சூடான சம்மர்! கூலான சமாளிப்பு!

சூடான சம்மர்! கூலான சமாளிப்பு!
Published on

-ஆர். மீனலதா.

ம்மர்! அக்னி நட்சத்திரம்! அப்பப்பா! என்ன வெயில், என்ன வெயில்…  சலிப்போ, அலுப்போ  தேவையில்லை.  "சவாலே சமாளி" மாதிரி "சம்மர் சமாளி"தான்.

ஆயுர்வேதிக் முறையில் வாதா, பிட்டா, கபா என காலங்களைக் கூறுகிறார்கள். இதில் 'பிட்டா' எனப்படுவது கோடை காலமாகிய சம்மராகும்.

சம்மர் சமாளிப்பு:

  • அடிக்கடி தண்ணீரை அருந்துவது அவசியம்.
  • ஜன்னல் கதவுகளை லேசாக சாத்திவிட்டு மூங்கில், வெட்டிவேர் தட்டிகளை மாட்டிவிடலாம்.
  • சற்றே தளர்வான ஆடைகளை அணியலாம்.
  • வெளியில் செல்ல நேர்கையில் Sun Cream ஐ கைகள் மற்றும் முகத்தில் லேசாகத் தடவி, கூலிங் கிளாஸ் அணியவும்.
  • ஆறிய பாலில் சர்க்கரைக்குப் பதிலாக சிறிது தேன் விட்டு அருந்துவது நல்லது.
  • விட்டமின் C இருக்கும் உணவுகள், இளநீர், மாதுளம்பழச் சாறு உடலுக்கு ஏற்றது.
  • வீட்டில் எந்த அறை சிறிது கூலாக இருக்குமோ, அங்கே மதிய நேரத்தில் அமரலாம்.
  • சிறிது சந்தனத்தை பன்னீரில் கலந்து நெற்றி, பாதம், கைகள், நெஞ்சுப் பகுதிகளில் லேசாகத் தடவ, உடல் உஷ்ணம் குறையும்.
  • இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை அரை தம்ளர் தண்ணீரில் இரவே ஊறவைத்து மறுநாள் காலையில் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்கவும். ஊறிய வெந்தயத்தையும் சாப்பிடலாம். வாரம் 3 – 4 நாட்கள் இவ்வாறு செய்வது நல்லது.
  • அளவுக்கதிமாக சமையலில் எண்ணெய் சேர்ப்பது, தின்பண்டங்கள் சாப்பிடுவது போன்றவைகளைத் தவிர்க்கவும். காரம் குறைப்பது அவசியம்.
  • உடலில் சூடு சிறிது அதிகமாகிவிட்டால், ஒரு கரண்டி நல்லெண்ணெயைச் சுடவைத்து அதில் தோலுடன் கூடிய 2 பூண்டு, 5 – 6 மிளகு சேர்த்து ஆறவிடவும். இதை கால்களிலுள்ள பெருவிரல் நகங்களில் இரண்டு நிமிடங்கள் நன்கு தடவி வைத்து அலம்பினால் உடம்பு குளிர்ச்சியடையும். (அப்பத்தா வைத்தியம் இது)
  • கண்கள் எரிகிறமாதிரி இருந்தால், கைக்குட்டையைத் தண்ணீரில் நனைத்தெடுத்து கண்களை மூடி, அதன் மேல் வைத்தால், எரிச்சல் போய்விடும்.
  • மேலும், சமைத்த உணவுகளை அடிக்கடி சூடு பண்ணி சாப்பிடுவது, காலை 11 முதல் மதியம் 3 மணி வரை தேவையில்லாமல் வெளியில் சுற்றுவது, ஏ.சி அறையே கதியாக கிடப்பது, கோல்ட் டிரி்ங்ஸ், ஜில் தண்ணீர், ஜஸ்க்ரீம் அடிக்கடி எடுத்துக் கொள்வது போன்றவைகள் தவிர்க்கப்பட வேண்டியவைகள்.
  • சம்மர் கடுமையிலிருந்து சற்றே விடுபட ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் கூலாக இருக்கும் கோடைவாசஸ்தலங்களுக்குச் சென்று வந்தால் சுகமாக இருக்கும்.
  • இதற்காக வெளிநாடுகள் செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்தியாவிலேயே பல cool வாசஸ்தலங்கள் இருக்கின்றன. அவரவர் பட்ஜெட்டுக்குத் தகுந்தாற்போல செல்ல இயலும்.
எங்கே செல்லலாம்?
  • கசோல் (Kasol) – இமாச்சலப் பிரதேசம்.

