
சூரியனார் கோயிலுக்கு அருகில், கஞ்சனூரை அடுத்துள்ளது கீழச்சூரியமூலை தலம். இங்கு சூரிய கோடீஸ்வர லிங்கத்தின் மேல் தினமும் சூரியன் தனது ஒளிக் கிரணங்களைப் படரவிட்டு வழிபடுகிறார். இந்நிகழ்வு காலை 6 மணியிலிருந்து 6.30 மணி வரை நடக்கிறது. அப்போது இறைவனை வழிபட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பார்வைக் கோளாறுகள் நீங்கும் என்பது நம்பிக்கை. பொங்கல் திருநாளன்று இங்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், ஆராதனை நடைபெறும். சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்வார்கள். சூரியனார் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளதாலும், கோயில் மூலவர் சூரிய கோடீஸ்வரர் என்பதாலும், தினமும் சூரியன் பூஜை செய்வதாலும் இத்தலம், 'கீழச்சூரியமூலை' என்று பெயர் பெற்றது.
கிரக தோஷம் நீங்க சூர்ய ஸ்லோகம்!
'ஸம்ரக்த சூர்ணம் ஸஸுவர்ணதோயம்
ஸகுங்குமாபம் ஸகுஸம் ஸபுஷ்பம்
ப்ரதத்த மாதாய ச ஹேம பாத்ரே
ஸஹஸ்ரபானோ பகவன் ப்ரஸீத'
வாழ்வில் நலம் தரும் சூர்ய ஸ்தோத்ரம்!
'ஓம் நமோ ஆதித்யாய…
ஆயுள், ஆரோக்யம், புத்திர் பலம்
தேஹிமே சதா!'
சூரிய பகவானை வணங்கி, வாழ்வில் வளம் பெறுவோம்.
– எஸ்.ராஜம், பி.பாரதி, ஸ்ரீரங்கம்.
……………………….
அகில உலகங்களும் நலம் பெற, நல்வாழ்வு வாழ பிரத்யட்ச தெய்வமான சூரிய பகவானின் அருள் வேண்டும். மாதங்கள் பன்னிரெண்டு என்பது போல, சூரியனிலும் பன்னிரு விதமான சூரியன்கள் உண்டு. அவற்றை, 'துவாதச ஆதித்யர்' என்பர். அந்த துவாதச ஆதித்யர்களுக்கும் பெயர்கள் உண்டு. அவை இந்திரன், தாதா, பகன், பூஷா, மித்ரன், வருணன், ஆர்யமா, அர்சிஸ், விவஸ்யன், துவஷ்டா, சவிதா, விஷ்ணு எனப்படும்.
1. சித்திரை மாதத்தில் சிங்கார ஒளி வீசும் சூரியனின் வடிவம் தாதா. ததா என்றும் சொல்வர். உயிர்களின் தோற்றத்திற்குத் தேவையான வெம்மையைத் தருபவன். இவனது வெப்பத்தின் உச்சமே கத்ரி.
2. ஆர்யமா என்பது வைகாசியில் வலம் வரும் சூரியனின் வடிவம். காற்றுக்குக் காரணமான கதிரவன் இவன்.
3. சந்திரனுக்கு ஒளி தந்தும், சமுத்திரங்களைக் கட்டுப்படுத்தியும், உயிர்களின் தோழனாக இருப்பவன் என்பதால் ஆனியில் வலம் வரும் ஆதவன் பெயர் மித்ரன்.
4. ஆடியில் காத்தடிச்சா, ஐப்பசியில் மழை வரும். அப்படி வர வேண்டுமானால் வருணனின் அருள் வேண்டும். ஆதவனின் ஆடி மாத வடிவமே வருணன்.
5. மழைக்கும் இடிக்கும் காரணம் மேகமே. அதனைக் கட்டுப்படுத்துபவன் இந்திரன். அவனே ஆவனியில் சுற்றி வரும் சூரியன்.
6. விவஸ்யன் என்றால் வானில் தோன்றும் அக்னி என்று அர்த்தமோ! எல்லா வகை அக்னிக்கும் ஆதாரமான இவனே, புரட்டாசியில் பூமியைச் சுற்றி வருபவன்.
7. துவஷ்டா என்பது ஐப்பசி மாத சூரியனின் அழகுப் பெயர். மூலிகைகளும் தாவரங்களும் வளர்வது இவன் ஒளியால்தான். ஆரோக்கியத்தில் கவனம் அதிகம் தேவைப்படும் மாதம். இவனை வழிப்பட்டால் நோய்கள் எல்லாம் ஓடும்.
