‘குழந்தைக்கு ஹார்ட் வீங்கிடுச்சு!’

‘குழந்தைக்கு ஹார்ட் வீங்கிடுச்சு!’
Published on
– ஆ. கலைமலர்
ஓவியம் : பிரபுராம்

ன் கணவரின் போன் ரிப்பேர் ஆனதால் அதை சரிசெய்து கொண்டு வந்தார். அதைப்பற்றி நான் கேட்டபோது, "நோயாளியை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப்போய் மருத்துவம் பார்த்த மாதிரி ஆகிப்போச்சு, இந்த போனை ரிப்பேர் பண்ணி கொண்டு வந்தது" என்றார்!
''கொஞ்சம் விளக்கமாகத்தான் சொல்லுங்களேன்" என்றேன்.

''கடந்த பத்து நாட்களாக என் போன் குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. சாப்பாடு (சார்ஜ்) கொடுத்தால் மூன்றே மணி நேரத்தில் தானே வெளியேறி விடுகிறது. சரி பிறந்த இடத்திலேயே (போன் ஷோ ரூம்) கொண்டுபோய் காட்டினால் குணப்படுத்தி விடுவார்கள் என கொண்டுபோய் காட்டினேன்!

அவர்கள் பார்த்து விட்டு, 'பிறக்கிற வரைக்கும்தான் நாங்க பார்ப்போம். இப்ப இடையில் உடம்பு சரியில்லேன்னா, செல்வி மெஸ்ஸுக்கு எதிர்ல இருக்கிற டிஸ்பென்ஸரிக்கு (போன் சர்வீஸ் சென்டர்) கொண்டு போய் காட்டுங்க' என்றார்கள்!

அவசரமாக அங்கே ஓடினேன்.

நான் சொன்னதை பொறுமையாகக் கேட்ட அங்கிருந்த மருத்துவர் (சர்வீஸ் மேன்), 'செக் பண்ணி பார்க்கலாம் சார். சின்னதா தொந்தரவுன்னா மருத்து (ரீ பூட்) கொடுத்து சரி பண்ணிடலாம். பெரிய பிரச்னைன்னா ஆபரேஷன் (பார்ட்ஸ் மாற்றம்)தான் ஒரே வழி' என்றார்!

'செக் பண்ணி பாருங்க' என்றேன்.

'பிறந்த சர்டிபிகேட் (போன் வாங்கிய பில்) ஜெராக்ஸ் ஒண்ணு தரணுமே' என்றார்.

கீழே ஓடி, ஜெராக்ஸ் எடுத்து வந்த பின்தான் குழந்தையை உள்ளே தூக்கிப்போனார்.

என்னவோ ஏதோ என பதற்றம் என்னைத் தொற்றிக்கொண்டது!

சற்று நேரத்தில் வெளியே வந்தார். அவர் கையில் ஆடை களையப்பட்டு கிடந்தது என் போன் குழந்தை…!

'சாரி ஸார்… ஏதோ சாதாரண காய்ச்சல் (ரீ பூட்) பிரச்னையாக இருக்கும்னு நெனச்சோம். ஆனால், ஹார்ட் (பேட்டரி) வீங்கிடுச்சு. ஹார்ட் (பேட்டரி) மாற்று ஆபரேஷன் செய்தால்தான் உயிர் பிழைக்க முடியும்" என்றார்!

'எவ்வளவு செலவாகும்?' என்றதும்,

'சும்மா ஒரு 1200 ரூபா ஆகும்" என்றார்!

'என்ன சார்… பிறந்து பதினோரு மாசம்தான் ஆகுது. அதுக்குள்ளே இவ்வளவு செலவா? மருத்துவக் காப்பீடு (வாரண்டி) இல்லையா?' என்றேன்!

'ஒரு வருஷம் மருத்துவக் காப்பீடு (வாரண்டி) உண்டு. ஆனால், ஹார்ட்டுக்கு (பேட்டரிக்கு) ஆறு மாசம்தான் மருத்துவக் காப்பீடு (வாரண்டி)' என்றார் கூலாக!

'வேறு வழி இல்லையா?' என்றேன். என் பரிதாப முகத்தை பார்த்துவிட்டு, 'இப்போதைக்கு மருந்து (ரீ பூட்) கொடுத்து கொஞ்ச நாளைக்கு வச்சிருக்கலாம். ஆனால், அதனாலே உங்க குழந்தைக்கு மெமரி (வீடியோக்கள், போட்டோக்கள், முகநூல், வாட்ஸ்அப் போன்றவை) லாஸாயிடும். அதனால் அந்த மெமரிகளை மனப்பாடம் (பென்டிரைவில் பதிவு) செய்து விட்டீங்கன்னா மருந்து (ரீ பூட்) தந்திடாலாம்" என்றார்!

அதற்கு ஒப்புக்கொண்டு என் போன் குழந்தையின் மெமரியை மனப்பாடம் (பென்டிரைவில் பதிவு) செய்து கொண்டு கொடுத்தேன்!

அரை மணி நேரம் கழித்து என் போன் குழந்தையைக் கொண்டு வந்து கொடுத்தவர், 'மருந்து (ரீபெட்) தந்திட்டோம். ஆனாலும், உறுதி சொல்ல முடியல. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஹார்ட் (பேட்டரி) மாற்று சிகிச்சை பண்ணிடறது பெட்டர்' என்றார்.

அவர் அப்படிச் சொன்னதும் என் போன் குழந்தை என்னை பரிதாபமாகப் பார்த்தது!

அது, 'ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆகறதுக்குள்ளே என் ஹார்ட்டை (பேட்டரியை) மாத்தி வாழ வை…' என்பது போலிருந்தது.
எனக்குத் துணிச்சல் வந்து விட்டது. போன் குழந்தையை அவரிடமே திருப்பித் தந்து, 'ஹார்ட் (பேட்டரி) மாற்று ஆபரேஷன் பண்ணிடுங்க' என்றேன்!

மருத்துவர் (சர்வீஸ் மேன்) முகம் மலர்ந்தது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் ஹார்ட் (பேட்டரி) மாற்று ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்து வந்த என் போன் குழந்தை, மகிழ்வோடு என் இதயத்தை (சட்டை பாக்கெட்டில்) கவ்விக் கொள்ள, ஆபரேஷனுக்கான பணத்தை செட்டில் பண்ணி விட்டு புறப்பட எத்தனித்த போது…

"வீட்டுக்குப் போனதும் எட்டு மணி நேரம் தொடர்ந்து உணவு (சார்ஜ்) குடுங்க. அதற்குப் பிறகு வயிற்றில் பாதி உணவு (50%) காலியான பிறகுதான் உணவு (சார்ஜ்) தர வேண்டும். கொஞ்சம் காலியானதும் உடனுக்குடன் உணவு (சார்ஜ்) தந்தா மறுபடியும் ஹார்ட் (பேட்டரி) பிரச்னை வந்திடும். ஜாக்கிரதை" என கூடுதல் தகவல் எச்சரிக்கைத் தந்தார்!

இப்போது என் போன் குழந்தைக்கு வயிற்றில் பாதி உணவு (சார்ஜ்) ஜீரணம் ஆனதால் மறுபடியும் உணவு (சார்ஜ்) தருகிறேன்!

இப்போது என் போன் குழந்தை மனப்பாட (பென்டிரைவ்) செலவு என ரூபாய் 2000த்தை விழுங்கி விட்டு, புது ஹார்ட் உடன் (புது பேட்டரி) லா… லலலா… பாடிக்கொண்டு சந்தோஷமாக இருக்கிறான்!"

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com