கல்லாதது கடலளவு !

கல்லாதது கடலளவு !
Published on
மினி தொடர் – 8 
-நாராயணி சுப்ரமணியன்

ஆர்டிக் பகுதியில் உள்ள பனி உருகுவதால் அதில் இருக்கும் பழைய கிருமிகள் திரும்ப எழுந்து வரலாம் என்கிறார்களே, அது உண்மையா? 

ர்டிக் பகுதியில் உள்ள நிரந்தர உறைபனி (Permafrost) கூட காலநிலை மாற்றத்தால் உருகத் தொடங்கியிருக்கிறது. இதனால்,  நூற்றுக்கணக்கான முன்பு திரவமாக இருந்த கடல்நீர் கிருமிகளில் சில, ஜாம்பி நிலையிலிருந்து மாறி இந்த உறைபனியிலிருந்து மீண்டும் உயிர்த்து வரலாம் என்று சொல்லப்படுகிறது. ஆகவே நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான்.

ஆனால் கிருமிகள் வந்தாலும் அவற்றால் வரும் பாதிப்பு இப்போதைய கொரோனாவைப் போல அது பெரிய கொள்ளைநோயாக இருக்குமா என்பது தெரியவில்லை. வெளியில் வரப்போவது எப்படிப்பட்ட கிருமி, அதன் வீரியம் என்ன என்பதையெல்லாம் பொறுத்து அது மாறுபடும். பனி உருகியதால் ஆர்டிக் பகுதி எளிதில் அணுகக்கூடியதாக மாறியிருக்கிறது, எளிதில் அணுகப்படுவதாலேயே மனித செயல்பாடுகள் இங்கு அதிகரித்து, அதன்மூலம் ஆர்டிக் பகுதி தொடர்ந்து சீர்குலையலாம், ஒருவேளை கிருமிகள் வெளியில் வந்தாலும் அவை எளிதில் பரவலாம் என்பது சில விஞ்ஞானிகளின் கருத்து.

கிருமிகள் வெளியில் வராமல் தடுப்பதெல்லாம் நம் கையில் இல்லை என்றாலும் ஆர்டிக் சூழலில் மனித செயல்பாடுகளை அதிகரிக்காமல் இருக்கலாம்.

காலநிலை மாற்றத்தால் கடல்வாழ் விலங்குகளும் பாதிக்கப்படுமா?

நிச்சயமாக. காலநிலை மாற்றம், கடல் அமிலமாதல்,  கடல்மட்டம் உயர்தல் ஆகியவற்றால் பவளப்பாறைகள் பாதிக்கப்படுகின்றன. திமிங்கிலங்களின் வலசைப்பாதையும் இனப்பெருக்கம்/உணவுப்பழக்கமும் பாதிக்கப்படுகிறது. வெப்ப மண்டலக் கடல்களில் உள்ள மீன்கள் சூடு தாங்காமல் துருவப் பகுதிகளை நோக்கி வலசை போகின்றன. சிலவகை சுறாமீன்களின் குஞ்சுகளில், கடல் வெப்பநிலை மாறும்போது வளர்ச்சி விகிதம் மாறுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தி கரிம உமிழ்வுகளை உறிஞ்சிக்கொள்வதிலும் கடல்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்பதால், காலநிலை மாற்றத்தால் கடலும் கடல்வாழ் விலங்குகளும் பாதிக்கப்படும்போது அது காலநிலையை இன்னும் மாற்றியமைத்து ஒரு மீளா சுழற்சியாகக் கூட மாறலாம்.

பென்குயின்கள் ஏன் விநோதமாக நடக்கின்றன?

 பென்குயின்கள் நிலத்துக்கான பறவைகள் அல்ல, அவை கடற்பறவைகள். உண்மையில் பென்குயின்களுக்கு உள்ளது சிறகே அல்ல, செயல்பாட்டின் அடிப்படையில் பார்த்தால் அவை துடுப்புகளாகத்தான் செயல்படுகின்றன. பென்குயின்களின் உடல் வடிவம் தொடங்கி எல்லா உயிரியல் கூறுகளும் அவை கடலுக்குள் நீந்தி வேட்டையாடுவதற்காகவே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அவற்றால் நிலத்தில் நிலையாக நடக்க முடிவதில்லை. தவிர, அண்டார்டிக் பகுதியில் உள்ள நிலமும் உராய்வுத்தன்மை கொண்டது அல்ல. பனியாலான வழுக்கு நிலத்தில், நீச்சலுக்குப் பொருந்துகிற உடலை வைத்துக்கொண்டு நடப்பதால்தான் குழந்தைகளைப் போல அவை தத்தக்கா புத்தக்கா என்று நடக்கின்றன.

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பென்குயின்கள் பனியில் சறுக்கியபடியே நகரவும் தயங்குவதில்லை. ஆற்றல் தேவையும் குறைகிறது, சரியில்லாத நடையால் சிரமப்படவும் தேவையில்லை என்பதால் அவை சறுக்குவதை விரும்புகின்றன.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com