
தைப்பொங்கல்! தைப்பொங்கல்! தைப்பொங்கல் தமிழர் பொங்கல்!
தைத்திங்கள் தலைநாளில் தமிழின் பொங்கல்!
மைப்பொங்கல் விழிமாதர் வைக்கும் பொங்கல்!
மனையெங்கும் பரவிவரும் மகிழ்ச்சிப் பொங்கல்!
வயற்பொங்கல் நெல்மணிகள் வீடு சேரும்!
வளப்பொங்கல் ஊருக்குள் வரிசை கட்டும்!
துயர்ப்பொங்கல் தான்முடிந்து இன்பப் பொங்கல்!
தோழமையின் கதவுதட்டும் உறவுப் பொங்கல்!
வாலிபத்துப் பொங்கல்தான் வனப்புப் பொங்கல்!
வானருவி இறங்கிவரும் வெள்ளித் தொங்கல்!
சேலினத்துப் பொங்கல்தான் பெண்ணின் கண்கள்!
செவியோரம் தேனிறைக்கும் கவிதைப் பண்கள்!
நெய்ப்பொங்கல் இலைநிறையும்!
நெஞ்ச மெல்லாம் நேசத்தின் சுவை வழியும்!
வாசல் முற்றம் பெய்திருக்கும் வண்ணமழைக் கோலப் பொங்கல்!
பூசணிப்பூ கொலுவிருக்கும் பொலிவுப் பொங்கல்!
கன்னியர்க்கும் காளையர்க்கும் காதல் பொங்கல்!
கடைவிழியால் பேசுகின்ற இனிமைப் பொங்கல்!
பொன்னிதழில் முத்தமிடத் துடிக்கும் பொங்கல்!
பூங்கழுத்தில் பொற்றாலி ஏறும் பொங்கல்!
தேன்பொங்கல் திருநாளில் ஒன்றுகூடி
தித்திக்கும் புன்னகையால் வாழ்த்துக் கூறி
வான்பொங்கும் கதிரவனை வணங்கி நிற்போம்!
வாழியவே வையமெலாம் மகிழும் பொங்கல்!