் : ஜூனியர் முதல் சீனியர் வரை பல நடிகர்களை எனக்குப் பிடிக்கும். இருந்தாலும், என் ஆல்டைம் பேவரிட் மோகன்லால் சார்தான்.

பிடித்த சுற்றுலாத் தலம் : கர்நாடகாவிலுள்ள கூர்க். இங்கே உள்ள கிளைமேட் மட்டும் இதற்குக் காரணம் இல்லை. இந்தப் பகுதிக்கு சென்றால் மனம் மிகவும் பிரஷ்ஷாக இருக்கும்.

பிடித்த ஆடை : எனக்குப் பாரம்பரிய ஆடை, மார்டனான ஆடை என்ற வித்தியாசம் எதுவும் கிடையாது. சவுகரியமான ஆடையே என் சாய்ஸ். அது,
சேலையாகவும் இருக்கலாம்
, சுடிதாராகவும் இருக்கலாம்.

பியூட்டி டிப்ஸ் : உங்களை நீங்களே லவ் பண்ண கத்துக்கங்க. மேக்கப், டிரஸ், எக்சசைஸ் இதெல்லாம் இதுக்கு அப்புறம்தான். உங்களை நீங்க காதலிக்க ஆரம்பித்த உடனே உங்க முகத்தில் ஒரு அழகு தெரியும் பாருங்கஅதுக்கு ஈடு இணை எதுவும் கிடையாது.

அடிக்கடி வரும் கனவு : நான் நிறைய படங்களில் நடிக்கிற மாதிரியும், அதில் சில படங்களில் நான் தேசிய விருது வாங்குற மாதிரியும் அடிக்கடி கனவு வருது. வேற எந்த கனவும் இப்போதைக்கு எனக்கு வருவது இல்ல. வேற கனவு வந்தா நான் உங்கக்கிட்ட கண்டிப்பா சொல்றேன்!

கல்யாணி க்யூட்டாக சிரிக்க, அவருடைய 'கனவுகள் நனவாகட்டும்' என வாழ்த்தி விடைபெற்றோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com