இதற்காகவா ஒரு கொலை – 4?

இதற்காகவா ஒரு கொலை – 4?
Published on

-ஜி.எஸ்.எஸ். 

டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்புரி என்ற இடத்தில் வசித்து வந்தது அந்தக் குடும்பம். இருபத்தி இரண்டு வயதான சிம்ரன் என்ற அந்த குடும்பத் தலைவி மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாள்.  அவள் கணவனின் வியாபாரம் நொடித்து விட்டது.  எனவே கடந்த இரு வருடங்களாக அவன் சொற்ப ஊதியத்திற்கு ஒரு தொழிற்சாலையில் வேலை செய்யும்படி ஆகிவிட்டது.

குடும்பத்தின் பொருளாதாரம் மிகவும் மோசமாக இருந்தது.  இதன் காரணமாகவோ என்னவோ அவள் கணவன் தன் வார்த்தைகளாலும் செயல்களாலும் அவளைத் துன்புறுத்தத் தொடங்கியிருந்தான்.

2017 ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு சனிக்கிழமை அந்த குடும்பத்தில் நடந்தது அந்த விபரீதம்.

சிம்ரனுக்கும் அவள் கணவனுக்கும் கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.  அது பெரும் சண்டையாக வளர்ந்தது.  இதை மிகவும் அச்சத்துடன் நடுங்கியபடி பார்த்துக் கொண்டிருந்தாள் அவர்களின் நான்கு வயது மகள்.

ஒரு கட்டத்தில் கணவன் தன் மனைவியை அடிக்கத் தொடங்கினார்.  மகள் மிகவும் பயந்து போனாள்.  அம்மாவை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தாள்.  சண்டை நின்று போனால் நன்றாக இருக்குமே என்று தவித்தாள்.

ஆனால் சண்டை மேலும் உக்கிரமடைந்தது.  மனைவியின் வயிற்றில் எட்டி உதைத்தான் கணவன்.  மனைவி வலியில் துடித்தபடி கீழே விழுந்தாள்.  அவள் அப்போது கருவை சுமந்து கொண்டிருந்தாள் வேறு.

மகள் ஓவென்று அழுதாள்.  தன் அம்மாவை மேலும் தாக்குவதற்காக வந்த அப்பாவை தடுத்து நிறுத்த முயற்சித்தாள்.  ஆனால் அந்தக் கணவன் தன் மகளை தரதரவென்று இழுத்துக் கொண்டு வேறொரு அறைக்குச் சென்றான்.  அங்கு அவளை விட்டுவிட்டு கதவை வெளியே தாளிட்டான்.

அவன் வெறி அடங்கவில்லை.  வயிற்றைப் பிடித்தபடி துடித்துக் கொண்டிருந்த மனைவியை வேகமாக நெருங்கினான்.  அவள் கழுத்தை நெரித்தான்.  அவள் இறந்தது தெரிந்ததும் பயத்துடன் வீட்டை விட்டு வெளியேறினான்.  என்ன நடந்தது என்பதே தெரியாமல் அறைக்குள் அந்த நாலு வயது குழந்தை அலறிக் கொண்டிருந்தது.

அடுத்த நாள் காலை அந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தான் சிம்ரனின் சகோதரன்.  அங்கே அக்கா அலங்கோலமாகக் கீழே கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான்.  அக்காளின் மகள் எங்கே?   தாழிட்ட அறைக் கதவைத் திறந்தவுடன் அலறியபடி வெளியே வந்தாள் அந்தச் சிறுமி.  விசும்பியபடியே நடந்ததைக் கூறினாள்.

சகோதரன் உடனே காவல்துறைக்கு தொலைபேசியில் செய்தியை அறிவித்தான்.

காவல்துறையினர் வந்து சிம்ரனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தார்கள்.  ஆனால் அவள் இறந்து ஏற்கனவே சில மணி நேரங்கள் ஆகிவிட்டன என்றனர் மருத்துவர்கள்.

சிறுமியை காவல்துறையினர் மென்மையாக விசாரித்தனர்.                      'எதற்காக உன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நேற்று சண்டை தொடங்கியது?' என்று கேட்டார்கள்.

'ன் அம்மா நன்றாக சமைப்பாள்.  சாப்பாடு ருசியாக இருக்கும்' என்று அந்தக் குழந்தை சொல்லத் தொடங்கிய போது அது சம்பந்தமில்லாத பதிலாக அவர்களுக்கு பட்டது.  ஆனால் அதைத் தொடர்ந்து அவள் கூறிய தகவல் அவர்களை நிலைகுலையச் செய்தது.

'என் அம்மாவுக்கு சப்பாத்திகளை சரியான வட்ட வடிவில் செய்யத் தெரியாது.   இதற்காக அப்பா பலமுறை அம்மாவை கோபித்துக்கொண்டதுண்டு.  நேற்றும் இதைப்பற்றிதான் அவர்களுக்கு இடையே சண்டை நடந்தது' என்றாள் தேம்பிக் கொண்டே.

ஆக சப்பாத்தியை சீரான வட்ட வடிவத்தில் செய்யவில்லை என்ற காரணத்துக்காக தொடங்கிய சண்டை ஒரு உயிரிழப்பில் முடிந்திருக்கிறது!

இந்த தம்பதி சில வருடங்கள் கல்யாணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வாழ்ந்தவர்கள்.  பிறகு திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்து அதை செயல்படுத்தினார்கள்.  திருமணமாகி ஐந்து வருடங்களுக்குப் பிறகுதான் இந்த வன்முறை நடந்திருக்கிறது.  திருமணத்துக்கு முன் சேர்ந்து வாழும்போது சிம்ரன் தனது வருங்கால கணவனுக்கு சப்பாத்தி செய்து கொடுத்ததுண்டா என்பது தெரியவில்ல!.

இந்த இடத்தில் சப்பாத்தி தொடர்பாக நடைபெற்ற இன்னொரு கொலையும் நினைவுக்கு வருகிறது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ளது சம்பா என்கிற இடம்.  அங்கு ஒரு தாபா உணவகம் செயல்பட்டு வந்தது.  அதற்கு ஒருநாள் உணவருந்த வந்திருந்தார் அதே பகுதியில் வேலை செய்துகொண்டிருந்த கெம்பால் என்பவர்.

வந்தவர் சப்பாத்தி தேவை என்றார்.  அந்த தாபாவில் சமையல் செய்ய ஒருவர், அதைப் பரிமாறுபவர் ஒருவர் என்றெல்லாம் தனித்தனியாக சிப்பந்திகள் கிடையாது.

ப்பாத்தியை செய்து அதை தட்டில் போட்டு கொண்டு வந்து பரிமாறினார் அந்த தாபாவைச் சேர்ந்தவர்.  அந்த சப்பாத்தியின் ஒரு பகுதி கருகி இருந்தது.  இதைத்தொடர்ந்து கடுமையான வாக்குவாதம்.  வார்த்தைகள் தடித்தன.  ஒரு கட்டத்தில் மிகவும் கோபமடைந்த சமையல்காரர் அங்கிருந்த மரக்கட்டை ஒன்றை எடுத்து அடுத்தடுத்து எதிராளியைத் தாக்கினார்.  அந்த தாக்குதலில் கெம்பால் இறந்தே போனார்.  அவர் இறந்ததை அறிந்த தாபா உணவக சமையல்காரர் அங்கிருந்து ஓடி விட்டார்.  பிறகு அவரைக் கைது செய்தது காவல்துறை.
ஐயோ  ஐயோ!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com