
– பவானி, திருச்சி
மெளன அஞ்சலி செலுத்த
ஊரே
திரண்டு வந்தால்
இறப்பும் பெறுகிறது
சிறப்பு.
…………………………………………………
இழப்பதற்கு
ஒன்றும் இல்லை
என்றான பிறகுதான்
பலருக்குப் புரிகிறது
வாழ்க்கையின்
அர்த்தம்.
…………………………………………………
பட்டுப் புடைவையோ
பருத்தி ஆடையோ
குறுக்கே
எதை வைத்தாலும்
வெட்டுவேன்
வீராப்பு காட்டுகிறது
கத்தரிக்கோல்.
…………………………………………………
பணம்
கதாநாயகன் ஆகியதும்
வில்லன் பாத்திரம்
ஏற்கிறது
குணம்.
…………………………………………………
ஆறுவது சினம்
ஆறாதது மன ரணம்
ஆறறிவு கொண்டு
ஆராய்வது
குணம்.