பெண்மையை போற்றுவோம்

பெண்மையை போற்றுவோம்
Published on

மகளிர் தின சிறப்புக் கட்டுரை

– நா. கங்கா

ஆண்-பெண் உளவியல் கூறுகளை அலசிப்பார்த்தால் பெண்மையின் மகத்துவம் புலப்படும். பெண்கள் எதையும் ஆழமாகப் பல கோணங்களிலிருந்தும் பார்ப்பார்கள். இதற்குப் படிப்பறிவு தேவையில்லை. ஒரு குறிப்பிட்ட செயலால் என்ன எதிர்வினை ஏற்படும் என்று நன்றாக கணக்கிடுவார்கள். பெண்களுக்கு இயல்பாகவே ஆணைவிட ஞாபக சக்தியும், அறிவுத்திறனும் அதிகம், பட்டறிவின் புரிதல் என்பது பெண்களுக்கு இயற்கை தந்த சொத்து.

பாசம், அரவணைப்பு, உறவுகளைப் புரிந்துகொள்ளுதல் போன்ற நுண்ணுணர்வுகளும் பெண்களுக்கு அதிகம். பிரச்சனைகளை சமாளித்தல், சரியான முடிவுகளை எடுத்தல், பேச்சுத்திறன், இரக்க குணம், பிறர் பிரச்சனைகளைத் தன்னுடையதாக நினைத்தல் ஆகியவற்றை முக்கியமான வாழ்வியல் நெறிகளாக உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ளது. இவை எல்லாமே இயற்கையிலேயே பெண்களுக்கு அதிகம்.

மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம் பெண்மையைப் போற்றுவதற்காக அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு மையக்கருத்துடன் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டின் மையக்கருத்து "நாளைய நீடித்த வளர்ச்சிக்காக இன்றைய பாலின சமத்துவம்" என்பதாகும். குடும்பத்தில் தொடங்கி உலகளாவிய அளவில் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் கண்ணோட்டத்துடன் பெண்களை சமமாக நடத்தி, அவர்களது சாதனைகளை ஆண்களுக்கு ஒப்ப பாராட்டி, அதன் பலன்களைப் பெண்கள் பெறவேண்டும் என்பதுதான் ஐக்கியநாடுகள் சபை வழங்கியிருக்கும் இந்த அருமையான மையக்கருத்தின் விளக்கம்.

பெண்களின் சமூக, பொருளாதார, கலாசார, அரசியல் சாதனைகளை உலகிற்குப் பறைசாற்றிக் கொண்டாடும் தினமாக மகளிர் தினம் முதலில் அறிவிக்கப்பட்டாலும், இன்று பாலின சமத்துவம், இனப்பெருக்க உரிமைகள், வீட்டிலும் பணியிடத்திலும் பாலின அத்துமீறல்களைக் குறைப்பது ஆகியவற்றைப் பற்றி உரத்த குரலில் பேசிப் போராடவேண்டிய மேடையாக இந்த தினத்தின் செயல்பாடு மாறிவிட்டது என்பது வருந்தத்தக்கது.

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக மகளிர் தினம் உலக அளவில் அனுசரிக்கப்பட்டாலும் இன்றும் மகளிரின் உரிமைகள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம், பெண்களுக்கான அங்கீகாரம் ஆகியவற்றுக்காகக் கெஞ்சும் நிலைதான் உள்ளது. பற்பல சட்டங்களும் திட்டங்களும் இருந்தாலும், தனி மனிதனின் மனமாற்றம் இருந்தால் மட்டுமே பெண்களுக்கு சம உரிமை வழங்க முடியும்.

வீட்டில், உள்ளூரில், நாட்டில், உலக அளவில் பெண்களுக்கு நல்ல பாதுகாப்பான தினசரி வாழ்வும் எதிர்காலமும் அமைய தனிமனித மனமாற்றமும் ஈடுபாடும் அடித்தளமாக அமையும். ஆண்-பெண் குழந்தைகளின் எண்ணிக்கை சமமாகி சீர்படுவது 2095 ஆம் ஆண்டில்தான் சாத்தியம் என்று உலகப் பொருளாதார அமைப்பு பயமுறுத்துகிறது. முன்னைவிட இப்போது பெண் சிசுக்கொலை குறைந்திருந்தாலும் அது இன்னும் ஆங்காங்கே நடக்கிறது என்பதே உண்மை.

கல்வியில், வேலைவாய்ப்பில் பெண்கள் முன்னேறியிருக்கிறார்கள், விண்வெளிக்கும் செல்கிறார்கள். அதிக பொறுப்புணர்ச்சியுடன் வேலை செய்வது பெண்கள்தான் என்று பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் தெரிகிறது. ஆனால் பேருந்தில், புகைவண்டியில், பொது இடங்களில், பாலியல் சீண்டல்கள், தீண்டல்கள், பார்வைகள்… தொடரும் பலாத்காரங்கள்! ஏன் இப்படி? "என்று தணியும் இந்த பாலியல் மோகம்" என்று பாரதியின் பாடலை மாற்றிப்பாடலாமா என்று தோன்றுகிறது.

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை என்றான் முண்டாசுக்கவிஞன். நிமிர்ந்த நன்னடையும் மனோதிடமும் கொண்ட பெண்களும் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகின்றனரே! இந்த அவலத்தை என்னவென்று சொல்வது?! பெண்ணின் பெருமை சீரழிவதற்குக் காட்சி ஊடகங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை மனசாட்சி உள்ளவர்கள் மறுக்க முடியாது.

