பெண்களின் திருமண வயது 21 

பெண்களின் திருமண வயது 21 
Published on
-தனுஜா ஜெயராமன்

பெண்களின் திருமணவயதை இருபத்தி ஒன்றாக உயர்த்தி இருக்கும் தற்போதைய சட்டமானது மிகவும் வரவேற்க தக்கது. இதன்மூலம் மேற்கல்வி கற்கும் பெண் குழந்தைகளின் சதவீதம் அதிகரிக்க பெரும் வாய்ப்புகள் உள்ளது. இதற்கு முன்பு பல ஆண்டுகளாக பெண்களின் திருமண வயது என்பது பதினெட்டாகவே இருந்து வந்தது. பதினெட்டு வயதில் பெண்குழந்தைகள் பன்னிரண்டாம் வகுப்பு உயர்நிலை கல்வியை மட்டுமே முடித்திருக்க முடியும். ஆனால் தற்போதைய  சட்டமானது அவளின் கல்லூரி படிப்பை உறுதி செய்ய ஒரு வாய்ப்பாக அமையும் என்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.  இது பல கிராமப்புற பெண்களின் வயிற்றில் பாலை வார்க்கும் என்பதில் ஐயமில்லை.

பெண்கள் தங்கள்  கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை தேர்வு செய்யவும் , தனது திருமணம் , எதிர்காலம், வாழ்க்கைத் துணை குறித்த புரிதல்களை பெறவும் உகந்த வயது இருபத்தியொன்று தான். கடந்த இரண்டு வருட காலமாக பெரும் நோய் தொற்றின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இக்காரணங்களால் இன்று பல பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம்  கேள்விக்குறியாகி வருகிறது. பழங்காலத்திலிருந்து பாடுபட்டு வளர்த்தெடுத்த பெண் கல்வி இன்று பல்வேறு காரணங்களால் பரிதவித்து போயிருப்பது வருத்தமளிக்கிறது.

பள்ளிகளின் முடக்கம் பெண் குழந்தைகளுக்கு வெகுவான பாதிப்பை ஏற்படுத்தி வருவது பலரும் அறிந்ததே. தற்போது பள்ளிகளில் மாணவியர் இடை நிற்றல் பரவலாக பரவி வருகிறது. பள்ளிகளில் இருந்து நிறுத்தபடும் இளம்பெண்கள் பலர் சிறுவயதிலேயே திருமணம் செய்விக்கப் படுகிறார்கள்.

சென்ற  நூற்றாண்டின் முன்பகுதியிலே வழக்கொழிந்து போனதாக கருதப்படும்  குழந்தைத் திருமணங்கள், 2021 லும்  தொடர்வது காலக்கொடுமையே. இந்த காலகட்டத்திலும் குழந்தைத் திருமணத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிவரும் என்பதை யாரும் கிஞ்சித்தும் யோசித்திருக்கமாட்டார்கள். இந்த நோய்த்தொற்று காலத்தில் பால்ய திருமணம் என்ற பெரும் சமூக தொற்றும் பரவி வருவது நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதற்கு நோய்தொற்று காலம் என்பது மட்டுமே நேரடி காரணம் என சொல்லிவிட முடியாது. கிராமங்களில் பரவலாக காணப்படும் படிப்பறிவின்மை, போதிய விழிப்புணர்வின்மை, வறுமை , வேலையின்மை போன்ற மறைமுக பிரச்னைகளுமே குழந்தை திருமணத்திற்கான காரணங்களாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

தற்போதைய சூழலில், 'இதற்கு மேல் பிள்ளைகளை படிக்க வைக்க தங்களால் இயலாது' என்பதும் , 'நோய் தொற்றினால் தங்களுக்கு ஏதேனும் நேர்ந்து விட்டால் பெண் குழந்தைகளை பார்த்து கொள்ள ஆள் தேவை,' என்பதையும் பால்ய திருமணத்திற்கான காரணமாக வைக்கின்றன அந்த பெற்றோர்களின் தரப்பு. ஆனால் இத்தகைய காரணங்களெல்லாம் பெண் குழந்தைகளை பள்ளியிலிருந்து இடை நிறுத்தி திருமணம் செய்து வைப்பதை ஒருபோதும் நியாயப்படுத்த இயலாது.

தற்போதைய திருமண வயது வரம்பை அதிகரிக்கும் இச்சட்டமானது பல பெண்களின் கல்வி மற்றும் வாழ்வுரிமையை காக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பல கிராமப்புற பெண்களின் வாழ்வில் ஓளியேற்ற வைக்கப் போகும் இச்சட்டத்தை வாழ்த்தி வரவேற்ப்போம்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com