ஒருவார்த்தை!

ஒருவார்த்தை!
Published on

துரையை எரித்த கண்ணகி வாழ்ந்த ஊர்! அங்கே ஓர் ஆசிரியை.. மன்னிக்கவும் ஆ'சிறி'யை! அவர் செய்த காரியம் பெண் இனத்துக்கும் அவமானம்; ஆசிரியர் பணிக்கும் இழுக்கு!

தன்னிடம் ட்யூஷனுக்கு வந்த பதினாறு, பதினெட்டு வயது மாணவர்களை எப்படியோ மயக்கி, உல்லாசமாய் இருந்து, வீடியோ எடுத்திருக்கிறார் இந்த அரசுப் பள்ளி ஆசிரியை. அவரையும், வீடியோவைப் பரப்பிய அவரது கள்ளக் காதலனையும் கைது செய்து போலிஸ் சிறையில் அடைத்துள்ளனர்.

****************************

'ஆயிரம் நல் ஆசிரியைகள் தொண்டைக் கிழியக் கத்தி, பாடம் நடத்தும்போது, இதுமாதிரியான பெண்களால், நாம் தலை குனிய வேண்டியிருக்கிறதே!' என்று வெறுப்பு மூண்ட அதே சமயம், எனக்கு வாய்த்த ஆசிரியப் பெருமக்களை, என் கல்விக் காலத்தை அசைப் போடுகிறது மனசு!

நூற்றுக்கு நூறு வாங்கச் சொல்லி ஆசிரியரும் கட்டாயப்படுத்தவில்லை; வீட்டிலும் "பாஸ் ஆனால் போதும்" என்ற தன்னிறைவுத் தங்கங்கள். அதனால் ட்யூஷன் போக வேண்டிய அவசியமில்லை.

வாத்தியார்களோ, தாவணி போட்ட பெண்கள் அருகில் நின்று கூட பேச மாட்டார்கள். அவ்வளவு எச்சரிக்கை! அது ஓர் எளிமையானப் பள்ளி… காலில் செருப்பில்லாமல், சத்துணவு தட்டுடன் படிக்க வரும் மாணவர்களும் இருந்தனர்.

காலையில் அவரவர் வகுப்பறைகளை, கரும்பலகையை மாணவர்களேதான் சுத்தம் செய்யணும்… பானையில் நீர் பிடிக்கணும்.

வெள்ளிக்கிழமை மாலை, ஜாதி, மதம் பாராமல் 'ரகுபதி ராகவ ராஜா ராம்', 'நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும்' போன்ற தெய்விகமும் தேசியமும் கலந்த பாடல்கள் பாடப்படும்.

சனிக்கிழமைகளில் மாணவிகளுக்கு 'கிராஃப்ட்' கிளாஸ், மாணவர்களுக்கு 'வர்க் ஷாப்.'

மாதம் ஒருமுறை குடிமைப் பயிற்சி வகுப்பு. தந்தி அனுப்புவது, மணியார்டர் ஃபார்ம் நிரப்புவது, ஃபஸ்ட் எய்ட், போக்குவரத்து விதிகள், மாக் பார்லிமென்ட், எலக்ஷன் ரூல்ஸ்… இப்படி எல்லாமே எக்ஸைடிங்!

இது தவிர, மாணவர்களே நடத்திய சின்ன கேன்டீன் + ஸ்டேஷனரி. கூடவே என்.ஸி.ஸி. ஸ்கவுட்ஸ், இந்தி வகுப்புகள்! போதுமா?

****************************

து பள்ளிப்புராணம் என்றால், கல்லூரி சாட்சாத் கோயிலேதான்! கட்டட அமைப்பே கோபுரங்களுடன், பக்தி மணம் கமழ இருக்கும். மாணவிகளைப் புடம் போட்டத் தங்கமாக வார்க்க அந்த சன்னியாசிப் பெண்கள் பட்டப்பாடு! அசல் ஜுவல்லரி க்ருமிங் யூனிட்தான்!

படிப்பு வரலைன்னாகூட பொறுத்துக்குவாங்க.. ஒழுக்கம் இல்லைன்னா டீ.சி.தான்!

அங்கேயும் 'Articulation and Idea Aixation' (AIF) என்ற பயிற்சி இருந்தது. இராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்கள் பற்றி மாணவிகளே தயார் செய்து உரையாற்ற வேண்டும்.

இப்படியெல்லாம் இருந்த கல்வி, இப்போது, எப்போது தரங்கெட்டது? மனம் கசிகிறது.

****************************

சரி, நடந்ததை எண்ணி வருந்தாமல் இனி என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்.

  • ஊடகங்களில், சினிமாக்களில் ஆசிரியர்களை 'கெக்கேபெக்கே' எனச் சித்திரிக்காமல், கெளரவமாகக் காட்ட வேண்டும். (நடிகை ஷகீலா ட்யூஷன் எடுக்கும் காட்சி, உங்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல டியர்ஸ்!!)
  • தங்கள் மதிப்பை மாணவர்கள் உணரும் வண்ணம், ஆசிரியர்களும் தேர்ந்த அறிவும், சுய ஒழுக்கமும் கொண்ட மேன்மக்களாக நடக்க வேண்டும். இவர்களுக்கு உறுதியான வழிகாட்டுதலும், முறையான கவுன்சிலிங்கும் தந்த பிறகே ஆசிரியர் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
  • அனைவரும் மறந்தே போன 'மாரல் இன்ஸ்ட்ரக்ஷன்' எனப்படும் போதனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அதை ஜாதி, மத, இன துவேஷமோ, அரசியல் ஆர்வமோ இல்லாத தூய்மையானவர்கள் கண்காணிக்க வேண்டும்.
  • பாலியல் என்பது மனம் மற்றும் கற்பனை சம்பந்தப்பட்டது. அது இளம் நெஞ்சங்களில் தூண்டப்படும்போது, காதல், கூட்டுப் பாலியல் பலாத்காரம் என என்னென்ன சீர்கேடுகளுக்கோ ஆளாகித் தொலைகிறார்கள். இதனால் பெற்றோர்கள் பழியும் பாவமும் ஏற்றுத் துன்புறுகிறார்கள்.
  • சிறுவயதிலிருந்தே மாணவர்களை நல்ல விஷயங்களில் மனத்தை மடை மாற்றினால், போதை, காமம் போன்றவை தலைக்கு ஏறாமல் ஒரளவாவது தணிக்கலாம்.

பூனைக்கு மணி கட்ட

கல்வித்துறை தயாரா?

இல்லை என்றால் வீடும் ஊரும் எலி வேட்டைகளால் நாறிப் போவதைத் தடுக்க முடியாது!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com