
– சுசீலா அரவிந்தன்
ஓவியம் : தமிழ்
அந்த பிரைல் எழுத்துக்களே தேய்ந்துபோயிருக்கும். அத்தனை முறை படித்து விட்டாள் வெண்ணிலா. முகத்தில் ஒரு தனி மலர்ச்சி. சிரித்தபடியே வளைய வந்தாள்.
வெண்ணிலாவின் தாய்க்குக்கூட லேசாக சந்தேகம் தட்டியது. மகளின் மாறுதல் புரியாமல் குழம்பினாள்.
மேலும் சில மாதங்கள் ஓடின. ஆதவனும் வெண்ணிலாவும் கடிதங்கள் மூலம் தங்கள் அன்பின் வட்டத்தை அதிகமாக்கிக் கொண்டனர். கோமதிக்கு உள்ளுக்குள்ளே பயம் இருந்தாலும், ஆதவனின் அன்பும் நேர்மையும் அவளைப் பேசவிடாமல் செய்தது.
"எப்படியோ வெண்ணிலாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைந்தால் சரி" என தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
அன்று வெண்ணிலாவின் பிறந்த நாள். மகளின் பிறந்த நாளன்று களத்து ஆட்களுக்கும், தோட்டத்து வேலையாட்களுக்கும் அன்னதானம் வழங்குவது நாட்டாமையின் வழக்கம். அன்றும் மாடசாமி குடும்பத்துடன் வந்து சாப்பிட்டுவிட்டுச் சென்றனர்.
மாலை உள்ளூர் அம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
"அம்மா… என்னமோ தெரியல எனக்கு. கிறு கிறுன்னு மயக்கம் வர்ற மாதிரி இருக்கு. நா கோயிலுக்கு வரல" என்றாள் வெண்ணிலா.
"என்னடி… பொறந்த நாளு அதுவுமா இப்படிச் சொல்லுற. ஒவ்வொரு பொறந்த நாளுக்கும் நீதானே முதல்ல கிளம்பி நிப்ப. என்னாச்சு உனக்கு? கொஞ்ச நாளாவே நீ சரியில்ல. கோயிலுக்குப் போயிட்டு வந்து உங்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றவாறே புறப்பட்டாள் வெண்ணிலாவின் தாய்.
"கோமதிய துணைக்கு வந்து இருக்கச் சொல்லிவிட்டு போறேன்."
சற்று நேரத்தில் கோமதி வந்துவிட்டாள். அவளைத் தொடர்ந்து ஆதவனும் வந்துவிட, மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
காரில் சென்றபோது நாட்டாமையின் மனைவி வெண்ணிலாவைப் பற்றி புலம்பியபடியே வர, காரை நிறுத்தச் சொல்லி இறங்கிக் கொண்டவர், "நீங்க போயிட்டே இருங்க… நா பின்னாலேயே வந்துடறேன்" என்று கூறிவிட்டு தனது வீட்டை நோக்கித் திரும்பினார்.
வீட்டுக்குள் தெளிவான பேச்சு சப்தம். வெண்ணிலாவின் குரல். "இங்க பாருங்க… அம்மாவுக்கு என் மேல சந்தேகம் வந்துருச்சி. நம்ம கல்யாணம் சீக்கிரம் நடந்தே ஆகணும். அப்பா கண்டிப்பா ஒத்துக்க மாட்டார். என்ன செய்றதுனு யோசியுங்க. ஆனா, அடுத்த பிறந்த நாளை உங்க மனைவியாகத்தான் நான் கொண்டாடணும்."
"ஆமா, ஆதவன் அண்ணா… ரொம்ப நாள் நீங்க இப்படியே இருக்க முடியாது. சீக்கிரமா ஒரு முடிவு எடுங்க" என கோமதி கூறினாள்.
