திருப்பாணாழ்வார்!

திருப்பாணாழ்வார்!
Published on
-ரேவதி பாலு.
"என் பக்தனை என் சன்னதிக்குத் தோளில் தூக்கிக்
கொண்டு வா!"

திருச்சிக்கருகே உள்ள உறையூரில் கார்த்திகை மாதம் ரோஹிணி  நட்சத்திரத்தில்  திருமாலின்  மார்பில்  உள்ள மச்சமாகிய ஸ்ரீ வத்சத்தின் அம்சமாக அவதரித்தவர் திருப்பாணாழ்வார்.  இவர் வாழ்ந்த காலம் ஏறக்குறைய எட்டாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.  இவர் உறையூருக்கருகே உள்ள திருக்கோழி என்னும் கிராமத்தில் வாழ்ந்த பாணர் என்னும் இனத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியால் வளர்க்கப்பட்டார்.  பாணர் என்றால் பாண் என்னும் இசைக்கருவியால் இறைவனையும் அரசரையும் புகழ்ந்து இனிமையான பாடல்களைப் பாடி அனைவரையும் மகிழ்விப்பவர். திருப்பாணாழ்வார் பாணர், முனிவாகனர், யோகிவாகனர் போன்ற பெயர்களாலும் அறியப்படுகிறார்.  இறைவன் முன் அனைவரும் சமம் என்னும் உண்மையை இவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் மூலம் அறியலாம்.

108 திவ்ய தேசங்களில் முதலானதும் முதன்மையானதும் காவேரிக் கரையில் ஊள்ள திருவரங்கம் தான் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே.  திருப்பாணாழ்வார் வாழ்ந்த காலத்தில் இந்த திருவரங்கம் திருத்தலத்திற்கு பாணர் போன்ற தாழ்த்தப்பட்டவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வர அனுமதியில்லை. இதனால் சற்றும் மனம் தளராத திருப்பாணாழ்வார்,  தினமும் காவேரியின் மறுகரையில் நின்று கொண்டு திருவரங்கப் பெருமானை மனதிற்குள்ளேயே நினைத்து இனிமையான பாடல்களை பாண் என்னும் இசைக்கருவியில் இசைத்துப் பாடிப் பாடிப் பரவசம் கொள்வார்.

ஒருநாள் இதே போல் திருப்பாணாழ்வார் தன்னிலை மறந்து கண்களை மூடி பெருமாளைப் பாடித் துதித்து மனதிற்குள்ளேயே தரிசித்துக் கொண்டிருந்த போது,  திருவரங்க திருத்தலத்தின் அர்ச்சகர் லோக சாரங்கமுனி என்பவர் திருவரங்கப் பெருமானுக்கு திருமஞ்சனம் செய்விப்பதற்காக காவிரியில் நீர் எடுக்க வந்தார். அப்போது திருப்பாணாழ்வார் கரையில் நின்று கொண்டிருந்தார். அவரைத் தீண்டாமல் சென்று நீர் கொணர வேண்டும் என்பதற்காக சாரங்க முனி கை தட்டி அவரை விலகச் சொல்லி பலமுறை கூறினார்.  ஆனால் திருப்பாணாழ்வார் கண்களை மூடி  பெருமாளின் மானசீக தரிசனத்தில் லயித்திருந்தபடியால் அவருக்கு அர்ச்சகர் குரல் காதில் விழவில்லை.  இவர் மேல் கோபம் கொண்ட அர்ச்சகர், ஒரு கல்லை எடுத்து திருப்பாணாழ்வார் மேலெறிந்தார்.  பாணர் நெற்றியில் கல் பட்டு இரத்தம் வழிந்தது.  திருப்பாணாழ்வார் கண்களைத் திறந்து பார்த்தார்.

'ஐயகோ! என்ன காரியம் செய்தோம்? திருமஞ்சனத்திற்கு தீர்த்தம் எடுக்க வந்த அர்ச்சகருக்கு வழிவிடாமல் இப்படி நின்று விட்டோமே!' என்று தன்னையே நொந்து கொண்டார். விலகி வழி விட்டார்.  பிறகு அர்ச்சகர் திருமஞ்சன தீர்த்தம் எடுத்துக் கொண்டு குடை, சாமரம், மேளதாளங் களோடு கோலாகலமாக கோவில் சன்னதிக்குச் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி அவரைத் திடுக்கிடச் செய்தது.  திருவரங்கப் பெருமானின் நெற்றியில், திருப்பாணாழ்வாருக்கு அடிபட்ட அதே இடத்தில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

சாரங்கமுனி, பெருமாளின் நிலை கண்டு பதறினார்.  தான் என்ன பாவம் செய்தோமோ தெரியவில்லையே என்கிற மனத்தவிப்புடன் வீட்டுக்குச் சென்ற அர்ச்சகருக்கு இரவு உறங்க முடியவில்லை.  அன்றிரவே திருவரங்கப் பெருமான் அர்ச்சகரின் கனவில் தோன்றி, "அந்தப் பாணன் என் மீது உண்மையான பக்தி கொண்டவன் என்பதால் அவன் மீது எறிந்த கல் என்மீது பட்டது.  திருப்பாணாழ்வாரிடம் நீ செய்த  செயலுக்கு மன்னிப்புக் கேட்டு, அவரை  உன் தோளில் ஏற்றிக் கொண்டு வந்து என் சன்னதியில் விடு.  இதுவே நீ செய்த பாவத்திற்கு பரிகாரமாக அமையும்" என்றார்.

