பாட்டொன்று கேட்டேன்…

பாட்டொன்று கேட்டேன்…
Published on
இது மங்கையர் மலரின் விவித பாரதி…
பகுதி-3

ங்கையர் மலர் விவித பாரதியில் இன்று நாம் கேட்க இருக்கும் பாடல்… தலைமுறை தலைமுறையாய் கேட்டு ரசிக்கும் பாடல் . உலகம் இருக்கும் வரை தேவைப்படும் கருத்துகள் அடங்கிய பாடல். அழிவில்லாத தேவ கானங்களில் ஒன்று. ஒவ்வொரு மனிதனும் மனதில் நிறுத்த வேண்டிய பாடல்.

தன்னம்பிக்கை கொடுக்கும் பாடல். பொது இடங்களில் இந்தப் பாடல் ஒலிக்கிறபோதுஅருகில் உள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரம் கண்டிப்பாக பார்த்துக் கொள்வார். சற்றுநேரம் யோசிப்பர். இதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.

திரு கண்ணதாசன் அவர்களின் முகம் பார்க்க நேரும்போதெல்லாம் இந்தப் பாடல் தான் நினைவுக்கு வரும் கண்டுபிடித்து விட்டீர்களா?

ஆம் நீங்கள் கண்டுபிடித்தது மிகவும் சரிதான் !1973 ஆம் ஆண்டு முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த 'சூரியகாந்தி' படத்தில் எம் எஸ் விஸ்வநாதன் இசையில், டிஎம் சௌந்தர்ராஜன் அவர்கள் பாடுவதாக அமைந்துள்ள பாடல்தான் 'பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது" இந்தப் பாடலை எழுதிய கவிஞர் காரைக்குடி ஈன்றெடுத்த காவியக் கவிஞனே திரையில் பாடுவதாக அமைந்திருக்கும். "தன்னை விட மனைவி அதிகம் சம்பாதிக்கிறாள் என்கிற தாழ்வு மனப்பான்மை பிடித்து ஆட்டும் கணவனின் ஈகோ தான் கதைக்களம். (ஈகோ பிடித்த கணவனாக முத்துராமன் வாழ்ந்திருப்பார் படத்தில்) (இந்தப்படத்தின் ஒன்லைன் தான் 'குஷி'என்றும் திரையுலகத்தில் ஒரு பேச்சு உண்டு) இந்தப் படத்தில் இடம்பெற்ற காவியப்பாடல் தான் "பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது" என்ற பாடல்.

"பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா 

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது.

அதில் அர்த்தம் உள்ளது.

 உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் 

உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் 

நிழலும் கூட மிதிக்கும்

மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது… அதில் அர்த்தம் உள்ளது . பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும் அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்…
(கணவன்- மனைவி குடும்ப ஒற்றுமைக்கு   இதை விட பொருத்தமாக வேறு வார்த்தைகள் இருக்கிறதா என்ன??)

மாட்டு வண்டி போகாத ஊருக்கு கூட பாட்டு வண்டியை கொண்டு சென்றவர் கவிஞர். கவிஞரின் ஆழமான எளிய வார்த்தைகளுடன் கூடிய பாடலை அதனுடைய தன்மை குறைக்காமல் இதமான மெட்டமைத்து அனைவரையும் ஈர்க்க வைத்த பெருமை எம்எஸ்வி அவர்களைச் சாரும்.

இந்த 'சூரியகாந்தி' திரைப்படம் மலையாளத்தில்' பிரியம்வதா' தெலுங்கில் 'மொகுடா பெல்லமா' கன்னடத்தில் "ஹென்னு சம்சாரதா கண்ணு' என்று ரீமேக் செய்யப்பட்டது. 150 நாட்களையும் தாண்டி ஓடிய படம் இது.

இந்தப்படத்தில் ஜெயலலிதா அவர்கள் சொந்தக் குரலில் பாடி நடித்து இருப்பார். (ஓ மேரே தில்ரூபா… "நான் என்றால் அது நீயும் நானும்"…)

இந்தப் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஜெயலலிதா அவர்களுக்கு பரிசு வழங்கிப் பாராட்டியது…அந்தக் காலத்தில் மிகப்பெரிய செய்தியாக இருந்தது.

இந்தப் படத்திற்கு நடனம் அமைத்தவர் தங்கப்பன் மாஸ்டர். (அவரின் நடன உதவியாளராக கமலஹாசன் இந்த படத்தில் பணிபுரிந்தார்)

வாழ்வின் எதார்த்தங்களை மிக அழகாக வெளிப்படுத்திய கவிஞரின் பாடல்களில் இதுவும் ஒன்று. அர்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள். பாடலைக் கேளுங்கள். உறவுகள்/ நட்புகள் அனைவரிடத்திலும் அன்பாக பழகுங்கள்.(நம் ஒட்டு மொத்த வாழ்க்கைக்கும் இந்த ஒரு பாடல் போதும்) கேளுங்க கேளுங்க கேட்டுக்கொண்டே இருங்க.

என்றென்றும் அன்புடன்,
ஆதிரை வேணுகோபால்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com