பாட்டொன்று கேட்டேன்!

பாட்டொன்று கேட்டேன்!
ஆதிரை வேணுகோபால்

ஆதிரை வேணுகோபால் வெற்றிகரமான இல்லத்தரசி, பட்டிமன்ற பேச்சாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமையல் போட்டிகளுக்கு நடுவர். அரசியல் ,ஆன்மீகம், சமையல் சுய முன்னற்றம் போன்ற பல கட்டுரைகளை முன்னணி தின, மாத, வார இதழ்களுக்கு எழுதுபவர். இசைஞானியின்பல (குறிப்பாக 80ஸ்) பாடல்களை இன்றைய பிள்ளைகள் விரும்பும் வகையில் அலசி ஆராய்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். 'பள்ளிக் குழந்தைகளுக்கான சிற்றுண்டி வகைகள்' என்ற நூலின் ஆசிரியர். தற்போது 'கொஞ்சம் யோசியுங்கள் பாஸ்' என்ற தலைப்பில் நூல் வெளியிடும் மும்முரத்தில் இருப்பவர்.

Updated on

இது மங்கையர்மலரின் விவிதபாரதி…

 பகுதி -12

ந்தப் பாடல் வெளியான காலகட்டத்தில் இதன் இசைக்கு நிகரான எந்த ஒரு பாடலும் இல்லை என்று சொல்ல வைத்தது. கேசட்டில் பதிவு செய்துதான் மீண்டும் மீண்டும் இந்த பாடலை கேட்டு இருப்போம்.

இத்திரைப்படத்தின் இயக்குனரைப் பற்றி சொன்னால் கண்டிப்பாக நீங்கள் இது எந்த படம்? அந்த படத்தில் இடம்பெற்ற பாடல் என்ன? என்று கண்டுபிடித்து விடுவீர்கள். இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் பிரம்மாண்ட படைப்புகளின் 'காதலன்'.

இந்த இயக்குனரின்  அதிரடியான சமூக மாற்றக்கருத்துகள், தொழில் நுட்ப அருமை மிகப் பெரிய அளவில் பேசப்பட்டவை… பேசப்படுபவை! எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்தவர். இப்படியெல்லாம் யாராவது யோசிப்பார்களா? என்று வியக்கும் அளவுக்கு கற்பனை திறன் கொண்டவர். பாடலாசிரியர் எழுதும் ஒவ்வொரு வரியையும், அதில் இடம்பெறும் ஒவ்வொரு வார்த்தையையும் மிகுந்த கவனத்துடன் கேட்டு ரசித்து அழகு சேர்க்க முனையும் ஒரு இயக்குனர் என்று இவரைச் சொல்லலாம்.

உலக சினிமாக்களில் இடம் பெற்ற தொழில்நுட்பத்தில் பெரும் பகுதியை இந்திய சினிமாவிற்கு கொண்டு வந்து,  சோதனை செய்து பார்த்தவர். பெரிய பட்ஜெட் படங்கள் எடுத்ததால் இவரை இந்தியாவின் "ஸ்டீவென் ஸ்பீல்பெர்க்" என்றும் எந்திரன் துவங்கியதிலிருந்து 'ஜேம்ஸ் கேமரூன்" என்றும் அழைக்கப்பட்டு வருபவர். எளிமையான மனிதர்… அந்த இயக்குனர் யார்? நீங்கள் கண்டுபிடித்தது மிகவும் சரியே! அந்த இயக்குனர் திரு ஷங்கர். திரைப்படம் கே.டி குஞ்சுமோன் தயாரிப்பில் வெளிவந்த 'காதலன்'. இசைப்புயல். ஏ ஆர் ரகுமான் படத்தின் இசையை… சூறாவளியாக  கொடுத்திருப்பார்.

ஒவ்வொரு பாடல்களும் அவரின் பெயரை சொன்னது. இப்படி எல்லாம் கூட இசையமைக்க முடியுமா? என்று யோசிக்க வைத்தது.'காதலனி'ன் பாடல் கேசட்டுகள் விற்பனையில் சாதனை படைத்தது. படத்தின் வெற்றிக்கு பாடல்கள் ஒரு காரணம் என்றால்… நடனப்புயல் பிரபுதேவாவின் நடனமும் ஒரு காரணம். ஒரு சாதாரண நடுத்தர வர்க்க வீட்டை சேர்ந்த ஒரு இளம் நடன கலைஞர் மிகவும் செல்வாக்கு மிக்க வீட்டை சேர்ந்த ஒரு பெண்ணை (மாநில ஆளுநரின் மகள்) காதலிப்பதுதான் கதை.  படம் முதல் வாரம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை ஆனால் இரண்டாவது வாரம்  நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. நான்கு தேசிய திரைப்பட விருதுகள் இப்படத்திற்கு கிடைத்தது. படத்தில் இடம்பெற்ற வைரமுத்து அவர்கள் எழுதி ஏ ஆர் ரகுமான் இசையமைத்து சுரேஷ் பீட்டர்ஸ் ஷாகுல் ஹமீது  பாடிய "ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி" என்ற பாடலை பாடாத இளைஞர்களே இல்லை எனலாம். பள்ளி மற்றும் கல்லூரி ஆண்டு விழாவில் இப்படத்தின் ஏதாவது ஒரு பாடல் நிச்சயம் இடம் பெற்றிருந்த காலம் அது!

இந்த படத்தில் இடம்பெற்றிருந்த "முக்காலா முகாப்புலா லைலா"தான் இன்று நம் மங்கையர்மலர் விவித பாரதியில் கேட்க விரும்பும் பாடல்.

வாலி அவர்களின் அருமையான வரிகள், பிரபுதேவா நக்மாவின் நடன கோரியோகிராபி, பாடலுக்கு மிகப் பொருத்தமாக அமைந்த ஆலாபனை அரசி ஸ்வர்ணலதாவின் குரல், (ஏ ஆர் ரகுமான் மற்றும் மனோ) பொருத்தமான இசை… இவை அனைத்தும் இந்த பாடலை ஹிட் ஆக்கியது.

இந்தப் பாடல்… ஸ்வர்ணலதா அவர்களின் தனித்துவமான குரலில் மேலும் அழகாகியது என்றால் மிகையில்லை.  அழகான இந்த பாடலை மங்கையர் மலர் விவித பாரதியில் கேளுங்க கேளுங்க கேட்டுக்கொண்டே இருங்கள்.

என்றென்றும் அன்புடன் 
ஆதிரை வேணுகோபால்.
(நிறைந்தது)

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com