எப்பொழுது பொழுது விடியும் என்று காத்திருந்த அர்ச்சகர் காவேரி கரைக்கு ஓடிப்போய் திருப்பாணாழ்வார் தினமும் நின்று பெருமாளை மானசீகமாகத் தொழும் இடத்திற்குச்சென்றார். நடந்த எல்லாவற்றையும் திருப்பாணாழ் வருக்குக் கூறி தன்னை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டார். அவரைத் தன் தோளில் ஏறிக் கொள்ளுமாறு மிகப் பணிவுடன் இறைஞ்சி கேட்டுக் கொண்டார். ஆனால் திருபாணாழ்வாரோ தான் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவன் என்று மிகப் பிடிவாதமாக அவர் தோளில் ஏற மறுக்க, அர்ச்சகர் விடாப்பிடியாக அவரைத் தன் தோள் மீது தூக்கி வைத்துக் கொண்டு திருவரங்கக் கோவிலுக்குள் சென்றார்.  அக்காட்சியைப் பார்த்த ஊர்மக்கள் அதிசயித்துப் போயினர்.

கோவில் கருவறைக்குள் நுழைந்ததும் தன் தோளில் இருந்து ஆழ்வாரை பெருமாளுக்கு முன்பு இறக்கி விட்ட அர்ச்சகர், அங்கேயே ஒரு ஓரமாக பணிவுடன் நின்று கொண்டிருந்தார்.

கோவிலுக்குள் முதன் முறையாக இன்று தான் கால் வைக்கிறார் திருப்பாணாழ்வார். அதுவும் தான் கருவறைக்குள்ளேயே நிற்பதைப் பார்த்ததும் அவருக்கு பக்திப் பரவசத்தில் ஒன்றும் புரியவில்லை.  முதன் முதலில் அவர் பார்வையில் பட்டது இறைவனின் திருப்பாதங்கள்தான்.  அவர் இறைவனின் திருவடிகளில் ஆரம்பித்து திருமுடி வரை வரிசையாக ஒவ்வொன்றாகக் கண் குளிர தரிசித்தார்.  உடனேயே தன் கண்களால் கண்டு மனம் உருக அனுபவித்த பரவசமான அனுபவத்தை பத்து பாசுரங்களில் இறைவனின் திருவடி, தூய ஆடை, உந்தி (தொப்புள்) திருமார்பு, கண்டம், பவளவாய், கமலக் கண்கள், திருமேனி உட்பட பெருமாளைப் பற்றிய ஒவ்வொரு அழகையும் அமலனாதிபிரன் என்ற நூலில் பாடி வைத்து பரவசமடைந்தார்.

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்

              உண்ட வாயன் என் உள்ளங்கவர்ந்தானை

              அண்டா கேனணி அரங்கனென்னமுதினைக்

              கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாயே

என்று திருவரங்கப் பெருமானின் ஒவ்வொரு அங்க அழகையும் ஒவ்வொரு பாசுரத்தில் வருணிக்கிறார்.  திருப்பாணாழ்வார் ஊன் உருக, மனம் கசிந்து இறைவனின் பேரருளையும், புறத்தோற்ற அழகையும் முதன் முதலாக நேரில் தரிசித்தபோது பாடிய பாடல்களே அமலனாதிபிரன் ஆகும்.

அமலனாதிபிரன், அமுதத் திரட்டில், முதலாயிரத்தின் ஆறாம் திரட்டாக வருகிறது.  அவர் பிற ஆழ்வார்களோடு இணைந்து 3 கோவில்களை மங்களாசாஸனம் செய்துள்ளார்.

கடைசி பாசுரத்தில் அரங்கன் என்னும் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாயே என்னும் கடைசி வரியைப் பாடி முடித்ததும் அங்கே கூடியிருந்த எல்லோரும் காணும்படி திருவரங்கனின் திருவடிகளில் வீழ்ந்து பணிந்து பூத உடலுடன் இறைவனுடன் ஐக்கியமானார்.

தன் அடியவருக்கு ஏற்பட்ட துன்பத்தை தான் ஏற்று அவரைத் தோளில் சுமந்து கோவிலுக்கு அழைத்து வர கட்டளையிட்டார் திருவரங்கப் பெருமான்.  இறைவன் மிகப் பெரியவன், அடியவர்களிடையே எந்த வித பாகுபாடும் காணாதவன் என்பதை உலகிற்கு உணர்த்த செய்த லீலை தான் இந்த திருப்பாணாழ்வாரின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com