வெளியில் நின்றிருந்த நாட்டாமைக்கு ஆயிரம் தேள் ஒன்றாய் சேர்ந்து கொட்டினாற் போன்ற அதிர்ச்சி. வெண்ணிலாவா இது? போயும் போயும் ஆதவனையா? நினைக்கும்போதே ரத்தம் கொதித்தது அவருக்கு. ஆதவனின் அழகு, படிப்பு, நேர்மை அனைத்தும் ஜாதியின் முன்னே அடிப்பட்டுப் போயின. அவ்வளவு ஏன்? விழி ஒளி இருந்த தனது மகளின் நல்வாழ்வுகூட ஜாதியின் முன்னால் இரண்டாம் பட்சமாக தோன்றியதை எங்கே போய் சொல்வது?
வந்த சுவடு தெரியாமல் திரும்ப கோயிலை நோக்கி வேகமாய் நடந்தார் நாட்டாமை. மனதினுள் எரிமலை வெடிக்க, முகத்தில் சிரிப்பை தேக்கி எதிரில் வந்தவர்களுக்கு எல்லாம் வணக்கம் சொல்லியவாறே கோயிலை அடைந்தார்.
அன்றிரவு முழுவதும் பொட்டு தூக்கமில்லை நாட்டாமை ஐயாவுக்கு. கொட்ட கொட்ட விழித்திருந்தார். விடிந்தும் விட்டது. வழக்கம்போல் முதல் பஸ்ஸுக்கு ஆதவன் கிளம்புவதையும் மாடசாமியும் அவன் மனைவியும் அவனை வழி அனுப்புவதையும் பார்க்க பார்க்க மீசை துடித்தது.
நாட்டாமை வீட்டை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு விறுவிறுவென நடந்தான் ஆதவன். பார்க்கப் பார்க்க பற்றி எரிந்தது நாட்டாமைக்கு.
அன்று என்னவோ தெரியவில்லை. ஆதவன் மனதில் காரணமில்லா ஏதோ ஒரு பாரம். இசைமணியை பார்த்து பேசிக்கொண்டிருந்தால் சற்று தேவலாம் எனத் தோன்றியது. விடுப்பு எழுதிக் கொடுத்துவிட்டு இசைமணியை நாடிச் சென்றான்.
"வாங்க மாப்பிள்ளை சார்… பிறந்த நாள் கொண்டாட்டம் எப்படிப் போனது?
ஆதவன், வெண்ணிலா என்ன ஒரு பெயர் பொருத்தம் பாத்தீங்களா?" உற்சாகமாய் வரவேற்றான் இசைமணி.
"என்னவோ தெரியலை நண்பா… ஊரில் இருந்து கிளம்பி வந்ததில் இருந்தே மனசு சரியில்லை" என்றவாறே உள்ளே நுழைந்த ஆதவனை கட்டி அணைத்து, அமர வைத்தான்.
ஆதவனின் மனதை மாற்ற எண்ணியவனாக, "நாம இன்னைல இருந்து பிரைல் வகுப்பு ஆரம்பிச்சிடலாமா? வெண்ணிலா ரொம்ப நாளா சொல்லிட்டே இருக்கா. 'எனக்குக் கற்றுக்கொடு நண்பா'ன்னு சொல்லிட்டே இருந்தியே. இப்பவே ஆரம்பிச்சிடலாம் ஆதவா" என்றவாறே, மேசையின் மேலிருந்த ஸ்டைலஸ்சைதும், சார்ட் பேப்பரையும் எடுத்தான் இசைமணி.
இரவெல்லாம் தூங்காமல் யோசித்த நாட்டாமை, தனது மனைவி தோட்டக்காட்டுக்கு செல்லும் வரை காத்திருந்தார். பின் நேராக வெண்ணிலாவிடம் சென்றார். காலடி ஓசையிலேயே தனது தந்தையின் வருகையை உணர்ந்த வெண்ணிலா ஆர்வமாய் வரவேற்றாள்.
"தலைவலியெல்லாம் சரியாயிடுச்சாம்மா" எனக் கேட்ட அப்பாவிடம், "ம்ம்ம்… இப்ப நல்லா இருக்கேம்பா" என சிரித்தவாறே பதில் அளித்தாள்.
