சஞ்சீவராயர்

சஞ்சீவராயர்
Published on

நெடுங்கதை – 2

– லேzy
ஓவியம் : வேதா

ஞ்சீவராயர் கோயில் விஷயம் பேசப்பட்டதற்குப் பிறகு, இரண்டு நாட்கள் கோபாலன் ஏதோ முக்கிய அலுவலக வேலையில் மூழ்கிக் கிடந்ததில், அதை சுத்தமாக மறந்து விட்டிருந்தான்.

ஒரு நாள் மதியம் சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்தபொழுது, திண்ணையில் சங்கரன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தபொழுதுதான் அவனுக்கு காஞ்சிபுரம் கோயில் சமாசாரமே ஞாபகத்திற்கு வந்தது.

"வாண்ணா, சாப்பிடு. எலுமிச்சம் பழ சாதம்" என்றான் சங்கரன்.

"நீ சாப்பிடுடா சங்கரா. அம்மா சமைச்சு வைச்சிருப்பா. இரு போயிடாதே. உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்" என்று சொல்லிவிட்டு, உள்ளே சென்று தன் மதிய உணவைச் சாப்பிட்டு, மீண்டும் திண்ணைக்கு வந்தான். சீதாலஷ்மியும் உடன் வந்தாள்.

"சொல்லு அண்ணா… என்ன விஷயம்?" என்று கோபாலனைப் பார்த்துக் கேட்டான் சங்கரன்.

"ஞாயிற்றுக்கிழமை உனக்கு ஏதாவது சவாரி கிவாரி இருக்கா? இல்லை ஃபிரியா இருப்பியா?"

"சன்டேல ஒரு சவாரியும் இல்லைண்ணா. வார நாட்களில்தான் நம்ம பேங்க் மேடம்… அதாண்ணா, நீதானே காண்பிச்சுக் கொடுத்தே… கோமதி மேடம், அவங்களை ரங்கராஜபுரம் டு மவுண்ட் ரோடு பிக் அப் அண்டு டிராப்" என்றான் அரைகுறை ஆங்கிலத்தில்.

"சரி, அது இருக்கட்டும். அம்மாவுக்கு காஞ்சிபுரம் பக்கத்தில ஏதோ கோயில்ல வேண்டுதலாம். நீ வருவியா நாம மூணு பேரும் போயிட்டு வந்துடுவோம்" என்று கேட்டான் கோபாலன்.

"என்ன அண்ணா… வாடான்னு நீ சொன்னா கண்டிப்பா வரப்போறேன். உனக்கு இல்லாம வேற யாருக்கு ஓடுது இந்த வண்டி. ஆமாம்மா எந்தக் கோயில்?"

"ஒரு ஆஞ்சனேயர் கோயில்டா சங்கரா. சஞ்சீவராயர்னு பேரு" என்றாள் சீதாலஷ்மி.

"அண்ணா, சூப்பரோ சூப்பர். ஆஞ்சனேயர் நம்ம ஆளு. நூறு சதவீதம் நான் ரெடி" என்றான் சங்கரன் சந்தோஷமாக. அவன் ஒரு தீவிர ஆஞ்சனேயர் பக்தன்.

"ஆனா ஒண்ணு சங்கரா, இது மைலாப்பூரோ, திருவல்லிக்கேணியோ இல்லை. பெட்ரோல் கண்டிப்பா நான்தான் போடுவேன்… ஆமா சொல்லிட்டேன்" என்று அடித்துச் சொல்லிவிட்டான் கோபாலன்.

"ஆமாம்டா சங்கரா… நீ எதுவும் செலவு செய்யக்கூடாது. போன வாரம் கூட நம்ப மைலாப்பூர் போயிட்டு வந்ததுக்கு நீ காசு வாங்கவேயில்லை" என்று சீதாலஷ்மி சொன்னாள்.

"அம்மா, சும்மா இருங்க. இதோ இருக்கு மைலாப்பூரு. நீங்க எனக்கு எவ்வளவோ செய்யறீங்க. இதுக்குப்போய் என்ன காசு வேண்டியிருக்கு."

