
கணபதிக்கும் முருகனுக்கும் இடையே நடந்த போட்டியில் உலகம் சுற்றிய மயில் வாகனனைவிட பெற்றோரைச் சுற்றிய மூஞ்சூறு வாகனனுக்கே முதலிடம் கிடைத்தக் கதையை நாமறிவோம்.
விட்டல் பகவானை செங்கல்லில் நிற்கவைத்து பெற்றோருக்குச் சேவை புரிந்த பண்டரீபுர புண்டரீகன் பகவான் அருளால் பெற்றோரோடு சேர்ந்து மோக்ஷம் பெற்றான்.
பெற்றோரைத் தவிக்கவிட்டு கோயில் குளம் சுற்றி வந்தாலும் புண்ணியம் கிடைக்காது. அன்போடு ஆதரித்து, அவர் நலம் பேணினால் போதும். அவர்களின் ஆசியால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணரவேண்டும் என்பதையே இத்தகைய புராணக் கதைகள் நமக்கு எடுத்தியம்புகின்றன.
பெரியவர்கள் கூறியவற்றைக் கடைப்பிடிப்பதோடு மட்டுமின்றி அவர்களை வணங்கி, குடும்பத் தலைவர்களான முதியோர்களைக் கௌரவித்து, ஆதரிப்பது மிகவும் அவசியம். ஆனால், துரதிருஷ்டவசமாக அவ்விதம் இந்த நவீனச் சமுதாயத்தில் நடப்பதில்லை. முதியோர்களின் நிலை கவலை யளிப்பதாக உள்ளது. அவர்களின் நலம் பற்றி அனைவரும் சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது. பெற்றோர் கிளைத்து தழைத்து வளர்ந்து, முதுமையில் தரை தட்டித் தாழும்போது அவர் பெற்று வளர்த்த பிள்ளைகள் தாங்கி அரவணைக்காவிட்டால் அவர்களுக்கு வேறு யார் இருக்கிறார்கள்? முதியோருக்கு சமுதாயத்தில் மதிப்பும் குடும்பத்தில் பாதுகாப்பும் மிகவும் அவசியம்.
முதியோர் என்றால் கிழவர்கள் என்றல்ல பொருள். விருத்தி அடைந்தவர்கள். அதாவது முழுமையாக வளர்ந்தவர்கள் என்று பொருள். வயது வளர்ந்ததோடு உலக அனுபவமும் பெருகியவர்கள் பெரியோர்கள் என்பதை மறக்கலாகாது. தம் குடும்பதிற்காகவும் குழந்தைகளுக்காகவும் சமுதாயத்திற்காகவும் அவர்கள் ஆற்றிய தியாகமும் அதன் மூலம் அவர்கள் பெற்ற தன்னம்பிக்கையும் அன்பும் கூட அதிகம்.
முதுமை அனைவருக்கும் பொது. யாரும் அதிலிருந்து தப்ப முடியாது. நவீன மருத்துவ வசதிகளால் பெரியோர்களின் ஆயுட்காலம் பெருகி உள்ளது. இதை நினைத்து மகிழ முடியாத அளவுக்கு கூடவே சமுதாயத்திலும் குடும்பத் திலும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் பெருகி உள்ளன.
புதுமையும் பழமையும் ஒன்று சேர்ந்த ஒரு சமுதாயமே மேன்மையுற முடியும். வாழ்க்கையை வருங்காலம், எதிர்காலம் இரண்டில் மட்டுமே வாழ நினைக்காமல் கடந்த காலத்தில் நம் பெற்றோர் புரிந்த தியாகங்களை நினைத்துப் பார்த்து அவர்களை மதிக்கக் கற்றுக்கொண்டு வாழும் போதே அதற்கு முழுமை ஏற்படுகிறது.
ஸ்ரீ சத்திய சாயி பாபா தம் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனிடம் ஒரு கேள்வி கேட்டார்.
"நீ தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?"
மாணவன் கூறினான், "ஸ்வாமீ! நன்றாகக் கருத்தூன்றிப் படிக்க வேண்டும்."
பாபா கேட்டார், "அது மட்டும் போதுமென்று எண்ணுகிறாயா?"
மாணவன் கொஞ்சம் யோசித்து பதிலளித்தான், "நன்றாகத் தேர்வும் எழுத வேண்டும், ஸ்வாமீ!".
