மங்கையெனும் மாசக்தி… 

மங்கையெனும் மாசக்தி… 
Published on
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும், 
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம், 
எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண், 
இளைப்பில்லை காணென்று கும்மியடி…"

ன்ன ஒரு தீர்க்கதரிசி பாரதியார்! அன்று அவர் பெண்மையைப்பற்றி கண்ட கனவு பொய்க்கவில்லை.இன்று பெண்மையே நீ வாழ்க என்று சமுதாயம் பெண்களுக்கு ஒரு அங்கீகாரத்தை,மதிப்பை வழங்கியுள்ளது. அவர்களுடைய தன்னம்பிக்கை,உழைப்பு,தைரியம், விழிப்புணர்வு இவைகளெல்லாம் அவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தந்த படிகள்!

எந்தத்துறையில் பெண்கள் பிரகாசிக்கவில்லை இன்று? விஞ்ஞானம், ஆன்மிகம்,இலக்கியம், இசை, மருத்துவம், கலை, அரசியல், விளையாட்டு என்று அவர்கள் கால் பதிக்காத துறையே இல்லையெனக் கூறலாம். ஆர்வம், செயல், அறிவு இந்த மூன்று தன்மைகளும் ஒருங்கிணைந்து ஒரு பெண்ணிடம் காணப்படுகிறது.

இன்றைய இளம் பெண்கள் திருமணம் புரிந்து கொள்ளாமலேயே குழந்தையை சட்ட பூர்வமாக தத்து எடுக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர்.இது அவர் சமூகத்திற்கு ஆற்றும் சேவை என்று ஆணித்தரமாகக் கூறலாம்.

ஒரு ஆணின் வெற்றிக்கு காரணமே அவனுக்கு பக்க பலமாக நிற்கும் பெண்தான். அவள் தாரமானாலும், தாயானாலும், தோழியானாலும், அவன் மேன்மைக்கு உறுதுணையாக இருக்கிறாள். மராட்டிய மன்னன் சிவாஜியை மாவீரனாக,உலகம் போற்றும் சரித்திர நாயகனாக மாற்றிய பெருமை அவரது அன்னை ஜீஜாபாய் அவர்களைச் சாரும்.

வாழ்க்கையில் எத்தனை சோதனைகளை சந்தித்தாலும் உறுதியுடன் போராடி வெற்றி பெறுவது பெண்கள்தான் . உதாரணமாக, பல எதிர்ப்புக்களிடையில் மருத்துவ பட்டம் பெற்றவர் டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார். பெண்கள், மற்றும் குழந்தைகளின் நோய்கள் பற்றிய ஆராய்ச்சியிலும், தமிழ் சட்டமன்ற துணைத்தலைவர் பதவியிலும் முதல் பெண்மணியாக திகழ்ந்தார்.

உலகத்தை பார்க்க முடியாத ஹெலன் கெல்லர், இவ்வுலகமே தன்னைத் திரும்பிப் பார்க்குமாறு தன் வாழ்க்கையையே சரித்திரமாக்கினார்! செவித்திறன், பேச்சுத்திறன், பார்வைத்திறன் அற்றவராக இருந்தும் அவர் சாதனை சிறிதல்லவே !

ஆனால் பெண்கள் தங்கள் உரிமைகளைப்பெற போராடத்தான் வேண்டியிருக்கிறது. பெண் உரிமை என்பது எளிதாக கிடைக்கவில்லை. எழுத்து வடிவத்தில் இருக்கும் பல உரிமைகள் யதார்த்த வாழ்வில் வழங்கப் படாமல் இருக்கின்றன. பெண்களை அநாகரீகமான முறையில் சித்தரிப்பதை தடை செய்யும் சட்டம் 1987 முதல் நடைமுறையில் இருந்தாலும் பெண்களை, பெண் குழந்தைகளை ஆபாசமாக சித்தரிக்கும் வலைதளங்கள், விளம்பரங்கள், காணொளிகள் வெளி வரத்தான் செய்கின்றன.இதை எதிர்த்து கடுமையான நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும். இந்தச் சட்டத்தை துணிந்து பயன் படுத்தினால் பெண்கள் மீதான அத்துமீறல்கள் வெகுவாகக் குறையும்.

1789ஆம் ஆண்டு உலகின் பல பகுதிகளில் பெண்களால் போராட்டங்கள் நடத்தப்பட்டு, இறுதியில் 1911 மார்ச் 8ஆம் தேதி பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டது. அந்த தினமே சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது. இப்போது நாம் உலகமகளிர் தினம் என்று பெருமையாக கொண்டாடுகிறோம்.பல பெண்களை கௌரவிக்கின்றோம். ஆனால், அந்தக்காலத்தில் நம் முன்னோர்கள் படிப்பு அறிவு இல்லாமலே திறமைசாலிகளாக இருந்திருக்கின்றார்கள். நாடி பார்ப்பது, நாட்டு மருந்து தயாரிப்பது, வயலில் வேலை, ஜோதிட அறிவு, பிரசவம் பார்ப்பது, இப்படி பல விஷயங்களில் முன்னோடியாக இருந்திருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் ஒரு வட்டத்துக்குள் வாழ்ந்தவர்கள்; விளம்பரத்தை எதிர்பார்க்காதவர்கள்! அன்றைய சமுதாய அமைப்பும் அப்படி!