8. பகவானே பகலவனாக ஒளி சிந்தும் மாதம் கார்த்திகை. சிவன் ஜோதியாகப் பிரகாசித்தால், விஷ்ணு தீபப் பிரகாசராகத் திகழ்வார். சூரிய நாராயணனின் திருநாமம் விஷ்ணு. இதன் அர்த்தம் எங்கும் இருப்பவர். இது பகவானுக்கும் பகலவனுக்கும் பொருந்தும்.
9.அம்சுமான் எனும் அழகுத் திருநாமம் மார்கழி மாதத்து சூரியனுக்கு. குளிர்ப்பனி வீசினும் இம்மாதத்தில் இதமான வெம்மை தந்து இன்னருள் புரிபவன்.
10. தை மாதத்தில் பகன் எனும் திருநாமத்துடன் வலம் வருகிறான் பகலவன். எல்லா உயிர்களின் உடலிலும் உயிர் நிலைக்கக் காரணமான வெம்மையாக இருப்பவன் இவனே.
11. தையிலே விதைத்தவை மாசியில் முளைத்து வர வேண்டாமா! அதற்கு அவசியமான வெப்பத்தினை அளிப்பவன் பூஷன். இவன் அருளால் பயிர்கள் விளைவதாலேயே உணவுக்குப் பெயர் போஷன்.
12. முளைத்த பயிருக்குத் தெளிக்கும் நீராக பங்குனிப் பழம் என்று மழை வருமோ! அதற்குக் காரணம் பங்குனியில் வலம் வரும் பகலவன் ஆறு, குளத்து நீரை அள்ளி விழுங்கி மேகத்தில் தெளிப்பதுதான் பங்குனி சூரியன் பர்ஜன்யனி.
……………………….
ஒரிஸ்ஸாவிலுள்ள புவனேஸ்வரத்திலிருந்து 65 கி.மீ தூரத்தில், கொனார்க் கடற்கரைக்கு அருகில் உள்ளது சூரியன் கோயில். ஸ்ரீகிருஷ்ணனின் மகன் சாம்பன் வழிபடுவதற்காகக் கட்டப்பட்டதாக புராணம் கூறுகிறது. சூரியன் நின்ற நிலையிலும், அவரது இரு பக்கங்களிலும் நான்கு தேவியர்கள் உள்ளனர். ஒருபுறம் த்யெலி, ப்ருத்வி எனும் தேவியரும் மற்றொரு புறம் உஷா, சந்தியா தேவியர்களும் காட்சி தருகிறார்கள். இக்கோயில் மாபெரும் தேர் வடிவில் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. இத்தேரி்ன் ஒவ்வொரு பக்கத்திலும் பன்னிரெண்டு சக்கரங்கள் உள்ளன. இத்தேரினை ஏழு குதிரைகள் இழுத்துச் செல்லும் தோற்றத்தில் அற்புதக் கலை நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மென்மையான பொங்கலை சூரியனுக்கு நைவேத்யம் செய்கிறோம். இது குறித்து புராணத்தில் சுவாரஸ்ய தகவல் ஒன்று உள்ளது. பார்வதியின் தந்தையான தட்சன், சிவனை அழைக்காமல் ஒரு யாகம் செய்தான். சூரியன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் யாகத்திற்கு வந்தனர். இதையறிந்த பார்வதி தேவி, மருமகனை அழைக்காமல் யாகம் நடத்தியது பற்றி தந்தையைக் கேட்டாள். தட்சனோ, சிவனை நிந்தித்துப் பேசினான். இதைக் கேட்டு சூரியன் கலகலவென சிரிக்க, விஷயம் சிவனை சென்றடைந்தது. சிவன் கோபத்தில் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி தேவர்களைத் தண்டித்தார்.
சூரியனிடம் வீரபத்திரன், 'நீதானே
பல் தெரிய சிரித்தவன்' என்று
சொல்லி ஓங்கி கன்னத்தில்
அறைந்தான். பற்கள் நொறுங்கி
விழுந்தன. இதனடிப்படையில்
காஞ்சிப் பெரியவர் சூரியனை பல்
இல்லாத கிரகம் என்றும், பொங்கலன்று அவருக்கு வழுக்கை தேங்காய்
படைக்க வேண்டும் என்றும்
குறிப்பிடுவார். இதற்காகவே
அப்படியே விழுங்கும் சர்க்கரைப் பொங்கலை சூரியனுக்குப்
படைத்து வழிபடுகிறோம்.
– எஸ்.மாரிமுத்து, சென்னை