புள்ளிக் கோலம் முதல் பொன்னியின் செல்வன் ஓவியம் வரை…

புள்ளிக் கோலம் முதல் பொன்னியின் செல்வன் ஓவியம் வரை…
Published on
– ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு
புள்ளிக் கோலத்தினை மையமாகக்கொண்டு என்னென்ன செய்யலாம்?

"ஏன்… என்னென்னவோ செய்யலாம். புள்ளிக் கோலம் என்பது நம்முடைய அழியாத பாரம்பரியம். பழைமையான கலாசாரம். நான் பிறந்து வளர்ந்தது கோவையில். திருமணம் ஆகி வாழ்க்கையினைத் தொடர்வது ஸ்ரீரங்கத்தில். என் அம்மா கோவையில் வீட்டு வாசலில் தினசரி போட்டு வந்த புள்ளிக் கோலங்களே என் கற்பனைச் சிறகுகள்" என்கிறார் ஸ்ரீரங்கம் மூலைத்தோப்பு பகுதி செட்டித்தோப்பில் வசித்து வரும் தீபிகா வேல்முருகன்.

கோவையில் இருந்தபோது ஆடை வடிவமைப்பாளராக இருந்துள்ளார். திருமணத்துக்குப் பின்னர் ஸ்ரீரங்கம் வந்தவருக்குக் குடும்பப் பணிகளே சரியாக இருந்துள்ளது. இருப்பினும் நாம் ஏதாவது வித்தியாசமாக செய்தாக வேண்டும், சாதிக்க வேண்டும் என்கிற கனல் மட்டும் அவர் மனதுக்குள் இருந்துகொண்டே இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக புள்ளிக் கோலத்தினை மையமாக வைத்து உருவாக்கிய கலைப் பொருட்கள் உற்பத்தி செய்வதிலும் அதன் விற்பனையிலும் வியத்தகு வளர்ச்சியினை எட்டியுள்ளார் தீபிகா.

முதன்முதலாக எதனை உருவாக்கினீர்கள்?

கோலப் படிகள் உருவாக்கினேன். மூன்று படிகள், ஐந்து படிகள், ஏழு படிகள் என்கிற உயரத்தில் கோலப் படிகளை உருவாக்கினேன். ஒவ்வொரு படிகளிலும் ஒவ்வொரு விதமான புள்ளிக் கோலங்களை பெயிண்டிங்கில் வரைந்து வைத்தேன். அந்தக் கோலப் படிகளை, வரவேற்பு அறை, பூஜை அறைகளில் வைக்கலாம். விளக்கு மாடமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன் ஒவ்வொரு படிகளிலும் அகல் விளக்குகளை ஏற்றிவைத்து சுடரொளி கண்டு ரசிக்கலாம். வீட்டு பூஜை அறைகளில் கோலப் படிகளில் அகல் விளக்குகளை ஏற்றிவைத்து அதன் தீப ஒளியினைத் தரிசிக்கலாம். இதனை முதன்முதலாக என்னுடைய பெயரில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டேன்.

அதன் பின்னர்?

நான் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டபோது இதற்கு இத்தனை வரவேற்பு இருக்கும் என்று நினைக்கவே இல்லை. தமிழகம், பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் நிறைய விசாரணைகள் வந்தன. விபரங்கள் தெரிவித்தேன். உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் கோலப் படிகள் கேட்டு ஆர்டர்கள் வரத் தொடங்கின. ஆர்டர்களுக்குத் தக்கன வீட்டிலேயே இயங்கத் தொடங்கினேன்.
HOME   2  CHERISH   என்கிற  Brand  Nameல் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் அவைகளை அனுப்பி வைத்தேன். அப்போதுதான் மேலும் யோசித்தேன். கோலப் படிகளோடு நின்றுவிடுவதா என்று?

இன்னும் கிரியேட்டிவ் ஆக வேறு என்ன செய்யத் தொடங்கினீர்கள்?

மர்வதற்கான மனைப் பலகைகள் உருவாக்கினேன். மரத் தொட்டில் கட்டைகள். மரப்பாச்சி பொம்மைகள் வைத்துப் பல வண்ணங்களில் பெயர்ப் பலகைகள் உருவாக்கினேன். பல்லாங்குழி பலகைகள் தயாரித்தேன். அவைகள் ஒவ்வொன்றினையும் வழக்கம்போல இஸ்டாகிராமில் வெளியிட்டேன். ஒவ்வொன்றுக்கும் ஆர்டர்கள் வந்து குவிந்தன. அவைகளைச் செய்து அனுப்பிக் கொண்டே இருந்தேன். தொடர்ந்து மரப் பலகைகளில் தெய்வ வடிவங்களை உருவங்களாக வரைந்து தயாரித்தேன். வேலு நாச்சியார், கோவலன், கண்ணகி வடிவங்களும் விநாயகர் வரலாறும் வரைபடமாக செய்து தந்துள்ளேன்.

இவைகளை எந்த மரங்களில் தயாரித்துத் தருகிறீர்கள்?

தேக்கு, மா, வேம்பு மரப் பலகைகளில் தயாரித்துத் தருகிறேன். மா, வேம்பு மர வேலைப்பாடுகள் அதன் விலை மதிப்பீடு குறைவாக இருக்கும். தேக்கு மரத்தில் ஆன வேலைப்பாடுகள் விலை மதிப்பீடு கூடுதலாக இருக்கும். வாடிக்கையாளர்கள் மேற்கண்ட எந்த மரத்தில் கேட்கிறார்களோ அந்த மரத்தில் செய்து அனுப்புகிறேன். விலை மதிப்பீடு அதிகமாக இருந்தாலும் தேக்கு மரமே மிக மிக உகந்தது. காரணம், தேக்கு மரத்தில் அழகு மட்டுமல்ல ஆயுளும் கூடுதலாக இருக்கும். பணம் கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை என்று வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தேக்கு மரத்தினையே தேர்வு செய்கின்றனர்.

உங்களுடைய மாஸ்டர் பீஸ் வொர்க்காக எதனைக் குறிப்பிடலாம்?

ரு பெண்மணி எங்களிடம் வந்தார். தேக்கு மரப் பலகையில் அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதைமாந்தர்களை அழகுமிகு வரைபட ஓவியங்களாக தயாரித்துத் தர முடியுமா? எனக் கேட்டார். பொன்னியின் செல்வனை ஆர்வமுடன் வாசித்து, அதில் மூழ்கிப்போனவள் என்பதால், நானும் உடனே சம்மதித்தேன். குந்தவை, பூங்குழலி, பெரிய பழுவேட்டரையர் என அதன் கதை மாந்தர்களைத் தேக்கு மரப் பலகையில் உருவாக்கினேன். இரண்டு அடி அகலம், மூன்று அடி உயரம் கொண்டதாக அதனை அமைத்துத் தந்தேன். வந்து பார்த்தவர்களுக்கு அதிக மகிழ்ச்சி. எல்லையில்லா ஆனந்தம். இப்போது அந்தப் பொன்னியின் செல்வன் கதை மாந்தர்களின் வடிவங்கள் அமைந்திட்ட அந்தத் தேக்கு மரப் பொக்கிஷம் (அவர்கள் பொக்கிஷம் என்றுதான் சொன்னார்கள்) அவர்களது வீட்டு வரவேற்பு ஹாலினை அலங்கரித்துக்கொண்டுள்ளது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com