சவாலே சமாளி!

சவாலே சமாளி!
Published on
தொகுப்பு:  சேலம் சுபா 
வயது தடையில்லை!

வ்வளவுதான் திறமைசாலி என்றாலும் நாம் செய்யும் பணியிலோ அல்லது வேறு வகைகளிலோ நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. அப்படி உங்கள் வாழ்வில் ஏற்பட்ட சவால் என்ன? அதை எப்படி சமாளித்தீர்கள்?

ஈரோடு கார்மெண்ட்ஸ்ல் டெயிலராகப் பணிபுரியும் விஜிலா…

நான் சின்ன வயசிலிருந்தே டெயிலரிங் பணியில் உள்ளேன். இந்த கார்மெண்ட்ஸ் நிறுவனத்துக்கு வருவதற்கு முன் தனியாக கடை வைத்திருந்தேன். என்னதான் நானே தைத்தாலும் பண்டிகை போன்ற சிறப்பு தினங்களில் வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் தைத்துக் கொடுப்பது பெரும் சவால்தான். அதனால் எனக்கு உதவியாக ஒரு பெண்ணை வைத்திருந்தேன். அவளால் பட்ட சிரமங்கள் அதிகம். என்னதான் சரியாக டாட் வைத்துத் தந்தாலும் சரியாகப் பிடிக்காமல் சொதப்பி விடுவாள் .அது போன்ற சமயங்களில் வாடிக்கையாளர்களை சமாளித்து அனுப்புவதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.

இரண்டரை வருடங்கள் முன் குடும்ப சூழல் காரணமாக கடையை மூடிவிட்டு இங்கு வந்து சேர்ந்தேன். பலரது கேள்விகளுக்கு பதில் சொல்லும் சவாலில் இருந்து விடுபட விரும்பிதான் இந்த கார்மெண்ட்ஸ்ல் சேர்ந்தேன். நாமே சுயமாக பழகிய தையல் மிஷினில் தைப்பதற்கும் ஆர்டரின் பெயரில் மொத்தமாக தைப்பதற்கும் வித்தியாசங்கள் இருந்தது. முதலாளியாக இருந்த நான் இங்கு தொழிலாளியாக இருக்க மனதளவில் முதலில் தயாரானேன். முதலில் அவர்கள் தந்த மிசினில் பழகுவது சற்று கடினமாக இருந்தது. ஒரு வழியாக அதை சிரமப்பட்டு கற்று நிமிர்ந்ததால் மாஸ்டர் என்னை ஊக்குவித்து பெரும் நம்பிக்கையுடன் அடுத்த கட்டத்துக்கு அனுப்பினார் .

தயாரான உடையின் இரு பக்கங்களையும் அதற்கென்று உள்ள நவீன தையல் இயந்திரத்தால் இரட்டைத் தையல் போட்டு இணைக்கும் பணி. என்னால் சில நாட்கள் அதை சரியாக செய்யவே முடியவில்லை. எவ்வளவு முயன்றாலும் அதை ஆல்டர் செய்ய நேரிடும். அதில் உள்ள சிறிய ஊசியைக் கோர்க்கவே வெகுவாக சிரமப்பட்டேன. எனக்கு வயது நாற்பது என்பதால் சுற்றி இருந்தவர்கள் என் வயதைக் காரணம் காட்டி என்னை அவமானப் படுத்தினார்கள். எனக்கு சில சமயங்களில் கண்களில் நீரே வந்துவிடும். ஒரு கட்டத்தில் மாஸ்டரிடம் சென்று இந்தப் பணி எனக்கு வேண்டாம் என்று சொன்னேன். இல்லை உன்னால் முடியும்  இதில்தான்  உனக்கு வேலை என்று உறுதியாக சொன்னவர் நான் பணிபுரியும் இடத்திற்கு வந்தார். அவர் பெயர் ருத்ரன்.

அங்கிருந்த சக பணியாளர்களிடம் "இதோ பாருங்கள் இங்கு இருக்கும் நீங்கள் அனைவருமே திறமையானவர்கள் என்பதில் சந்தேகமில்லை. 104 வயதிலும்  94  வயதிலும் சாதித்தவர்கள் உலகத்தில் உண்டு. எதற்கும் வயது ஒரு தடையே இல்லை. வலிமையான மனம் இருந்தால் போதும். புரிந்து கொள்ளுங்கள்" .என்று சில தன்னம்பிக்கையாளர்களின் கதைகளை சொன்னார். அதைக் கேட்டு அவர்கள் மட்டுமில்லை நானும் என்னால் முடியும் என்ற நம்பிக்கையைப் பெற்று மீண்டும் அதே பணியை செய்தேன். இதோ இன்று நானும்  ஒரு எக்ஸ்பர்ட் ஆகிவிட்டேன். இந்த சவாலை சமாளிக்கும் துணிவைத் தந்த மாஸ்டருக்கு நன்றி சொன்னேன்.

***************************

 அன்பு வாசகீஸ்,

இது போன்று உங்கள் வாழ்க்கையில், உங்கள் பணியில், தாங்கள் சந்தித்த சவால்களையும் அவற்றை வெற்றிகரமாக கையாண்ட அனுபவங்களையும் 'சவாலே சமாளி' பகுதிக்கு mangayarmalar@kalkiweekly.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாமே!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com