தாய்ப்பாலில் இருந்து நகை – வாசகர்கள் அலசல்!

தாய்ப்பாலில் இருந்து நகை – வாசகர்கள் அலசல்!
Published on
வாசகர்கள் ஜமாய்க்கிறாங்க!

க்கால பெற்றோர்கள்  தங்கள்  குழந்தைகளுக்கு எதிலும் பெஸ்ட்   ஆனதையே கொடுக்க விரும்புகின்றனர். புதுமை என்ற பெயரில் புனிதமானது  என எண்ணுவதை, வியாபாரமாக்குவதை, வரவேற்கின்றனர். தாய்மையின் அற்புதமான கட்டத்தை, அதன் முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு  எடுத்துச் செல்ல  இது மாதிரியான  செயல்களை ஆதரிக்கின்றனர்.

தன் குழந்தைகளுக்கு எனில் சரி என எண்ணும் அதே வேளையில், இதை கமர்ஷியலாக்கி தாய்ப்பாலை விற்பது, அதன் மூலம் வருமானம் ஈட்டுவது என்பது    கூடாது.   தாயில்லா  குழந்தைகளுக்கு அந்த  தாய்ப்பாலைக் கொடுக்க அந்தக்  குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும். மனிதமும், தாய்மையும்  மட்டுமே  உலகை வாழ்விக்கிறது. அதை கெடுத்து  விடக்கூடாது.
மகாலட்சுமி  சுப்பிரமணியன்  

தாய்ப்பாலில் இருந்து நகை செய்வதை படித்த உடன் மிகவும் ஷாக்கிங் ஆக இருந்தது. உயிர் காக்கும் உணவுதான் தாய்ப்பால். அது பச்சிளம் குழந்தைகளின் உணவு. குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்ததான் தாய்ப்பால் கொடுப்பது.

அதைக் கொண்டு விலை உயர்ந்த நகைகளை செய்து அணிந்து கொள்வது சரியல்ல. ஒரு துளி தாய்ப்பால் ஒரு துளி இரத்தத்திற்கு சமம். ஒரு துளியை கூட விரயம்  செய்யக் கூடாது. அந்த காலத்தில் குழந்தைக்கு பால் கொடுக்கும் போது யாராவது பார்த்தால் கூட குழந்தைக்கு வயிற்று வலி வரும் என்பார்கள்.

தாய்ப்பால் மருந்துப் பொருளாகவும், தானமாகவும், கொடுக்கப் பட வேண்டியது. தாய்ப்பாலை நகை செய்ய கொடுப்பவர்களும், அதை வைத்து நகைகள் செய்வதும் மூட நம்பிக்கைதான். தாய்ப்பால் விரைவில் கெட்டு போகும் ஒரு திரவம். அதை கொண்டு கஷ்டப்பட்டு நகை செய்ய கூடாது. போக போக இரத்தத்திலும் நகை செய்து கழுத்திலும், கையிலும், காதிலும், மாட்டிகொள்வார்களோ? உலகத்தில் பல லட்சம் குழந்தைகள் பசிக்கு பாலின்றி துடிக்கின்ற காலத்தில் நகை தேவை இல்லை. ஒவ்வொன்றாக கண்டு பிடித்து மக்களை ஆசைபடுத்தி அலைய விடுவது மிகவும் தவறு ஆகும்.
-வி.கலைமதி சிவகுரு

தாய்ப்பால் என்பது கடவுள் கொடுத்த வரப்பிரசாதம். அதில் நகை செய்வதும், பிசினஸ் பண்ணுவதும் நகைப்பிற்குரியதென்றே நான் எண்ணுகிறேன். மாட்டுப்பாலை பல வகையில் வியாபாரம்  ஆக்குவதில்லையா? என கேட்கலாம். மாட்டிற்கும் மனிதருக்கும் வித்தியாசம் இருக்கு. தாய்ப்பாலை பிற வழியில் உபயோகிப்பதென்றால் அதை அதற்குண்டான வங்கியில் செலுத்தி தாயை இழந்த, அல்லது அதீத தேவையில் இருக்கும் குழந்தைகளுக்கு உதவுமாறு செய்வது ஒன்றே சிறப்பாகும்.
-ஜெயகாந்தி மகாதேவன்

