‘ஜில்”லென ஒரு சுற்றுலா!

‘ஜில்”லென ஒரு சுற்றுலா!
Published on

– ஆர். மீனலதா, மும்பை

சில்லென்ற மழையில் நனைவதும். ஜில்லென அருவிகளில் நீராடுவதும், டிரெக்கிங் செல்வதும், ஏரிகளில் படகு சவாரி செய்வதுமென மழைக் காலத்தை மகிழ்வுடன் கொண்டாடும் மும்பை மக்கள் அநேகம்! மழையில் சுற்றுலா செல்ல மும்பை அருகே பல இடங்கள் உள்ளன. நாமும் ஒரு சுற்று சுற்றலாமா?

கர்னாலா:

ழையின் Hot Spot ஆகிய கர்னாலாவிற்கு மும்பையிலிருந்து 2 மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம். ரெய்கட் தாலுகாவிலிருக்கும் 'பன்வெல்' என்கிற இடத்திலிருந்து 10 கிலோமீட்டர்தான். பச்சைப் பசேலென்று மழையில் பளிச்சிடும் கர்னாலா கோட்டை, டிரெக்கிங்கிற்கு ஏற்றது. இங்கிருக்கும் அழகான பறவைகள், சரணாலயம் பார்க்க வேண்டியதொன்று. சயாத்ரி மலைத் தொடரின் அற்புதத்தை கண்டு களிக்கலாம்.

முல்ஷி:

மும்பையிலிருந்து 3 மணி நேர பயணம்தான். 'முல்ஷி' அணைப் பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டமிருக்கும். சில்லென மழை பெய்கையில், முல்ஷி ஏரியில் படகு சவாரி செய்வது புது அனுபவமாக இருக்கும். சுடச்சுட மக்காசோளம் சாப்பிட்டவாறே நடப்பது மஜாதான். மேலும் 'ஹட்டி கண்ட்' (Hatti hant), 'பஸோடா' (Pasota) பகுதிகளில் டிரெக்கிங் செல்லலாம்.

லோனாவாலா:

லோனாவாலா செல்லாத மும்பை மக்களே கிடையாது. அருமையான டூரிஸ்ட் ஸ்பாட். பொதி-பொதியாக நகரும் மேகக் கூட்டங்கள்; நீர்வீழ்ச்சி என எல்லாமே பார்த்த ரசிக்க வேண்டியவை. அதுவும் மழைக்காலத்தில் இங்கே வெளிநாட்டினர்; நண்பர்கள்; இளைஞர்கள்; தம்பதிகளென ஒரே கூட்டம்தான். லோனாவால சிக்கி (கடலை மிட்டாய்) உலகப் புகழ்பெற்ற தொன்றாகும். சூடான பஜ்ஜி சாப்பிடலாம்.

பண்டார்தாரா:

மும்பையிலிருந்து 180 கி.மீ. வடகிழக்குப் பகுதியிலிருக்கும் பண்டார்தாரா மழைக்குப் பெயர் பெற்றது. 'ப்ரவரா' நதியிலிருந்து 170 அடி உயரத்திலிருந்து விழும் ரன்தா (Randhe) அருவி இங்கே பிரதானம். பண்டார்தாரா ஏரியிலிருந்து ஒரு மணி நேரப் பயணத்திலுள்ள கல்ஸுபாய் (Kalsubai) டிரெக்கிங் செல்ல ஏற்ற இடம்.

மால் க்ஷேஜ் காட் (Malshejghat):

மும்பையிலிருந்து 150 கி.மீ. தொலைவில் இருக்கும் இங்கேயுள்ள அழகான மலை முகடுகளிலிருந்து ஆங்காங்கே விழும் அருவிகளில் ஆனந்தமாக குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் அதிகம். ஃப்ளெமிங்கோ பறவைகளை, கிரெஷ்வர் (Khirshwar) என்ற இடத்தில் கண்டு மகிழலாம். புகழ் வாய்ந்த ஹரிச்சந்திரா கோட்டையில் ஏறலாம். புகைப்படக் கலைஞர்களுக்கு ஏற்ற அற்புதமான லொகேஷன்.

அருகிலுள்ள கிகிம் பீச் (Kihim Beach), நகாவ் (Nagaen), துதானி (Dhudani) போன்ற இடங்களுக்கு, மழையை அனுபவிக்கவென்றே அநேகர் வருவதுண்டு. இத்தகைய மழைச் சுற்றுலாவை, குடை சகிதம் வந்து ரசிப்பவர்களும் உண்டு.

—————————————————-

மும்பை மழை!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கும் எங்கள் ஊரில் அவ்வப்போது பெய்யும் மழையிலும், சாரலிலும், குற்றால அருவியிலும் நனைந்து என்ஜாய் பண்ணுவதென்பது பிடித்தமான விஷயம். அதற்கேற்ப நண்பிகளும் அமைய, அருவியில் குளிப்பதும், சுடச்சுட மிளகாய் பஜ்ஜி சாப்பிடுவதும்… செம ஜாலிதான்.

திருமணமாகி மும்பை வர நேர்கையில் வருத்தமாக இருந்தாலும், மும்பையிலும் 3-4 மாதங்கள் மழை பெய்யுமென்பதறிந்து மகிழ்வாக இருந்தது. இதன்மூலம் மும்பை வாழ் மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்கும் ஏழு ஏரிகளும் நிரம்பி விடுவதால், ஒரு வருடத்திற்கு குடிநீர் பற்றாக்குறையே இருக்காதென்பது தெரிய வர, மனசுக்குள் மத்தாப்பூதான். மழை சமயத்திற்கு வராவிட்டால், மக்கள் தவித்துப் போவதோடு, வருண பகவானுக்கு ஹோமங்களும், பூஜைகளும் நடத்துவார்கள் என்றனர்.