பாபா அவன் தோளை அன்பாகத் தட்டிவிட்டு மாணவர்களின் முன்னால் சென்று நின்றுகொண்டு கூறினார், "தங்கங்களே! நீங்கள் நன்றாகப் படிக்க வேண்டும். நன்றாகத் தேர்வு எழுதவும் வேண்டும். ஆனால், வீட்டில் உங்கள் தாய் தந்தையரை கௌரவித்து வணங்கி அவர்களின் ஆசிகளைப் பெறுவது படிப்பதைக் காட்டிலும் முக்கியமானது. அவர்களின் மனமுவந்த ஆசிகள் உங்களுக்கு எல்லா வெற்றிகளையும் பெற்றுத் தரும்" என்று எடுத்துரைத்தார்.
அந்தக் கல்லூரி மாணவர்கள் தங்கள் வீடு திரும்பியதும், தாய் தந்தையரிடம் கௌரவமாக நடந்துகொண்டு அவர்களைத் தரையில் விழுந்து வணங்கிய போது அவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்து ஆசி வழங்கினர் என்பது உண்மை.
நம் பிறப்புக்கும் இருப்புக்கும் காரணம் நம் பெற்றோர். அதனால் அவர்கள் தெய்வத்திற்குச் சமம்.
தாய் தந்தையர் கற்றுத் தந்த அரிச்சுவடி என்னும் அஸ்திவாரத்தின் மீது எழுந்து நிற்கும் கட்டடமே இன்றைய நம் பட்டப் படிப்பும் அந்தஸ்தும். அவர்களைவிட அதிகம் படித்துவிட்டோம் என்றோ அதிகம் சம்பாதிக்கிறோம் என்றோ அவர்களைச் சாமர்த்தியமற்றவர்களாக ஏளனம் பேசி, எள்ளி நகையாடும் பிள்ளைகள் எதிர்காலத்தில் தாமும் அதையே எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதை மறந்து விடக்கூடாது.
நம் மல மூத்திரங்களைத் துடைத்து நெஞ்சோடு அணைத்து அன்பு செய்த பெற்றோரின் மனமும் உடலும் ஓய்ந்து ஒடிந்து போயிருக்கையில் ஆதரவாக அணைக்க நமக்கு மனம் வர வேண்டாமா? இக்கடமைகளை மறக்கலாமா?
அவர்கள் நெஞ்சில் காலுதைத்து நடை பயின்ற நாம் அவர்களுடைய முதிய வயதில் அவர்கள் கால்கள் தள்ளாடும்போது நம் கால்களால் அவர்கள் நெஞ்சில் உதைக்காத குறையாக அவமானப்படுத்துவதை உணர்கிறோமா?
முதியோர்கள் வீட்டைத் தாங்கும் உத்திரம் போன்றவர்கள். அவர்களுக்கு முதுமை இரண்டாவது குழந்தைப் பருவம். ஆனால், முதுமை என்பது ஒரு கட்டாய வியாதியாகப் பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட முதுமையை அனைத்து வித பிரச்னைகளும் வந்து பாதிக்கின்றன.
பெரும்பாலான பெரியோர்கள் பொருளாதார விஷயத்தில் தவித்தபடி தாம் பெற்ற பிள்ளைகளின் மேல் ஆதாரப்படுபவர்களாகவும் அவர்கள் கையை எதிர்பார்ப்பவர்களாகவும் இருக்கிறார்கள். முதியோருக்கு ஏற்படும் பாதுகாப்பின்மை உணர்வை நீக்க குடும்பத்தார் பாடுபட வேண்டும்.
அதிலும் ஆண்களை விடப் பெண்களின் ஆயுட்காலம் ஆண்டவன் விதிப்படி அதிகமாக இருப்பதால் கணவனை இழந்த பெண்மணிகள் முதிய வயதில் குடும்பத்திலும் சமுதாயத்திலும் பாதுகாப்பற்ற நிலையை உணர்கிறார்கள். அதிகம் அவமானத்திற்கும் ஆளாகிறார்கள்.
வயதான பெற்றோரிடம் மகனும் மருமகளும் பேரன் பேத்திகளும் நடந்துகொள்ளும் விதம் கவலை அளிக்கிறது. தாத்தா பாட்டிகளுக்கு வாழ்வில் ஒரு பற்றுதல் ஏற்படுத்துவதில் அடுத்த தலைமுறையான பேரன் பேத்திகளின் பங்கு அளப்பரியது. அவர்களும் அலட்சியம் செய்கையில் முதியோர் படும் வேதனை சொல்லிலடங்காது.
பெரியவர்களுள் கணவன் மனைவிக்குள் விட்டுக் கொடுத்து ஒத்துப்போகும் குணம் இல்லாதபோது சிறியவர்களோடு இணைந்து வாழ்வது கடின மாகிறது. இப்படிப்பட்ட குடும்பங்களில் கூட்டுக் குடும்பம் என்பது தகராறுகளின் குழப்பமாக முடிகிறது.
