
ஓவியம் : பிள்ளை
"ஹலோ… கஸ்டமர் கேரா? என் பொண்டாட்டியைக் காணோம்?"
"போலீஸில் சொல்லுங்க சார்…"
"இன்னியோட அவ ஃபோனுக்கு ரீசார்ஜ் முடியுது… போடவா… வேணாமா?"
……………
"ஜவுளிக் கடைக்குள் நுழைஞ்ச என் மனைவி
முப்பதே வினாடிகளில் ஒரு புடைவை செலக்ட் பண்ணிட்டாள்!"
"புடைவை யாருக்கு?"
"எங்க அம்மாவுக்கு!"
……………
"டாக்டர்… ஆபரேஷன் முடிஞ்ச
மூணாவது பெட் பேஷண்ட் கண் விழிச்சிட்டார்!"
"இது ஒரு மெடிக்கல் மிராக்கிள்… அதிசயம்!"
……………
"புலவரே, அக மகிழ்ந்தோம் உமது பாடலைக் கேட்டு!"
"மன்னா பரிசு?"
"நிதி நிலை சரியாகட்டும். இப்போதைக்கு
இந்த ஓலை நறுக்கை கோயில் மடைப்பள்ளியில் காட்டி,
ஒரு தொன்னை சுண்டல் பெற்றுக்கொள்ளும்!"
– ஆர்.யோகமித்ரா, சென்னை
………………………………………………………………..
"வீடு அலங்கோலமா இருக்கு…
சாமானும் ஒண்ணும் வாங்கல…
பாத்திரமெல்லாம் தேய்க்கலை."
"எனக்கு சமைக்கணும்னே தோணலை என்று
நான் சொன்னப்புறமும், உங்க நண்பரை
இன்னிக்கு ஏன் சாப்பிட வரச் சொன்னீங்க?"
"அவன் கல்யாணம் பண்ணிக்கப்
போறேன்னு சொன்னான். அதனாலதான்…!"
……………
"ஸ்வீட் ஸ்டாலுக்கு பக்கத்துல கட்சி ஆபீஸை வச்சது
தப்பாப்போச்சு தலைவரே!"
"ஏன்யா?"
"அல்வா தீர்ந்திருச்சுன்னா இங்க வந்து கேட்குறாங்க!"
……………
"நான் செஞ்ச ஸ்வீட் எப்படி இருக்குங்க?" என்று
கேட்ட மனைவிக்கு பதில் சொல்லாமல்,
இப்படி எழுதிக் காட்டினான் கணவன்…
"நீ செஞ்ச அல்வாவை வாயில் போட்டுண்டேன்.
வாயைத் திறக்க முடியலை!"
– எஸ்.ஸ்ருதி, சென்னை
………………………………………………………………….
"சொத்துக் குவிப்பு வழக்கில் தலைவர் விடுதலை ஆகிவிட்டார். அடுத்து, ஊழலற்ற ஆட்சி அமைப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்!"
……………
"உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது சரி.
கூடவே இருக்கும் எனக்கு ஒரு கம்பவுண்டர் பட்டம் தரக்கூடாதா?
– எஸ்.மோகன், கோவில்பட்டி