இன்று பெண்கள் பல பிரச்னைகளுக்கு துணிச்சலாக ஆராய்ந்து முடிவு எடுக்கும் தைரியமும், பக்குவமும் பெற்றிருக்கிறார்கள். அஞ்சி ஒதுக்குவதில்லை.

புராணத்தில் சீதை தன்னை அவமத்தித்த காரணத்திற்காக, கணவன் சொல் பொறுக்காமல் பூமாதேவியுடன் ஐக்கியமானாள். ஒரு பழிச்சொல்லிற்காக மதுரையை எரித்தாள் கண்ணகி. ஆனால், கலியுகப் பெண்கள் நியாயத்திற்காக இறுதிவரை போராடி வெற்றி பெறுபவர்கள். வெறும் கூட்டுப் பறவைகளாக வீட்டை விட்டு வெளியே வரத் தயங்கிய பெண்களுக்கு இன்று கிடைத்த அறிவும், சுதந்திரமும், தன்னம்பிக்கையும் அவர்களைத் தலை நிமிரச் செய்துள்ளது.

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால், அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம் என்ற பாரதியின் கூற்றிற்கேற்ப உலக நாடுகள் சாதனைப் பெண்களை கை நீட்டி வரவேற்கின்றன.

எந்த சூழ்நிலையிலும் பெண் பெண்ணாக போற்றப்பட வேண்டும். இக்கருத்தை ஒரு அமெரிக்க விளம்பரக் குறும்படம் நிரூபித்திருக்கிறது.

ஒரு பிரபல அமெரிக்க நிறுவனம் தயாரித்த விளம்பர படத்தில், சில சிறுமிகளிடமும், பெண்களிடமும், "பெண்ணைப்போல் செய்து காட்டு என்றால் என்ன செய்வீர்கள்?" என்ற கேள்வி கேட்கப்படுகிறது. பல பெண்கள் பலவீனமாக பெண்மையைப் பற்றி செய்து காட்டுகிறார்கள். ஆனால் பத்து வயதுச் சிறுமி ஒருத்தி, கம்பீரமாக, அச்சமின்றி தன் ஆற்றலையெல்லாம் திரட்டி பெண்ணைப் போல ஓடியும் ஆடியும் காண்பிக்கிறாள்!

ஆக, சிறு வயதில் பெண் குழந்தைகள் இயல்பாக நினைத்ததை தனித்துவத்துடன் செய்கிறார்கள். ஆனால், பெண்கள் வளர,வளர பெண்மையின் விளக்கம் வேறுபடுகிறது. பெண்மை என்பது மென்மை,அடங்கிப்போகுதல் எனப் பல விஷயங்கள் செயற்கையாக திணிக்கப் படுகின்றன. இத்தகைய கற்பிதங்களை தகர்த்தெறிந்து "பெண்ணைப்போல" என்றதும் "நான் நானாகத்தான் இருப்பேன் என்று உரக்கச் சொல்லுங்கள்," என்கிறது இந்த விளம்பரப் படம்.என்ன எதார்த்தம்!

ஒவ்வொரு பெற்றோரும் அவர்கள் பெண்ணிற்கு தன் சொந்த காலில் நிற்க போதுமான கல்வி அறிவு, மனோதைரியம், சமநோக்கு  பார்வை இவற்றை வழங்க வேண்டும். ஆண் மகனுக்கு சிறு வயதிலேயே பெண்களிடத்தில் மரியாதையுடனும் பண்பாட்டுடனும் பழக கற்றுத்தர வேண்டும். சில பெண்கள் இயற்கையிலேயே அறிவும், ஆற்றலும், தைரியமும் உடையவர்களாக இருக்கின்றனர்.

இன்று பொருளாதாரத்தில் மலிந்த பெண்கள் கூட சுய உதவிக்குழுக்கள் என்று அமைத்து வங்கியில் கடன் பெற்று பல தொழில்களை சிறப்பாக செய்து வருகின்றனர்; வருமானமும் வருகின்றது. ஆனால் ஆணாதிக்க சமூகம் பெண்களை பொம்மையாக காண்பது என்று நிற்கின்றதோ அன்றுதான் பெண் முழு சுதந்திரம் அடைகின்றாள். 7 வயது சிறுமிக்கும் 70 வயது மூதாட்டிக்கும் வித்தியாசம் இல்லாமல் பாலியல் பலாத்கார கொடுமை நிகழ்கின்றது. இது மிகவும் வேதனைக்குரிய விஷயம். பெண்களை பலவீனமானவர்கள் என்று பார்க்கும் கண்ணோட்டம் மாற வேண்டும்.