இப்போதுள்ள முதுமைப் பெண்களின் நிலை என்னவென்றால் அன்று மாமியாரிடம் பயந்து அடங்கி வேலை செய்தார்கள். இன்று மருமகளிடம் அதேபோல் நல்ல பெயர் வாங்க வேண்டிய நிலையில் பயந்து வேலை செய்து வர வேண்டியுள்ளது. மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போலுள்ளது அவர்களின் நிலை.
செல்வம் சேர்ப்பதற்காக நாடு கடந்து கடல் கடந்து ஆகாயத்தில் பறந்து எங்கோ அயல்நாட்டில் வசிக்கின்றது இன்றைய தலைமுறை. நல்ல சோற்றுக்கு ஏங்கி அங்கு ஏதோ சுகமாக இருப்பதாக பிரமையில் கிடக்கும் பிள்ளைகளை எண்ணி தாமும் நல்ல உணவு உண்ணப் பிடிக்காமல் தவிக்கும் பெற்றோர் நிறைந்த சமுதாயமாக இன்றைய சமுதாயம் காணப்படுகிறது என்றால் அது மிகையில்லை.
தலைமைப் பண்புள்ள பெரியோர் சிலர் சமூக சேவையில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதைப் பார்க்கிறோம். இதற்கு குடும்பத்தார் பெருமைப்பட வேண்டுமே தவிர குற்றம் கூறி அவமதிப்பதோ உதாசீனம் செய்வதோ கூடாது.
ஒரு காலத்தில் குடும்பத் தலைவனாகவும் அலுவலகத்தில் பெரிய உத்தியோக ஹோதாவிலும் இருந்தவர்கள் முதுமைப் பருவத்தில் பிள்ளைகளால் உதாசீனமாக நடத்தப்படும்போது தாங்கிக் கொள்ள இயலாமல் உடல் நலம் குன்றி சுருங்கிப்போகிறார்கள்.
சமீபத்தில் வெளிநாடு சென்றிருந்தபோது சில முதியோர்கள் கூறிய செய்திகள் மனதை மிகவும் வருத்தின. தாம் உத்தியோகத்திற்குப் போவதால் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன் வரவழைத்த பெற்றோர் தற்போது குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டதால் தேவையற்றவர்களாகப் பார்க்கப்படும் அவலத்தை கண்ணீர் மல்க அவர்கள் எடுத்துரைத்தார்கள். அவர்களுக்கு உள்ள ஒரே ஆறுதல் அரசாங்கம் தரும் சலுகைகள் மட்டுமே. மற்றபடி வீட்டில் எப்போதும் போல் சமையல் தொடங்கி அனைத்து வேலைகளுக்கும் சம்பளம் இல்லா பணியாளராக உழைக்கிறார்கள்.
ஆரம்பத்தில் நம் பிள்ளைகள், நம் குடும்பம் என்று செய்த வேலை இன்று உடல் தள்ளாடிய பின்னும் செய்ய வேண்டி இருப்பதால் பாரமாகத் தோன்றுகிறது. அதோடு மருமகள் வீட்டில் இருக்கும் சனி ஞாயிறுகளில் மாமியார் வீட்டில் இருக்கக்கூடாதாம். எனக்கு பிரைவஸி தேவை. நீங்கள் எங்காவது சுற்றி விட்டு வாருங்கள் என்று மாமியாரை வெளியில் அனுப்பும் மருமகள்களை வெளிநாட்டில் நேரில் பார்த்தேன். ஐந்து டிகிரி குளிரில் இரண்டு ஸ்வெட்டர்களும் தலையை மூடிய ஹூடிகளும் சாக்ஸும் அணிந்து இரண்டு மூன்று பேராகச் சேர்ந்து முதியவர்கள் ரயிலில் ஏறி இலக்கின்றி சுற்றிவிட்டு பெரிய கடைகளான மால்களில் சுற்றி பொழுதைக் கழித்து ஏதாவது பிரட் சாண்ட்விச் வாங்கிச் சாப்பிட்டு விட்டு அங்கங்கே பார்க்குகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்து விட்டு மாலை அந்தி சாய்ந்த பின் வீடு திரும்புகிறார்கள். அந்தக் குளிரில் சூடாக சிறிது ரசம் சாதம் சாப்பிட்டுவிட்டு சற்று நேரம் முதுகைச் சாய்த்து படுத்துக்கொள்ள வேண்டும் போல் இருக்கிறது என்று அவர்கள் கூறுகையில் அந்த மருமகள் களையும் அவர்களை எதிர்த்து பேசாமல் சமாளிக்கும் மகன்களையும் நினைத்து வருந்தாமல் இருக்க இயலவில்லை.
(அடுத்த இதழில் பார்ப்போம்…)