"உன் தலைவலி போயிடுச்சி. எனக்கு தலைவலியை வர வைச்சிட்டியேம்மா" என்றவர் நின்ற திசையை அதிர்ச்சியுடன் பார்த்தாள் வெண்ணிலா.
"ஆமா வெண்ணிலா… நேத்து நீ ஆதவன்கிட்ட பேசிக்கிட்டிருந்ததை கேட்டுட்டேன். ரத்தம் கொதிக்குது. போயும் போயும் மாடசாமி மகனா உனக்குக் கெடைச்சான்?
கண்ணுதான் இல்லைன்னாலும் மூளையுமா இல்ல? நம்ம சாதி எங்க… அவங்க எங்க?
எவ்வளவோ பேருக்கு தீர்ப்பு சொன்ன நான், நாளைக்கு உன்னால பஞ்சாயத்து முன்னால கைக்கட்டி நிக்க முடியாது. அவன நீ மறந்துடு" என்றார்.
"அப்பா… அதுக்கு பதிலா செத்துடுன்னு சொல்லிடுங்கப்பா. சந்தோஷமா செத்துடுறேன். அவர் இல்லாம என்னால வாழ முடியாது" என கதறியபடியே தனது தந்தையின் கால்களில் விழுந்தாள்.
இனி, என்ன சொன்னாலும் கேட்க மாட்டாள் என புரிந்துகொண்ட நாட்டாமை, 'விருட்' என வெளியே சென்றவர், மூன்று நிமிடங்களில் திரும்பவும் வந்தார்.
"இதோ பார்… எனக்கு நம்ம சாதி சனமும் அந்தஸ்தும்தான் முக்கியம். அதுக்கு பிறகுதான் மத்தது எல்லாம். இதோ இந்த மேசையின் மீது இரண்டு பொருள் வச்சிருக்கேன். ஒரு பாட்டில்ல விஷம். யாருக்கும் பிரச்னையா இல்லாம நீயே எடுத்து குடிச்சிடு. இன்னொண்ணு அருவா. அரை மணி நேரத்துக்கு அப்புறம் நீ உசுரோட இருந்தா, இந்த அருவாவால அந்தப் பய தலைய சீவிட்டு சந்தோஷமா ஜெயிலுக்கு போயிடுவேன். எது நடக்கணும்னு நீயே முடிவு பண்ணிக்கோ…" கதவை படாரென சாத்திவிட்டு வெளியேறினார் நாட்டாமை.
அப்படியே விக்கித்து அமர்ந்திருந்தாள் வெண்ணிலா. சற்று நேரம்தான். தனது இதயத்தை எழுத்தாக்கினாள். திருமணமானவுடன் ஆதவனுக்கு தருவதற்காய் ஒரு கவிதை எழுதி வைத்திருந்தாள். கடிதத்தை அதனுடன் சேர்த்து ஒரு கவரில் போட்டு ஒட்டினாள்.
தட்டுத் தடுமாறி வெளியே வந்தாள். வாசலில் சேர் ஒன்றில் அமர்ந்திருந்த நாட்டாமை,
"என்ன? எங்க போறே?" என கர்ஜித்தார்.
"அப்பா… நா முடிவு செஞ்சிட்டேன். உங்க கௌரவத்துக்கு ஒரு குறைச்சலும் வராது. இது சத்தியம். கோமதிகிட்ட மட்டும் கடைசியா ரெண்டு வார்த்தை பேசிக்கிறேன்பா."
எங்கோ பார்த்துக்கொண்டு பேசிய தனது மகளை உற்றுப் பார்த்த நாட்டாமையின் கண்கள் கலங்கின.
'சற்று நேரம் பார்த்தாலும் தனது மனம் மாறி விடுமோ' என அஞ்சியவர், சட்டென ஒரு வேலையாளிடம் கோமதியை அழைத்து வரச் சொன்னார்.
(தொடரும்)