
எப்பவும் யாரைப் பற்றியாவது எழுதறதைவிட, (இந்த ஒரு முறை மட்டும்) என் வாழ்க்கையிலிருந்தே ஒரு சிறு குறிப்பு தர ஆசைப்படுகிறேன் மை டியர் கண்மணீஸ்!
எனக்குப் பள்ளிப் பருவத்திலிருந்தே எழுத்தில் ஆர்வம்; பத்திரிகைகளுக்கு எழுதி சன்மானம் பெறுவது பிடித்தமான பொழுதுபோக்காக இருந்தது.
முன்னணிப் பத்திரிகை ஒன்று நடத்திய கட்டுரைப் போட்டியில் முதல் பரிசாக, 'மிக்ஸி' வென்ற சமயம் அது! அதைத் தருவதற்காக நேரில் வரச் சொல்லியிருந்தனர். அப்போது உதவி ஆசிரியர் பொறுப்பில் இருந்த அந்தப் பெண்மணி, என்னைப் பாராட்டி பரிசு வழங்கினார்.
பேச்சு வாக்கில், "நான் உங்கள் பத்திரிகையில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்குமா?" என்று ஆர்வத்துடன் கேட்டேன். உடனே அவரது முகம் மாறிவிட்டது.
"நீ நிறைய படிச்சிருக்கே… இங்கே சம்பளம் கம்மி; பத்திரிகைத் துறையில வேலையும் நிரந்தரம் இல்ல… பேசாம டீச்சர் வேலைக்குப் போயேன்!" என்றதோடு, என்னை உடனே வெளியேற்றி விட்டார்.
நான் அன்றிலிருந்து ஒரு பொருளைக் கையில் எடுத்துப் போகத் தொடங்கினேன்.
சில வாரங்களில் வேறு ஒரு பிரபல பத்திரிகையில் சேர்ந்து விட்டேன். அங்கே எனக்கு ராஜ… ஐ மீன் இளவரசி மரியாதை! ஆனால், சில சக ஆண் ஊழியர்கள் மட்டும், 'ஏங்க, நீங்கள்லாம் வந்து என்ன காப்பியமா எழுதிப் படைக்கப்போறீங்க?'ன்னு கிண்டல் அடிப்பாங்க.
நான் பதிலே பேச மாட்டேன். கையில் எடுத்துச் செல்லும் பொருளைப் பயன்படுத்துவேன்.
உரிய அங்கீகாரம் பெற்று பிரஸ் மீட், பிரஸ் ஷோ போகும் காலகட்டமும் விரைவிலேயே வந்தது. பேரே தெரியாத நாலாந்திர நிருபர்கள், "என்ன… தாய்க்குலமெல்லாம் வந்துட்டாங்க!"ன்னு ஜாடை பேசுவார்கள்.
நோ ப்ராப்ளம்! நம்மகிட்டதான் அந்தப் பொருள் இருக்கே!
பிரபல மாத இதழ் ஒன்று ஆரம்பமானபோது, நிர்வாகத்தினரால் என் பெயரும் சிபாரிசு செய்யப்பட்டது. ஆனால், அதன் பொறுப்பாசிரியரோ, "லேடீஸ் எல்லாம் டார்ச்சர்… டெஸ்க் வொர்க்கும் தெரியாது; ஃபீல்ட் வொர்க்கும் தெரியாது…" என்று நிராகரித்தார். அந்தப் பொருள்தான் மீண்டும் கைகொடுத்தது!
சரி, நான் கையோடு எடுத்துப்போன பொருள் என்னன்னு சொல்லலியே… ஓர் உருண்டை பஞ்சு! காதுல அடைக்க!! யாராவது நெகடிவ்வாகப் பேசினாலோ, ராகிங் செய்தாலோ பெண்களாகிய நாம் அதைக் காதுல வாங்காம, 'மேலே மேலே'ன்னு போய்க்கிட்டே இருக்கணும். எனக்கு இந்த ஐடியா எப்படி வந்ததுன்னு கேட்கறீங்களா? எல்லாம் சின்ன வயசுல நாம்ப கேட்டு வளர்ந்த தவளைக் கதைதான்!
குளத்துத் தவளைங்க எல்லாம் சேர்ந்து தங்களுக்குள்ள ஓட்டப் பந்தயம் ஏற்பாடு செஞ்சதுங்க. உயரமான வழுக்குப் பாறையில் ஏறணும்; அதுதான் போட்டியின் விதி! ரேஸ் ஆரம்பமானது.
"இது அவ்ளோ சுலபமில்லை; உன்னால முடியாது… முடியவே முடியாது… விழத்தான் போற!" பார்வையாளர்கள் கூட்டத்திலிருந்து இப்படியான கூக்குரல்கள் கேட்டுக்கிட்டே இருந்தன. தவளைகள் முயல்வதும், வழுக்கி விழறதுமாய் இருந்தன. பல தவளைகள் களைப்படைஞ்சு விலகிடுச்சு. ஆனா, ஒரே ஒரு சின்னத் தவளை மட்டும் உச்சியை நோக்கி முன்னேறிக்கிட்டே இருந்தது. அட! என்ன ஆச்சரியம்? சில விநாடிகள்ல உச்சியைத் தொட்டும் விட்டது.
வெற்றி…! வெற்றி…!!
அனைத்துத் தவளைகளும் வியந்துபோய், ''இவனால் மட்டும் எப்படி முடிஞ்சுது?"ன்னு கேட்க, அதனோட தாய்த் தவளை சொன்னதாம்…
"என் மகனுக்குக் காது கேட்காது!" வாழ்க்கையில் முன்னேறிச் செல்லும்போது, காதுகளை மூடிக்கொள்ளணும். இல்லைன்னா வீசப்படும் வார்த்தைகளாலும், எதிர்மறை விமர்சனங்களாலும் சோர்ந்து விழுந்து விடுவோம். முடியாதவர்கள், அவர்களால் முடியாததை, 'உன்னாலும் முடியாது'ன்னு சொல்வாங்க. சொல்றவங்க சொல்லட்டும்! அவர்களிடம் நாம சுத்த செவிடாக இருந்து விடுவோம்!
ஸோ, லட்சியத்தைத் தொட உங்களோட காதுகளை மூடிக்கொள்ளவும்.