
உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலும் பெண்கள் வாகை சூடி உள்ளனரே?
– பானு தாஹிர், திருவேற்காடு
மகிழ்ச்சி! தரமான சம்பவம்! பல பெண் கவுன்சிலர்கள் உற்சாகத்தோடு பதவிப் பரிமாணம் செய்ததைப் பார்க்க முடிந்தது. சிலர் தமிழில் உறுதிமொழி எடுக்கவே தடுமாறினார்கள் என்பது வேறு விஷயம்! இவர்களை அந்தப் பதவிகளில் அலங்கார பொம்மையாக அமர்த்திவிட்டு, அவர்கள் குடும்பத்து ஆண்கள் பின்புலத்திலிருந்து ஆட்டுவிக்காமல் இருந்தாலே போதும்! தங்கள் வார்டுக்கு என்ன நல்லது செய்யணும்னு அந்தப் பெண்களுக்குத் தெரியும்! ஆனால் செய்யணுமே! செய்ய விடணுமே!
இன்னொரு விண்ணப்பம் சென்னை மேயர் அம்மாவுக்கு…! ('மாண்புமிகுவா?', 'வணக்கத்துக்குரிய'வா?)
தினமும் காலை "ஓஹோ..நம்ப ஊரு… சுத்தம் பாரு…
"வேக்ஸினை போடுங்க மக்கா" ன்னு குப்பை வண்டி வர்றது நல்லதுதான். ஆனால், அதன் ஒலி அளவு தெருவுக்கு மட்டும் கேட்காமல், ரிப்பன் மாளிகைக்கே கேட்குற அளவுக்கு ஓவரா இருக்கு. காலை வேளைல ரோதனை தாங்கலை… வால்யூமைக் கோஞ்சம் குறைக்கச் சொல்லி உத்தரவு போடுங்க ப்ரியா மேடம்!
மகளிர் தினத்தன்று வந்த வாழ்த்துச் செய்திகளில் உங்களைச் சிரிக்க வைத்தது எது? சிந்திக்க வைத்தது எது?
-மோகனாராஜ், சிதம்பரம்
சிலிர்ப்பு:-
ஒரு கணமும்
மறவா உறவுக்கு
ஒரு தினமும்
தேவைதானா?
அனுதினமும்
அகலா அன்புக்கு
அடையாள நாளொன்று
அவசியம்தானா?
தாயை…
தாயைப் பெற்ற தாயை
தன்னில் சரி பாதியை
தான் ஈன்ற மகளை
தங்கையை
தமக்கையை
தாதியை
தன்னகரில்லா தோழியரை
மறத்தல் இயலுமோ?
மறக்க முயன்றால்
மறக்க முடிந்தால்…
மனித மனங்கள்
மரிக்க இயலுமே!
-முருகு
சிரிப்பு:-
சிங்கத்தைப் பெற்றெடுக்கும்
தாய்மார்களுக்கும்
மற்றும்
அந்தச் சிங்கத்தைப்
பூனையாக மாற்றிவிடும்
மனைவியருக்கும்
மகளிர் தின நல்வாழ்த்து!
– யாரோ?
ரஷ்யா மீது ஏகப்பட்ட பொருளாதாரத் தடைகள் விதிக்கப் பட்டுள்ளனவே?
-ச. ஜான்ரவி, கோவில்பட்டி
ஆமாமா!… 'சி.என்.என்', 'போர்ன்ஷாப்', ஃபேஸ்புக்' எல்லாமே 'கட்' பண்ணியாச்சு! 'மேக்டனால்ட்ஸ்', 'கோககோலா' பெப்சி, பீட்சா, KFC க்கும் தடை பண்ணப் போறாங்களாம்! 'டிக்டாக்கும் கிடையாதாம்' இப்படியே போனா, ரஷ்யாக்காரங்க அதிக ஆரோக்கியம், நல்ல மனநலம், தகவல் தரம் எல்லாம் கிடைச்ச இந்தப் பிரபஞ்சத்தின் சூப்பர்மேன்களாகி விடுவார்கள்…
அப்புறம் நாம்பளும் "ஹே தோஸ்த்தி!"ன்னு ஜாலியா பாடலாம்!
'அதித பாசம்' – 'கண்டிப்பு'- இரண்டில் எதைக் காட்டிக் குழந்தைகளை வளர்க்க வேண்டும் அனுஷா?
– ஆர். ராஜலட்சுமி, திருச்சி
இப்ப, நான்தான் 'நாயகன்' கமல்…
நீங்க அந்தப் பேரன்…
"சொல்லுங்க… நீங்க நல்லவரா… கெட்டவரா?" சீன்!
"தெரியலியேப்பா!"
"அதித பாசமா? கண்டிப்பா? எது அனுஷா தேவை?"
"தெரியலியேம்மா… ஹ… ஹ…!" (சீன் முடிஞ்சு போச்சு)
ஏன்னா, இரண்டுமே தேவைதான்!
ஒரு குழந்தை அடிச்சா, திருந்தும்
ஒரு குழந்தை பாராட்டினா, திருந்தும்…
ஒரு குழந்தை அன்பால், திருந்தும்
உங்கக் குழந்தை எந்த கேடகரியில வருதுன்னு தெரிஞ்சு வளர்க்கணும்.
திட்டு வாங்கும் குழந்தை தாழ்வு மனப்பான்மையுடன் வளர்கிறது.
அடி வாங்கும் குழந்தை முரடனாகிறது.
செல்லம் கொடுத்தால் தறுதலை ஆகிறது.
அதனால, அடி, கண்டிப்பு, அன்பு, பாராட்டு நான்கும் சந்திக்கும் 'ஸ்வீட் ஸ்பாட்'டில் வளர்ப்பதுதான் நல்ல பேரன்டிங்காம்!
"என் குழந்தை எந்தக் கேடரிக்குமே அடங்க மாட்டேங்குதே"ங்கிறீங்களா?… அப்படின்னா…
'நாயகன்' – கமல் – "தெரியலியேம்மா ஹ்ஹ்ஹ்!" காட்சியை ரீ-வைன்ட் செய்க!
அதுவும் இந்தக் காலத்துக் குழந்தைகளை வளர்க்குறது…
அய்யயய்யோ!! பெரிய இன்ஸ்ட்டிட்யூட்ல எல்லாம் போய் படிச்சு பட்டம் வாங்கிட்டு வந்தா கூட கஷ்டம்தான்!