ஒவ்வொரு பெண்ணும் தான் ஒரு பெண் என்பதில் பெருமை கொள்ள வேண்டும். ஜவகர்லால் நேரு அவர்கள் "ஒரு நாட்டின் பிரஜைகளை தட்டி எழுப்ப வேண்டுமென்றால், முதலில் பெண் இனம் எழுப்பப்பட வேண்டும். அவள் எழுந்தால் ஒரு கிராமம் எழும், நகரம் எழும், பின் ஒரு நாடே எழுச்சி பெறும்! மறுமலர்ச்சி என்பது பெண்ணின் கையில் தான் உள்ளது ," என்று கூறியது பெண்ணினத்தை பெருமைப் பட வைக்கின்றது.

பெண் கல்வியை ஊக்குவித்தார் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள். இன்றைய பிரதமர் திரு.மோடிஜி அவர்களும் தன் ஒவ்வொரு உரையிலும் பெண் கல்வி, பெண் சுயதொழில் பற்றி எடுத்துரைக்கின்றார். பெண் சக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்துவது நம் கடமையாகும்!

நாம் அறிந்த பெண்களல்லாமல் , அறியாத திறமைசாலியான பெண்கள் ஏராளம். எல்லோரையும் மகளிர் தினம் அன்று மட்டும் பாராட்டாமல், எல்லா தினங்களிலும் ஊக்குவிப்போம், உற்சாகப்படுத்துவோம். 'மங்கையராய்ப் பிறப்பதற்கு நல் மாதவம் செய்திட வேண்டும்" என்ற நாமக்கல் கவிஞரின் வாக்கின்படி இரு கரம் கூப்பி வணங்குவோம், வாழ்த்துவோம் !

-மாலதி நாராயணன்

===============

சிந்திக்க வைத்த ஆரம்ப கல்வி பாட்டு! 

ன் பேரன்களுக்கு ஆரம்பக் கல்வி பாடல்கள் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன், அதில் " தோசையம்மா  தோசை" பாட்டு என்னை சிந்திக்கச்செய்தது .

எனக்கு வயது 64. இந்த பாட்டு நான் சின்னக்குழந்தையா இருக்கும் பொழுதிலிருந்தே  இருக்கிறது. இந்த பாட்டை பாலர் பள்ளி பாடத்தில் படத்தோடு போட்டிருப்பார்கள் . படத்தில், அம்மா, அப்பா, அண்ணன், தம்பி எல்லோரும் இருப்பார்கள், தாத்தா பாட்டியைத்தவிர  .

பாடலிலும்கூட… அப்பாவுக்கு நான்கு, அம்மாவுக்கு  மூன்று, அண்ணனுக்கு ரெண்டு, பாப்பாவுக்கு ஒன்று என்று முடியும். இதிலும் தாத்தா, பாட்டி இருக்க மாட்டார்கள்.

அந்த காலத்தில் வீட்டுக்கு வீடு கூட்டுக்குடும்பம் தான். அப்படியிருக்க, அந்த காலத்திலேயே ஆசிரியர் இப்படி ஒரு பாடல் எழுதியிருப்பது என்னை சிந்திக்கவைக்கிறது. வரும் கல்வியாண்டில் இந்த பாடலுக்கான படத்திலும், வரிகளிலும் மாற்றம் செய்யலாமே?

குழந்தைகளுக்கு பாடல் என்றால் மிகவும் பிடிக்கும். அதன் வழியே சொல்லும் பொழுது மனதில் அட்டை போல் ஒட்டிக் கொள்ளும். தாத்தா  பாட்டி மீதான மதிப்பும் மரியாதையும் கூடினாலும் மிகையாகாது .

அரசு கவனிக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டாமே என்று, நான் அந்த பாடலில் "தாத்தா, பாட்டி" சேர்த்து தான் சொல்லிக்கொடுக்கிறேன்.

-ஜானகி பரந்தாமன், கோவை  

===============

 டிஜிட்டல்  அருங்காட்சியகம்!                                                                      

மிழக கோவில் சிலைகளை, ஆன்லைன் வாயிலாக, முப்பரிமாண வடிவில் பார்க்க, சென்னை ஐ.ஐ.டி.,யுடன் இணைந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், 'டிஜிட்டல்' அருங்காட்சியகத்தை உருவாக்கி உள்ளனர்.

அவர்கள் பஞ்சலோக சுவாமி சிலைகள் 36, கற்சிலைகள் 265, மரச்சிலைகள் 73 என, 374 சிலைகளை மீட்டுள்ளனர். வழக்கு விசாரணை நடப்பதால், நீதிமன்ற சொத்தாக இந்த சிலைகள், தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடமே ஒப்படைக்கப்பட்டு உள்ளது.  பொதுமக்கள், www.tnidols.com என்ற இணையதளம் வாயிலாக பார்க்கலாம்.

-சௌமியா சுப்ரமணியன், சென்னை.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com