கொட்டும் மழையில் கொட்டும் தேள்!

கொட்டும் மழையில் கொட்டும் தேள்!
Published on

ஜி.எஸ்.எஸ்.

கிப்தில் உள்ளது அஸ்வான் என்ற நகரம். அதில் சமீபத்தில் கடும் மழை, புயல். இதில் மூன்று பேர் இறந்ததும், 450 பேர் பாதிக்கப்பட்டதும் தனியாகக் குறிப்பிடப்பட்டன. காரணம், அவர்கள் இறந்ததும் பாதிக்கப்பட்டதும் தேள் கடித்து!

டும் மழை காரணமாக அந்தத் தேள்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியே வந்ததால் ஏற்பட்ட நிலை இது. இதை ஒரு முக்கியக் காரணமாகக் கூறியே அந்த நகர அதிகாரிகள் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்கள். விடுப்பில் செல்ல அனுமதி அளிக்கப்பட்ட மருத்துவர்கள் எல்லாம் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு வரவழைக்கப்பட்டார்கள்.

வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள எகிப்திய கொடுக்கு பெருத்த தேள்கள்தான் (Egyptian fat tailed scorpion) உலகிலேயே அதிக விஷம் கொண்டவை என்கிறார்கள். இவை கடித்தால் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டியிருக்கும். இல்லையேல், மரணம்தான். பாலஸ்தீனம் மற்றும் பிரேசிலில் உள்ள இருவகை தேள்களும் கூட விஷம் நிறைந்தவை என்று கருதப்படுகின்றன.

பொதுவாக, தேள் கொட்டிய இடத்தில் வலி அதிகமாக இருக்கும். வீக்கம் ஏற்படும். சில சமயம் கடுமையான ஒவ்வாமை உண்டாகும். நரம்புகள் கூட பாதிக்கப்படலாம். மூச்சு விடுதலில் சிரமம் ஏற்படலாம். பக்கவாதத்திலும் கொண்டுவிடலாம். தேள் கடியினால் மட்டும் உலகில் ஆண்டுக்கு மூவாயிரம் மரணங்கள் நிகழ்கின்றன.

தேள்கள் இரவு நேரத்தில் வெளியே வரும் தன்மை கொண்டவை. ஆனால், மழைக் காலத்தின்போது பகலிலும் வெளியே வரும். தேளில் கருந்தேள், செந்தேள் என்று பல வகைகள் உண்டு. இவை பெரும்பாலும் பூச்சிகளையும் பிற சிறு உயிரினங்களையும் உண்டு வாழ்கின்றன. எந்த வகையாக இருந்தாலும் அதன் கொடுக்கில் நஞ்சு உண்டு.

பெரும்பாலான மனிதர்களுக்கு தேள் கடி ஆபத்தை விளைவிப்பது இல்லை. ஆனால், குழந்தைகளை தேள் கடித்தால் விளைவு இருக்கும். ஒவ்வொரு தேளுக்கும் இரண்டு முன்பக்கக் கொடுக்குகள் உண்டு. வால் நுனியிலும் நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கு உண்டு. முன்பக்கம் உள்ள இரண்டு கொடுக்குகளை தன் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கு தேள் பயன்படுத்துகிறது. பின்பக்கக் கொடுக்கு மூலமாகத்தான் நஞ்சை பாய்ச்சுகிறது. ஒரு தேளின் ஆயுட்காலம் நான்கு முதல் 25 ஆண்டுகள்.

தேள் கடித்தால் அந்தத் தேள் உங்கள் கண் பார்வையிலிருந்து மறையும்படி இருந்துவிட வேண்டாம். (அப்போது எந்த வகைத் தேள் என்பதை அறிய முடியும் என்பதோடு, அது மீண்டும் உங்களையோ அல்லது பிறரையோ கடிக்காமல் உறுதி செய்துகொள்ள முடியும்.) அதேசமயம் அந்தத் தேளிடமிருந்து சற்றுத்தள்ளி பாதுகாப்பான இடத்துக்குச் செல்லுங்கள். மறக்காமல் யாரையாவது அழைத்து உங்களுக்கு தேள் கடித்த விவரத்தைச் சொல்லுங்கள். அப்போதுதான் உங்களுக்கு பாதிப்பு அதிகமானால் உங்களை அவர் கவனித்துக்கொள்ள முடியும்.

கடிபட்ட இடத்தை உறிஞ்சி விஷத்தை வெளியேற்ற முயற்சிப்பது, கடிவாயைக் கீறி ரத்தத்தை வெளியேற்றுவது என்பது போல் எதுவும் செய்ய வேண்டாம். உடலில் கொடுக்கு தங்கி அது வெளியே தெரிந்தால் மட்டும் அதை மெதுவாக நீக்கலாம்.

தேள் கடித்தால் அந்த இடத்தை சோப்பு நீரால் கழுவ வேண்டும். ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும். கடிபட்ட இடத்தில் நறுக்கிய வெங்காயத்தை தேய்ப்பதன் மூலம் வலி குறையும் என்கிற முறையைக் காலம்காலமாகப் பயன்படுத்துகிறார்கள்.

விழுங்குவதில் சிக்கல் ஏற்பட்டால் உணவு உட்கொள்ள வேண்டாம். வலி நிவாரணி மாத்திரை போட்டுக் கொள்ளலாம். வலி அதிகமாக இருக்கிறது என்று தூக்க மாத்திரை போட்டுக் கொள்ளாதீர்கள்.

குழந்தைக்கு தேள் கடித்தால், டெட்டனஸுக்கான தடுப்பூசி குழந்தைக்கு செலுத்தப்பட்டுள்ளதா? அது எப்போது என்ற விவரங்களை சரிபார்க்கவும். மருத்துவரை நாடி விவரங்களை அவரிடம் கூறி, அவரது ஆலோசனைப்படி செயல்படுங்கள்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com