டிப்ஸோ டிப்ஸ்!

டிப்ஸோ டிப்ஸ்!
Published on
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க…

சமையல் டிப்ஸ்கள்…

ர்பூசணி, வெள்ளரி சிறு துண்டுகள், ஒரு பெரிய நெல்லிக்காய் மூன்றையும் அரைத்து, அத்துடன் மிளகுத்தூள், சர்க்கரை சேர்த்து குடிக்க, உடல் புத்துணர்ச்சி பெறும். உஷ்ணத்திற்கும் நல்லது.

குக்கரில் பொருட்களை வேக வைக்கும்போது, தேவையான விசில் சத்தம் வந்ததும், உடனே அடுப்பை அணைக்காமல் அடுப்பை சிம்மில் இரண்டு நிமிடங்கள் வைத்தபின் அணைத்தால் பொருட்கள் சரியான பதத்தில் வெந்திருப்பதுடன் குக்கரையும் வழக்கத்தைவிட சீக்கிரம் திறக்கலாம்.

சேமியா கேசரி செய்யும்போது முதலில் தண்ணீரை மட்டும் ஊற்றி கொதிக்க வைத்து, சேமியாவை சேர்த்து வேகவிடவும். வெந்ததும் தண்ணீரை இறுத்துவிட்டு அதன் பின் சேமியாவுடன் நெய், சர்க்கரை, முந்திரிப்பருப்பு சேர்த்துக் கிளறினால் கேசரி ஆறிய பின்னும் உதிர் உதிராக இருக்கும்.

கேரட்டை வாங்கி தண்ணீர் தொட்டியிலோ அல்லது தண்ணீர் நிரம்பிய பக்கெட்டிலோ போட்டு வைக்கவும். இரவு நேரத்தில் தண்ணீரிலிருந்து எடுத்து விடவும். பிறகு மறுநாள் காலை தண்ணீரில் போட்டு வைக்கவும். இந்த முறையில் கேரட்டைப் பத்து நாட்கள் வரை வாடாமல் அழுகாமல் பாதுகாக்கலாம்.
– கோவிந்தராஜன், சென்னை

——————————————-

பொரித்த அப்பளத்தைப் பொடித்து 2 ஸ்பூன் துருவிய தேங்காய், கறிவேப்பிலை, புளி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் துவையல் ரெடி!

டின்னில் வைத்த பிஸ்கெட் நமர்த்துப் போகாமல் இருக்க, சிறிது மிளகைப் போட்டு வைத்தால் பிஸ்கட் மொறுமொறுவென்று புதிது போல் இருக்கும்.
ஆர். ஜோதிமணி, மேட்டுப்பாளையம்.

——————————————-

கோதுமை அரைக்கும்போது, அத்துடன் நாலுக்கு ஒரு பங்கு என்று பச்சரிசியும், எட்டுக்கு ஒரு பங்கு உளுந்தம் பருப்பும் சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டால் தேவையானபோது தோசை வார்க்கவும் செய்யலாம். சப்பாத்தி, பூரியும் செய்து கொள்ளலாம்.

காய்கறிகளை சமைக்கும்போது அவற்றின் பச்சை நிறம் போகாமலிருக்க, அவற்றை நறுக்கியதும் உப்பு கலந்த வெந்நீரில் சிறிது நேரம் போட்டு வைத்து விட்டுப் பிறகு ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்கு வேகவிட்டு எடுத்தால், பிரஷ்ஷாக இருக்கும்.
 -ச.லெட்சுமி, செங்கோட்டை

——————————————-

எளிய வைத்திய குறிப்புகள்!

வில்வபழம் சதை பகுதியை சர்க்கரை சேர்த்து சாப்பிட, குடல் சுத்தமடையும்.

கேழ்வரகு கூழ் அடிக்கடி சாப்பிட்டு வர, உடல் உறுதிபெறும்.

வேப்பிலை, மஞ்சள் அரைத்து பூச சர்ம நோய்கள் தீரும்.

தேங்காய் எண்ணெய், கோவை இலை சாறு கலந்து தடவ சொறி குணமாகும்.

சிறுநீற்று பச்சிலையை முகர்ந்தால் தலைபாரம் வலி நீங்கிவிடும்.

லவம் இலையின் பொடியை, ரத்த காயத்தின் மீது தடவ காயம் விரைவில் ஆறும்.

வேப்பிலையுடன் பெருவெங்காயத்தை சேர்த்து அரைத்துப் பூச ஆறாத ரணங்கள் ஆறும்.
செண்பகா, பாளையம்கோட்டை

——————————————-

 தண்ணீர்… தண்ணீர்…

தூங்கி எழுந்ததும் 2  தம்ளர் தண்ணீர் குடிப்பதால், உள்ளுறுப்புகள் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

சாப்பிடுவதற்கு 30 நிமிடம் முன் ஒரு தம்ளர் தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவும்.

குளிப்பதற்கு முன்பு ஒரு தம்ளர் தண்ணீர் குடிப்பதால் ரத்த அழுத்தம் குறைய உதவுகிறது.

தூங்கும் முன்பு ஒரு தம்ளர் தண்ணீர் குடிப்பதால் பக்கவாதம் மற்றும் ஹார்ட் அட்டாக் வராமல் தடுக்கலாம்.

நாள் ஒன்றுக்கு 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதால் 90% நோயிலிருந்து தப்பிக்கலாம்.
-எஸ். கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com