'தாய்ப்பாலில்  நகை', இதற்கு முன்னோடியாக மகாபாரதத்தை எடுத்துக் கொள்ளலாம் . 'தாயம்' விளையாட்டில் பகைடையாக பயன்படுவது துரியோதனனின் தாத்தா (காந்தாரியின் அப்பா) அவர்களின் எலும்பில் செய்யப்பட்டதுதானே. அதை நினைவு படுத்துகிறது இந்த 'தாய்ப்பாலில் நகைகள்'. இது நம் தமிழ் நாட்டிலும் செய்து வருகிறார்கள். இதை ஒரு நினைவுச்சின்னமாக கருதுகிறார்கள். இறந்தவரின் நினைவாக ,சிலைகள் வைப்பது உடைகளை வைத்திருப்பது போல், நகங்கள் முடிகளில், எலும்புகளில், கூட நகைகள் செய்கிறார்கள்.

தற்காலத்தில், நோய் தீர்க்கும் மருந்திற்காக  தொப்புள் கொடியை பாதுகாத்து வருகிறார்கள்.    அதிலும் நகைகள் செய்கிறார்கள் . மேலும் இந்த தாய்ப்பால் நகையை  புனிதமாகவே கருதுகிறார்கள் .

தாய்ப்பால் நினைத்த போதெல்லாம் வருவதில்லையே . அதனால்தான் அதை அமிர்தபாலுக்கு ஈடாக கருதுகிறார்கள். அதில் தயாரிக்கும் நகைகளும்  புனிதமாகவே  கருதப்படுகிறது .

"பிறந்த குழந்தைகளுக்கு எத்தனை வகை பாணம் இருந்தாலும்  தாய்ப்பாலுக்கு ஈடாகாது என்பது போல, எத்தனை வகை நகைகள் இருந்தாலும், தாய்ப்பால் நகைக்கு ஈடாகாது," என்கிறார்கள்  சில தாய்மார்கள்.

"அதை தயாரிக்கும் எங்களுக்கு கூட ஒரு இனமறியா உணர்வு வருகிறது. அதைப்  பெற்றுச் செல்பவர்கள் முகத்திலோ,  அந்த  மலரும்  நினைவுகளை அவர்கள் முகத்தில் பார்க்க முடிகிறது,"  என்கிறார்கள் நகை தயாரிப் பாளர்கள் . இது நம்மையும் சிந்திக்க வைக்கிறது . இனிவரும் காலங்களில்,  நகைப் பட்டியலில் தாய்ப்பால் நகைகள் இடம் பெற்றிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உலகிலேயே 'ஈடில்லா நினைவுச்சின்னம்' என்றால் அது இதுவாகத்தான் இருக்க முடியும்
-ஜானகி பரந்தாமன்

ரி பல்லு,  புலி நகம், யானை முடி மோதிரம்…. அதுபோலவே தாய்ப்பாலில்  பெண்டன்ட்.  எனக்கும் முதலில் ஆச்சரியமாகத்தான் இருந்தது. புதுமை, தனித்துவம் என்கிற பெயரில் மனிதனின் கண்டுபிடிப்புகளுக்கு எல்லையே இல்லை  போலும் என்று.  பிடிதவர்களின் பெயரை, குறிப்பாக காதலன் அல்லது  காதலியின் பெயரை  உடலில் பச்சைக் குத்திக்கொள்பவர்களை  பார்த்தால்  எனக்கு சிரிப்பாக வரும். ஆனால்,  அவர்கள் அதற்குச் சொல்லும் நியாயம் வேறு.

ஆகவே, தாய்ப்பாலில் நகை செய்வதோ, அல்லது நகைகள் வாங்குவதோ  அவர் அவர்களின் விருப்பதைப் பொறுத்தது. தேவை இருந்தால் உற்பத்தி இருக்கத்தானே செய்யும்.
-காயத்ரி.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com