பாதுகாப்பான தாய்மை தினம் ஏன் கடைபிடிக்கப்படுகிறது?

பாதுகாப்பான தாய்மை தினம் ஏன் கடைபிடிக்கப்படுகிறது?
Published on
 -ஜி.எஸ்.எஸ்.

பாதுகாப்பான தாய்மை தினமாக ஏப்ரல் 11 இந்தியாவில் கொண்டாடப் படுகிறது.  இப்படி அறிவித்த முதல் நாடு இந்தியாதான். மதிப்பிற்குரிய கஸ்தூர்பா காந்தி பிறந்த தினம் இது. அன்னையர் தினம் என்று ஒன்று இருக்க, அதென்ன பாதுகாப்பான தாய்மை தினம்?

பல காரணங்கள் உண்டு.  2007 என்ற ஒரே வருடத்தை எடுத்துக் கொண்டால் அந்த ஆண்டில் (உலக அளவில்) கருவிலேயே இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 32 லட்சம்.  தவிர பிரசவத்துக்குப் பிறகு 40 லட்சம் பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளனர்.  பிரசவத்தின்போதும்  கருத்தரித்த நிலையிலும் ஐந்து லட்சம் தாய்மார்கள் உயிரிழந்திருக்கிறார்கள். (நம் நாட்டில் கருத்தரிக்கும் பெண்களில் போதிய கவனிப்பு இல்லாத காரணத்தினால் 44 ஆயிரம் பெண்கள் ஆண்டுதோறும் இறக்கிறார்கள்).  இப்படி இழந்தவர் களில் கணிசமானவர்கள் உரிய சூழலும் மருத்துவ வசதிகளும் கிடைத்திருந்தால் உயிர் பிழைத்திருப்பார்கள்.

அதுவும் கொரோனா காலகட்டத்தில், இந்தியாவில் கருத்தரிக்கும் காலகட்டத்தில் நான்கு முறை மருத்துவ ஆலோசனைக்கு உட்படும் பெண்களின் எண்ணிக்கை சரி பாதியாகக் குறைந்து விட்டதாம்.  அதுமட்டுமல்ல மருத்துவமனைகளில் நடக்கும் பிரசவங்களின் எண்ணிக்கை 79 சதவிகிதம் குறைந்துவிட்டது.  இவை போதாதா பாதுகாப்பான தாய்மை என்பதற்கு மேலும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதற்கும், அதற்கான தினத்தில் மேலும் விழிப்புணர்ச்சியை அளிக்க வேண்டும் என்பதற்கும்?

ஒரே ஒரு எடுத்துக்காட்டை இங்கு பார்க்கலாம்…
ன்ஸ்வரா என்பது ராஜஸ்தானில் உள்ள ஒரு நகரம்.  இங்குள்ள பிரபல மகாத்மா காந்தி மருத்துவமனையில் 2017இல் ஜூலை-ஆகஸ்ட் ஆகிய இரண்டே மாதங்களில்  90 பச்சிளம் குழந்தைகள் இறந்துவிட, இது குறித்து விசாரணை நடத்த ஒரு குழு நியமிக்கப்பட்டது.  அங்கு பிரசவம் நடைபெற்ற பெண்களின் வீடுகளுக்கும் சென்று அவர்களிடம் விசாரணையை மேற்கொண்டார்கள்.

விசாரணையின் முடிவில் அளிக்கப்பட்ட அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அந்த மருத்துவமனையில் பணியாற்றிய மூன்று மருத்துவர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள்.  அந்த அறிக்கையில் காணப்பட்ட பல கண்டுபிடிப்புகள் பெரும் அதிர்ச்சியை அளித்தன. அந்த மருத்துவமனையில் 8 மகளிர் நல மருத்துவர்கள் இருந்தாலும், பல சமயம் பிரசவங்களை செவிலியர்களே பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  சிசேரியன் முறையில் பிறந்த குழந்தைகளை மருத்துவமனை சரியாகப் பார்த்துக் கொள்ளத்  தவறியது.  பிரசவத்தை சீக்கிரமே வரவழைக்க ஆக்சிடோசின் என்ற பொருள் கணிசமானவர்களுக்கு அளிக்கப் பட்டிருந்தது. இது மிக மிகத் தேவை எனும்போது மட்டுமே அளிக்கப்பட வேண்டும். அந்த மருத்துவமனையில் பிரசவப் பிரிவில் பணியாற்றிய 8 செவிலியரில் இருவர் மட்டுமே இந்தப் பிரிவு தொடர்பான சிறப்பு பயிற்சி எடுத்தவர்கள். இதனால் சிக்கலான பிரசவத்தின் போது குழந்தைகளை வெற்றிடத்தை உருவாக்கி வெளியே எடுக்கும் முறை (வாக்குவம் சக்‌ஷன்) பின்பற்றப்படவில்லை.  பிரசவப்  பிரிவில் பயன்படுத்தப்பட்ட துணிகள் கிருமிநீக்கப்பட்டவை (ஸ்டெரிலைஸ் செய்யப்பட்டவை) அல்ல. அங்கிருந்த நான்கு அறுவை சிகிச்சை தியேட்டர்களில் ஒன்றே ஒன்றில்தான்  கதிரியக்க முறையில் வெப்பப்படுத்தும் வசதி இருந்தது.  அங்கு பணியாற்றிய செவிலியர் தங்களுக்குள் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டதும், பிரசவம் நிகழ்ந்த தாய்மார்களிடம் பணம் கேட்டு கட்டாயப்படுத்தியதும் விசாரணையில் புலப்பட்டது.