"இவன் இப்படிதான் அம்மா பேசுவான்" என்று சொல்லிக்கொண்டே கோபாலன் அலுவலகத்திற்குப் புறப்பட்டான். நடந்துகொண்டே, "சங்கரா, ஞாயிற்றுக்கிறமை காலை ஐந்து மணிக்கெல்லாம் புறப்படணும். மறந்துடாதே" என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

ஞாயிற்றுக்கிழமை காலையில 4.45 மணிக்கெல்லாம் சங்கரன் வண்டியை வாசலில் நிறுத்தி, "அம்மா, அண்ணே ரெடியா" என்று கேட்டுக்கொண்டே, வண்டியை துடைக்கலானான்.

"இதோ வந்துட்டேன்டா சங்கரா" என்று சொல்லியபடி, எல்லாவற்றையும் இரண்டு பெரிய பைகளில் போட்டு எடுத்து வந்தாள் சீதாலஷ்மி.

சங்கரன் ஓடிச்சென்று பைகளை வாங்கி, ஆட்டோ சீட்டுக்கு பின்புறம் அழகாக அடுக்கி வைத்தான்.

"என்னம்மா, சும்மா கமகமனு மணக்குது; இட்லியா?"

"ஆமாம்டா. உனக்குத்தான் தெரியுமே, நம் கோபாலனுக்கு ஹோட்டல்ல சாப்பிடறது அறவே பிடிக்காது, அதான்."

அதற்குள் கோபாலனும் வீட்டை பூட்டிக்கொண்டு வந்தான். சரியாக 5.00 மணிக்கெல்லாம் வண்டி புறப்பட்டது. சங்கர மடத்திற்கு அருகில் உள்ள வினாயகர் கோயில் வாசலில் வண்டியை நிறுத்தி, சங்கரன் மட்டும் இறங்கி ஒரு நிமிடம் சாமி கும்பிட்டான்.

மீண்டும் வண்டி புறப்பட்டது. சந்தோஷமாக பேசி சிரித்துக்கொண்டே மூவரும் சென்றனர்.

சுங்குவார்சத்திரத்தை தாண்டியவுடன் கோபாலன், "சங்கரா, வண்டியை ஓரம் கட்டிக்கோ. அண்ணாமலையானுக்கு பசி வந்துடுத்து" என்றான்.

தன் வயிற்றுப் பசியைத்தான் அண்ணாமலையான் என்பான்.

"ரைட் அண்ணா. நல்ல மர நிழலா பார்த்து நிறுத்தறேன்."

சீதாலஷ்மி எடுத்து வந்த இட்லிகளை மூவரும் ருசித்து பசியார உண்டனர். பிளாஸ்கிலிருந்து சூடான காப்பியை எடுத்து இருவருக்கும் கொடுத்தாள் சீதாலஷ்மி. "ம்ம்ம்… இது வேறையா. அம்மா, நான் வண்டி ஓட்டிக்கொண்டே தூங்கிடப்போறேன்" என்றான் சங்கரன் வேடிக்கையாக.

காலை சிற்றுண்டிக்குப் பிறகு மீண்டும் பிரயாணம் தொடங்கியது. ஜில் என்று காற்று வீசத் தொடங்கியதில் கோபாலன் ஒரு சிறு தூக்கம் போட்டான்.

சீதாலஷ்மி சங்கரனோடு பேசிக்கொண்டே வந்தாள். அதை அரை தூக்கத்தில் கோபாலனும் கேட்டு வந்தான்.

"டேய் சங்கரா, இந்த வருஷமாவது கல்யாணம் பண்ணிக்கப்போறியா இல்லையா? எத்தனை நாளைக்குத் தள்ளிப்போடப் போறே?"

"அதான் அம்மா… வந்தவாசியில என் மாமாவோட சொந்தத்தில ஒரு பொண்ணு இருக்குதாம். அதை ஒருமுறை பார்த்துட்டு வந்துடலாமுன்னு அம்மாவும் அக்காளும் சொல்லிக்கிட்டேதான் இருக்காங்க. இந்த மாச கடைசியிலே போயிட்டு வந்துடலாமுன்னு சொல்லி வச்சிருக்கேன், பார்ப்போம்" என்றான்.

"பெண் என்ன படிச்சு இருக்கு. இப்ப என்ன பண்ணின்டுருக்காளாம்?"

"ப்ளஸ் டு படிச்சிருக்காம். வீட்ல சும்மா இருக்க வேண்டாம்னு பக்கத்தில ஏதோ கம்பெனியில வேலைக்குப் போயிட்டு வராளாம்."

"என்ன கம்பெனி?"

"ஏதோ லெதர் கம்பனியாம்மா" என்றான் சங்கரன்.
(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com