குடும்ப வாழ்வு காரணம், முன்னால் மாதிரி மழையை என்ஜாய் பண்ண முடியவில்லையெனினும், அப்பப்ப லேசாக நனைவதுண்டு. மழைக்காலத்தில் அலுவலகம் செல்கையில் குடை எடுத்துச் செல்லப் பிடிக்காதெனினும், கைப்பை மற்றும் உடைமைப் பாதுகாக்க குடை தேவை.

ஜூலை 2005

2005 ஜூலை 26, 27 தேதிகளில் மழை கொட்டோ கொட்டென விடாது கொட்ட, மும்பை நகரம் நீரில் மிதந்தது.

ரெயில், சாலை, ஆகாயமென அனைத்து போக்குவரத்துகளும் பாதிக்கப்பட, செல்லமுடியாத அளவு சேதம். வீடு திரும்ப இயலாத காரணம், அலுவலகத்திலேயே தங்கி, கேண்டீனில் இருந்தவைகளை வைத்து அட்ஜஸ்ட் செய்தோம். ஜன்னல் வழியே விழுந்த மழைத் தண்ணீரை கைகளில் பிடித்து விளையாட மனமில்லை.

மூன்றாம் நாள் (28) மழை சற்றே குறைய, முழங்காலளவு நீரில் நடந்து பஸ் பிடித்து வீடு வந்து சேர ஆறு மணி நேரமாகியது. மழை போதும் – போதுமென்று தோன்றியது.

ஆகஸ்ட் 2017

ங்களது நாடகக் குழு தலைநகர் டெல்லி சென்று நாடகம் போட்டு முடித்து, திரும்ப டிரெயினில் வந்திறங்கிய ஆகஸ்ட் 26, 2017 அன்று கனமழை. சொத – சொதவென நனைந்தவண்ணம் சாமான்கள் சகிதம் வீடு வந்து சேர 7 மணி நேரங்கள். காற்று வேறு பலமாக அடிக்க, ஆட்டோவினுள்ளும் தண்ணீர். மறுநாளும் மழை தொடர்ந்தது. இரு நாட்கள் முடங்கிய மும்பை மக்களின் வாழ்க்கை மீண்டெழுந்த நேரத்தில், எதிர்பாராத வானிலை மாற்றம் காரணமாக, செப்டெம்பர் 19,20 தேதிகளில் பேய் மழை பெய்தது. 100 ஆண்டுகள் காணாத செப்டெம்பர் மாத அதிசய மழை.

மரங்கள் சாய்ந்துவிழ, போக்குவரத்துகள் பாதிக்கப்பட, டப்பாவாலாக்கள் சேவை நிறுத்தப்பட அனைவரும் திண்டாடிப் போனார்கள்.

"ஆடு – மாடு குளம் – குளம்! அம்மையார் வீடும் குளம் – குளம்" என்பது போல, எங்கள் வீட்டையும் மழை விட்டு வைக்கவில்லை. வெளியிலும் குளம், வீட்டு பால்கனியும் குளம். துணி வைத்து தண்ணீரை மாங்கு மாங்கென பிழிந்து சுமார் 10 பக்கெட் வரை எடுத்துவிட, உடல்வலி, காய்ச்சல்

2 வருடங்களுக்கு முன்பு, சென்னையில் வைத்து எனது சகோதரி பேரனுக்குப் பூணூல் போட ஏற்பாடு ஆகி இருந்தது. முன்கூட்டியே Air Ticket புக் செய்தாகிவிட்டது. மும்பையிலிருந்து காலை 09.25க்கு ஃப்ளைட். அதிகாலையில் திடீரென மழை. காலை 6 மணிக்கு புறப்படுகையில் மழை வலுத்துவிட்டது. ஏர்போர்ட்டிற்கு எப்படியோ 8¼ மணியளவில் சேர்ந்தேன். மழை காரணம் அநேக ஃப்ளைட் கேன்சல். ஏர்போர்ட்டில் ஒரே களபரம். சொத – சொதவென இருந்தது.

சென்னை ஃப்ளைட் கேன்சல். இப்ப – அப்ப என்று கூறிக் கூறி இரவு 10¼ மணிக்கு சென்னை ஃப்ளைட் விட, மறுநாள் அதிகாலை சென்னை லேண்டட். இதற்குத்தானா ஆசைப்பட்டாய்? என்றது மனம்.

நம் வீட்டில் இப்படியென்றால் குடிசை வாழ் மக்களின் விதி? அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து பக்கத்து குடியிருப்புகள் மற்றும் எங்களது என்று வேலை செய்யும் பணியாளர்களுக்கு முடிந்த உதவிகளை அளித்தோம்.

மிகவும் பிடித்தமான மழை போதும் போதுமென தோன்றியது. உண்மைதானென்றாலும் மழை காரணம் ஏரிகள் நிரம்ப, வருடம் முழுவதும் மும்பை மக்கள் தண்ணீரின்றி திண்டாடுவதில்லை என்பது உண்மை.

பினிக்ஸ் பறவைகள் போல செயல்படும் மும்பை மக்களுக்கு மழை சகஜம் எனினும், "எதுவுமே அளவோடு இல்லாவிடின் அழிவுதான்" என்பதை அவ்வப்போது இயற்கை உணர்த்துகின்ற பாடம் என எண்ணினேன்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com