அன்புவட்டம்!

அன்புவட்டம்!
Published on
தமிழ் வருடப் பிறப்புக்கு வாசகியருக்கு, அனு மேடம் சொல்லும் சேதி மற்றும் பிரதிக்ஞை என்னவோ?

-ச.சிவசங்கரி சரவணன், செம்பனார்கோவில்

சேதி:- என்னத்த சொல்லப் போறேன் புதுசா? "'பிளாஸ்டிக்கை' முடிஞ்ச அளவு தவிருங்க! தாய் மண்ணைக் காப்பாத்துங்க!"ங்கிற டயலாக் எல்லாம் பழசு!

"பிளாஸ்டிக் ஒரு விஷமுங்க; ரத்த மாதிரிய சோதனை செஞ்சா, மைக்ரோமில்லி அளவு பிளாஸ்டிக் துகள் அதுல கலந்து தெரியுதாம்!" அதனால… கண்மணீஸ்… 'Say no to plastic in any form!'

சபதம்:- துணிப் பையோ, வயர்கூடையோ (ஓ… அதுவும் பிளாஸ்டிக்கோ?), இல்லாமல் வெளியே போகவே கூடாது. ஏன்னா, சில பெண்கள், வீட்டு வாசலில் விற்கும் வெங்காயம், இடியாப்பம் போன்றவற்றை வாங்கக்கூட கூடையோ, கிண்ணமோ எடுத்துப் படியிறங்கிப் போகத் தயங்குகிறார்கள். (அவ்வளவு நாகரிகமாம்!) ஸ்டைலைக் குறைச்சுப்போம்! நம்பள, 'சரியான நாட்டுப்புறம்'னு நினைச்சாலும் பரவாயில்லை. மஞ்சள் பை மங்களகரம்… நம் மண்ணுக்கும்… மனசுக்கும்.

………………………………….

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செயல்பாடுகள் பற்றி?

-சி. கார்த்திகேயன், சாத்தூர்.

ஹா… ஓஹோ.. பேஷ்… பேஷ்தான்! அமைச்சர் சேகர்பாபு, உண்மையிலேயே பக்திமான். சபரி மலைக்குத் தவறாது போகும் தீவிர அய்யப்ப பக்தர். கூடவே, துர்கா ஸ்டாலினும், பக்திப் பழமாகக் கோயில் கோயிலாகச் சுற்றி வருவதால், சேகர்பாபு இன்னும் உற்சாக வண்டாகிவிட்டார்.

'அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்" என்ற திட்டத்தில் சில, பல அதிருப்திகள் ஆங்காங்கே இருந்தாலும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, திருப்திகரமே!

கோயில் நிலங்களை மீட்பது, வாடகை வசூல், உள்ளூர் நபரையே கோயிலின் தக்காராக நியமிப்பது, நிறைய கோயில்களில் திருப்பணி செய்வது என தடாலடி தங்கப்பனாகவே தெரிகிறார்.

அரசியலை அண்ட விடாமல் நல்லாவே நடத்துங்க சாமி!

………………………………….

உலக இட்லி தினத்தில் எவ்வளவு இட்லிகள் சாப்பிட்டீர்கள்?

-வாசுதேவன், பெங்களூரு

ய்யோ… நீங்களாவது கேட்டீங்களே! நல்லதா ஒரு ஸ்டோரிய வெச்சுக்கிட்டு, எப்படாப்பா ரிலீஸ் பண்ணலாம்னு துடியா துடிச்சுட்டிருந்தேன். தாங்க்யூ ஸோ மச் வாசுதேவன் ஸார்!

உண்மையில, அன்னிக்கு நான் இட்லி சாப்பிடலை. அதனால என்னோட கோட்டாவான நாலு இட்லி மிஞ்சிப் போச்சு… வீணாக்க மனசு வருமா? சாயங்காலம் 'சூர்யவம்சம்' தேவயானி மாதிரி, இட்லி உப்புமா செஞ்சு சாப்பிடலாம்னு நெனைச்சுதான் கிச்சனுக்குள்ளப் போனேன். அப்புறம் என்ன தோணுச்சோ? டேக் டைவர்ஷன்! மேக் எ ஃப்யூஷன்னு… இட்லியைச் சின்னச் சின்ன சதுரமா வெட்டினேன். அப்படியே எண்ணெயில கோல்ட் கலர்ல, கரகரப்பா வறுத்து, உப்புத் தூவினேன். அது மேல லேசா இட்லி மிளகாய்ப்பொடி…நல்லா கலகலப்பா கலந்து ஒரு பேஸன்ல கொட்டினேன்.

அப்படியே சாப்பிடலாம்னு நினைச்சவளுக்கு டேக் டைவர்ஷன்… மேக் இட் மெக்ஸிக்கன்னு தோணவே, சிப்போட்லே சில்லி சாஸ் (Chipotle dressing), மேயனஸ் (Mayonnaise), பூண்டு சாஸ், நம்பூரு மேகி டெமோடோ சாஸ் எல்லாம் ஒரு ஸ்பூன் போட்டு, புரட்டி வெச்சா, சொன்னா நம்ப மாட்டீங்க… எனக்கே ஒரு நாலு துண்டுதான் கிடைச்சுது.

"இட்லியா… வேணாம்"னு சொன்ன வாயும் கையும் துழாவித் துழாவி சாப்பிடுது!

எப்படியோ புறக்கணிக்கப்பட்ட நம்பூரு சாதா பழைய இட்லி, சர்வதேச டிரஸ்ஸிங் பெற்றதும் முக்தி அடைஞ்சுது! ஓம் சாந்தி!

………………………………….

'கொரோனா விடை பெற்றுவிட்டது' என நிம்மதிப் பெருமூச்சு விடலாமா மேடம்?

-கங்கா கணபதி, பெங்களூரு

ல்லையாமே! ஷார்ட் கமர்ஷியல் பிரேக் விட்டுட்டு, ஹாய்யா
ஒரு டீ அடிக்க பிரேசில் பக்கமா போயிருக்காமே! உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் சொல்லித்தான் எனக்கே தெரியும்.

"இரண்டு வருஷமா கொரோனாவுடன் உலகம் போராடிக்கிட்டிருக்கு. நமது மக்களுக்கு வழக்கமா தரப்படும் இதர வேக்ஸின்களை தக்க இடைவேளியில் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கு. குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சை, இதர நோய்களுக்கான சிகிச்சைகூட பல நாடுகளில் கிடைக்கவில்லை. இதையெல்லாம் வெச்சுப் பார்க்கும்போது, மீண்டும் ஒரு பெருந்தொற்று எந்த ரூபத்திலும் வரக்கூடிய சாத்தியம் இருக்கு"ன்னு எச்சரிக்கை செஞ்சுருக்காரு!

சூதானமா இருந்துக்குங்க மக்கா!

ஆமா… சொல்லிப்புட்டேன்! அம்புடுதேன்!!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com