தீயவனுக்கும் நன்மை பயக்கும் ராம நாமம்!

தீயவனுக்கும் நன்மை பயக்கும் ராம நாமம்!
Published on
ராம நவமி சிறப்பு  – பக்தி கதை!

-சேலம் சுபா

ந்த ஊரில் கோவில்களும் பஜனைகளும் ஏராளம் . தினம் பக்தர்கள் பஜனைகளைப் பாடியபடி மக்கள் நிறைந்த வீதிகளில் செல்வது வழக்கம். அதே ஊரில் இப்படி பஜனை பாடுபவர்களை கேலி செய்த ஒருவனை நீண்ட நாட்களாக கவனித்து வந்தார் ஒரு ஞானி. ஒருநாள் கோஷ்டி ஒன்று, வீதியில் நாம சங்கீர்த்தனம் பாடியபடி சென்று கொண்டிருந்தது. அதை, அலட்சியம் செய்து கேலி செய்த  அவனை அழைத்த அந்த ஞானி  ராம நாமத்தை உபதேசித்து அவனுக்கு புத்திமதிகளை கூறினார்.

மேலும் அவர்  "இந்த ராம நாமம் விலைமதிப்பற்றது. எக்காரணம் கொண்டும் இதை விற்றுவிடாதே. விட்டும் விடாதே. ஆத்மார்த்தமாக ஒரே ஒரு முறையாவது சொல்லிப் பார்." என்றும் கூறிவிட்டுச் சென்றார்.

பெரியவர் சொன்னாரே என்று அவனும் ஒரேயொரு முறை கண்களை மூடி இறைவனை நினைத்து ராம நாமத்தைக் கூறி அதை மறந்தும் போனான்.

காலங்கள் சென்றது. அவன் இறந்தும் போனான்.  அவன் ஆத்மாவை இழுத்துப் போய், யமதர்மராஜன் முன் நிறுத்தினர் யமதூதர்கள் . அவரும், அவனுடைய பாப, புண்ணிய கணக்கை பரிசீலித்து, "ஒருமுறை ராம நாமத்தை சொல்லி இருக்கிறாய்; அதற்காக, என்ன வேண்டுமோ கேள்,"  என்றார்.

அவனுக்கோ சுருக்கென்றது. அட நான் எதை கேலி செய்தேனோ அதுதான் உயர்ந்து நிற்கிறதே  என வியந்தவனுக்கு அந்நாமத்தை உபதேசித்த ஞானி, 'அதை விற்காதே' என்று கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. அதனால், அதற்கு மாற்றாக கேட்பதை விடுத்து , "ராம நாமத்திற்கு, நீங்கள் என்ன தர வேண்டுமென நினைக்கிறீர்களோ, அதைத் தாருங்கள்" என்றான்.

அதைக் கேட்டு குழம்பிய யமதர்ம ராஜா, "ராம நாமத்திற்கு, நாம் எப்படி மதிப்பு போடுவது?" என்று எண்ணி "எங்களின் தலைவனான இந்திரன் தான் இதை தீர்மானிக்க வேண்டும்; வா இந்திரனிடம் போகலாம்.' என்றார்.

உடனே அவன் யோசித்தான் "அட யமனே எனக்கு அடங்கி நடக்கிறானே, இதுதான் சமயம், என் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள," என்று எண்ணியவன் "நான் வருவதென்றால், பல்லக்கில்தான் வருவேன். அத்துடன், பல்லக்குத் தூக்குபவர்களில், நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும். சம்மதமா?" என்ற நிபந்தனையை விதித்தான்.

அவனின் கட்டளையைப் பார்த்து யமனுக்கு ஒரே வியப்பு. "இவன் நம்மையும் பல்லக்கு தூக்கச் சொல்கிறான் என்றால், ராம நாமம், மிகுந்த மகிமை உடையதாகத்தான் இருக்க வேண்டும்; அதனால்தான் இப்படி எல்லாம் பேசுகிறான்,"  என்று எண்ணியதுடன்,   அதற்கு சம்மதித்து, அவனை பல்லக்கில் உட்கார வைத்து, சுமந்து கொண்டு இந்திரனிடம் போனார்.

இவர்களின் பிரச்னையைக் கேட்ட இந்திரனோ, " ராம நாமத்தை என்னால் எடை போட முடியாது; அறிவிற் சிறந்த பிரம்மதேவரிடம் கேட்போம்; வாருங்கள்," என்றார்.

ஓ…ராம நாமத்துக்கு இவ்வளவு சக்தியா என்று எண்ணியவன்  "யமதர்மனோடு, இந்திரனும் சேர்ந்து பல்லக்கு தூக்கினால்தான் வருவேன்," என்று மீண்டும் நிபந்தனை விதித்தான். அதற்கு இந்திரனும் ஒப்புக் கொண்டான். பல்லக்கை சுமந்து கொண்டு, பிரம்மாவிடம் சென்றனர்.

என்ன ஆச்சர்யம்! அவரும், " ராம நாம மகிமை சொல்ல, என்னால் ஆகாது; வைகுண்டம் போய், அந்த பரம்பொருளையே கேட்கலாம் வாருங்கள்,"  என்று சொல்ல, அவரையும் பல்லக்கை சுமக்க வைத்துவிட்டான்.

அனைவரும் பாற்கடலில் ஆதிசேஷன் மடியில் துயில் கொண்டிருந்த  மகா விஷ்ணுவிடம் சென்று, "இந்தப் பல்லக்கில் இருக்கும் ஆன்மா, ஒருமுறை ராம நாமத்தை சொல்லியிருக்கிறது; அதற்காக, இவனுக்கு என்ன புண்ணியத்தை நாங்கள் தரவேண்டும்  என்பதை தாங்கள் தான் கூற வேண்டும். எங்களால் முடியவில்லை," என்றனர்.

"இந்த ஜீவனைப் பல்லக்கில் வைத்து, நீங்கள் எல்லாரும் சுமந்து வருகிறீர்களே, இதிலிருந்தே ராம நாம மகிமை தெரியவில்லையா?" என்று சொல்லி, பல்லக்கில் வந்த அவனின் ஆன்மாவை தன்னுடன் சேர்த்து அவனை முக்தியடையச் செய்தார் பகவான்.

ரு தடவை சொன்ன ராமநாமத்தின் மகிமையே இப்படி என்றால், நாம் அலட்சியமின்றி  ஆண்டவன் நாமங்களை அனுதினமும் சொன்னால் அதன் பலன்கள் எப்படி இருக்கும்?. சொல்லித்தான் பார்ப்போம். நமக்கு பிடித்த நாமாக்களை. சொல்லி மனதிலும் உடலிலும் சக்தியைப் பெறுவோம். தேடி வரும் நோய்களை அண்டவிடாமல் துரத்துவோம் கதையில் இறந்தபின் அவனுக்கு கிடைக்கும் முக்தியை நாம் இருக்கும்போதே அடைவோம். ஆண்டவனின் அருளாலே அல்லல்களை விலக்குவோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com