சில்லுனு என்ஜாய் பண்ண ஏற்ற அருமையான இடம். மணிகரன், பார்வதி பள்ளத்தாக்கு போன்றவைகள் பார்க்க வேண்டிய இடங்கள்.

  • டிராஸ் (Dras) – ஜம்மு காஷ்மீர்.

நல்ல குளிர்ச்சியான பிரதேசம். இங்கிருக்கும் Suru Valley (சுரு பள்ளத்தாக்கு) அழகான இடம்.

  • சன்டாக் பூ – வங்கதேசம்.

இங்கேயிருக்கும் உயரமான குன்றின் மேல் இருந்து இமாலய மலைகளின் இயற்கை அழகை ரசிக்கலாம்.

  • தவாங் – அருணாசலப்பிரதேசம்

கடல் மட்டத்திலிருந்து 10,000 அடிகள் உயரத்திலமைந்துள்ள கடல் வாசஸ்தலம். இங்குள்ள 14 ஆம் நூற்றாண்டு Monastery பார்க்க வேண்டியதொன்றாகும்.

  • ராணிகேத் – உத்தராகண்ட்.

கடல் மட்டத்திலிருந்து 1869 மீட்டர் உயரத்தில் உள்ளது  ராணிகேத். இங்குள்ள  265 ஏக்கரில் அமைந்துள்ள பூங்காவில் காலாற நடக்கலாம். மியூஸியம், கோயில்கள் எல்லாம் இருக்கின்றன.

  • தரம்சாலா – இமாச்சலப் பிரதேசம்.

சம்மர் பயணத்திற்கும், ஆன்மிகப் பயணத்திற்கும் ஏற்ற இடம் இது. சூப்பர் கூலாக இருக்கும். சம்மர் தெரியாது. தலாய்லாமாவின் இருப்பிடம் இங்கே இருக்கிறது.

  • மகாபலேஷ்வர் – மராட்டிய மாநிலம்.

இந்தியாவிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் இங்கு  அநேகர் வருவார்கள். இங்குள்ள வென்னா ஏரியில் படகு சவாரி செய்யலாம். ஃப்ரெஷ் ஸ்ட்ராபெர்ரி, ராஸ் பெர்ரி, மல்பெர்ரி பழங்கள் சாப்பிட்டு மகிழலாம். 'பஞ்ச்கனி' சென்று 'டேபிள் டாப்' மீதிலிருந்து இயற்கையை ரசிக்கலாம்.

  • மூணாறு – கேரளா.

இந்த மலை ராணியில் எங்கெங்கும் பசுமை காணப்படும் தேயிலைத் தோட்டங்கள் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும். அருமையான சீதோஷ்ண நிலை இங்கு மனதிற்கும் உடலுக்கும்  ஆனந்தம் தரும்.

  • கொடைக்கானல், ஊட்டி போன்ற இடங்களும் கூலாக இருக்கும். இப்படி அநேகம் உள்ளன.

சம்மருக்கு எங்கேயும் போக முடியலையா? பட்ஜெட் இடம் தரவில்லையா? டோன்ட் ஒர்ரி! கூலான பல மால்கள்கள் இருக்கவே இருக்கிறது. அங்கே 3 -4 மணி நேரம்  சென்று  வின்டோ ஷாப்பிங் செய்து சமாளித்து விடலாம் சம்மரை. சரிதானே!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com