சரி, பாதுகாப்பான தாய்மைக்கு எந்த வழிமுறைகளில் முக்கியத்துவம் அளிக்கப்பட வே​ண்டும்? 

தாய் மற்றும் சேய்க்கு தனிப்பட்ட கவனம் அளிக்கப்பட வேண்டும்.  மிகச் சிறந்த விதத்தில் தாயின் உடல் பேணப்பட வேண்டும். குடும்பக் கட்டுப்பாடு குறித்து பெண்களுக்குத் தெளிவான தகவல் அளிக்கப்பட வேண்டும்.  பிரசவத்துக்கு முன்பும், பிரசவத்தின் போதும், அதைத் தொடரும் காலகட்டத்திலும் அவர்களுக்கு மிகச்சிறந்த மருத்துவ பாதுகாப்பும் சிகிச்சையும் அளிக்கப்படவேண்டும்.  தாய் மற்றும் சேய் உடல் நலத்துக்கு எந்தவித ஊறுகள் (ரிஸ்க்) உருவாக அதிக வாய்ப்பு உள்ளனவோ அவை களையப்பட வேண்டும். பாதுகாப்பான கருத்தரிக்கும் காலம், பாதுகாப்பான பிரசவம் ஆகிய இரண்டும் பாதுகாப்பான தாய்மையின் முக்கிய கட்டங்கள் எனலாம்.

ஒரு பெண் கருத்தரித்த நிலையிலோ பிரசவத்தின் போதோ அல்லது பிரசவித்த 6 வாரங்களுக்ளோ இறந்தால் அதை தாய்மை தொடர்பான இறப்பு என்கிறார்கள்.  இதை முடிந்தவரை தவிர்க்க சிலவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கருத்தரித்த காலத்தில் எவற்றை செய்ய வேண்டும் எவற்றைச் செய்யக் கூடாது என்பது குறித்த தெளிவு பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும்.  சிலவகை கருத்தரித்தலில் ரிஸ்க் அதிகம் உண்டு (மிகவும் பருமனான அல்லது மிகவும் குள்ளமான வடிவம் கொண்ட தாய்மார்கள், மிக அதிகமான வயதுக்குப் பிறகு கருத்தரிக்கும் பெண்கள்).  அவர்கள் மேலும் எந்த விஷயத்தில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை அறிய வைக்க வேண்டும்.  சத்துக்கள் அடங்கிய உணவை அவர்கள் பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.  கருத்தரிக்கும் காலத்திலும் பிரசவிக்கும் போதும் சிக்கல்கள் ஏற்பட்டால் அவற்றை சமாளிக்கும் வழிமுறைகள் குறித்து அவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும்.  தாய்க்கு இறப்பு ஏற்படுவதற்கு முக்கியமாக மூன்று காரணங்கள் உண்டு. அவற்றை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். 

முதல் காரணம்: சமூகம் தொடர்பானது.  மிக இளம் வயதிலேயே நடைபெறும் திருமணம் மற்றும் கருத்தரித்தல். போதிய இடைவெளி இன்றி அடுத்தடுத்த பிரசவம். மகன்தான் வேண்டும் என்ற மனநிலை. நேரக்கூடிய அபாயங்களை பற்றியும் அறிகுறிகளை பற்றியும் அறிந்து கொள்ளாமல் இருத்தல்.  வெகு தாமதமான மருத்துவ ஆலோசனை.

அடுத்த காரணம்: மருத்துவம் தொடர்பானது.  கருவின் ஒரு பகுதி சுலபத்தில் வெளியேறாதது, ரத்தக் குழாய் வெடித்தல், நுண்ணுயிர்களின் தொற்று காரணமாக ரத்தம் வடிதல் போன்றவை சில எடுத்துக்காட்டுகள்.

மூன்றாவது காரணம்: போதிய வசதிகள் இல்லாதிருப்பது. பிரசவத்துக்குத் தேவையான பொருள்களும் பயிற்சி பெற்ற மருத்துவ பணியாளர்களும் மருத்துவ மையங்களில் இல்லாதிருத்தல், மருத்துவப் பணியாளர்கள் கனிவுடன் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் தாய்களை நடத்தாமை, பிரசவத்தில் சிக்கல் நேரும்போது அதை எதிர்கொள்வதற்கான மருந்துகள் மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சிகள் இல்லாமை.  இவையெல்லாம் களையப்பட வேண்டும்.

திரைப்படங்களில் தாய்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட நிஜத்தில் அவர்களுக்கான பாதுகாப்பு மற்றும்  கவனிப்பை அளிப்பதுதான் இன்றைய மிக முக்கியத் தேவை.  அதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது தாய்மை பாதுகாப்பு தினம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com