இதைத்தவிர, பணிக்குச் செல்லும் மகளிருக்கு வீட்டில், அலுவலகத்தில் நியாயம் தரப்படுவதில்லை. பல குடும்பங்களில் இன்னும் தன் சம்பளத்தில் பணம் எடுத்து செலவழிக்கக்கூட பெண்களுக்கு உரிமை இல்லை என்பதுதான் நிதர்சனம். பெண்கள் பணியில் வேகமாக முன்னேறும்போது கணவன்மார்களுக்கு மனத்தாங்கல் வருவதால் இந்த ஈகோ பிரச்சனை பூதாகாரமாக வெடித்து, பிரிவு, தற்கொலை வரை நடக்கிறது.

கட்டிடத் தொழிலிலும் விவசாயத் தொழிலிலும் ஆண்களும் பெண்களும் ஒரே மாதிரியான வேலை செய்தாலும் சம்பளத்தில் உள்ள வேறுபாடு இன்னும் தொடர்கிறது. இவ்வளவு ஏன், திரைத்துறையில்கூட கதாநாயகர்களுக்கும் கதாநாயகியருக்கும் சம்பளத்தில் ஏற்றத்தாழ்வு உண்டு.

2030 ஆம் ஆண்டுக்கான 17 நீடித்த வளர்ச்சி இலக்குகளில் ஐந்தாவது இலக்கு பாலின சமத்துவம். பல நாடுகளும் இதில் உள்ள மற்ற இலக்குகளை அடைந்துவிட்டன, சில நாடுகள் இலக்கை எட்டப் போராடுகின்றன. ஆனால் ஒரு தேசத்தால்கூட பாலின சமத்துவம் என்ற எளிய இலக்கை எட்டமுடியவில்லை. குறைவான சம்பளம், அடிப்படை வசதியற்ற பணி இடங்கள், அதிக வேலை, சம்பளமும் மதிப்பும் இல்லாத வீட்டு வேலைகள், சம்பாதித்தாலும் பொருளாதார சுதந்திரமின்மை என்று பெண்கள் சந்திக்கும் சிக்கல்களின் பட்டியலுக்கு முடிவில்லை. இந்த நிலையில் 2030 இல் சம உரிமை வேண்டுமாம். இது கனவில்கூட நடக்காதுபோலத் தெரிகிறது.

இந்தியாவில் பெண் தெய்வ வழிபாடு சாக்தம் என்ற பெயருடன் நீண்டகாலமாக நடைபெறுகிறது. ஊருக்கு, தெருவுக்கு ஒரு மாரியம்மன் கோயில் இருக்கிறது. கொல்லிப்பாவையும், கண்ணகியும், ஆண்டாளும் தெய்வமாக வணங்கப்படுகிறார்கள்.

மாதா, பிதா குரு தெய்வம் என்று நமது மரபில் வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. தாய்க்குத்தான் முதல் இடம். சக்தி இல்லாமல் சிவன் இல்லை என்று முழங்குகின்றனர். தாய்நாடு, தாய்மொழி, பூமித்தாய், இயற்கை அன்னை என்று அறிவிக்கிறார்கள். பிரம்மபுத்ரா நதியைத் தவிர எல்லா நதிகளும் பெண் வடிவாம், ஆனால் நடைமுறையில் பெண்களுக்கும் இதே மதிப்பும் பெருமையும் தரப்படுகிறதா? அது கேள்விக்குறிதானே.

ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது, தாய் இறப்பு விகிதம் மற்றும் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் எவ்வளவு குறைவாக இருக்கிறது என்பதை வைத்தே உலக அளவில் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு நாட்டில் வெளியில் காணப்படும் வளர்ச்சிகளான பள்ளிக்கூடம், கல்லூரி, மருத்துவமனை, சாலை, உணவுப்பாதுகாப்பு, சிறந்த தொலைதொடர்பு, சிறந்த போக்குவரத்து வசதிகள் யாவும் மகளிரும் குழந்தைகளும் செம்மையாக வாழ எவ்வளவுதூரம் பங்களித்திருக்கின்றன என்பதை உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து கண்காணித்து மேம்பாட்டை உறுதி செய்கிறது.

குழந்தையை வளர்த்தெடுக்க உடலால், மனதால், உணர்வுகளால் தாய் பற்பல தியாகங்களைச் செய்கிறாள். அவற்றை சொல்லால் வடிவமைக்க இயலாது. தாய்மையை விட சமுகத்திற்கு சிறப்பான பங்களிப்பு உண்டா என்ன?
எந்த ஒரு சிறந்த முடிவும் தனி மனிதனின் வீட்டில்தான் ஆரம்பிக்கவேண்டும். ஆண்கள் அனைவரும் பெண்களை மதித்தால், நமது குழந்தைகளும் பெண்மையைப் போற்றுவார்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள்தானே குழந்தைகளுக்கு முன்மாதிரி!

உலக சுழற்சிக்கும் ஒரு தனி மனிதனின் வாழ்க்கை சுழற்சிக்கும் ஆதார சுருதியாய் இருப்பவள் பெண்தான். இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதனை ஏற்றுக்கொண்டு தாயையும் பெண்மையையும் மதிக்க, போற்ற என்ன தயக்கம் ? முன்னுதாரணமாக செயல்படுங்கள் தோழர்களே!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com