‘ஜலந்தர் – விருந்தா – விஷ்ணு!’

‘ஜலந்தர் – விருந்தா – விஷ்ணு!’
Published on

ஆர்.மீனலதா, மும்பை

துளசி மாதாவிற்கும், சாளக்ராம உருவிலிருக்கும் பகவான் விஷ்ணுவிற்கும் பாரம்பரிய முறைப்படி வருடந்தோறும் விவாஹத்தை நடத்திக் கொண்டிருக்கும் மராத்திய சிநேகிதி பீனா மற்றும் ஸ்மிதாவிடம் இதுபற்றிப் பேசுகையில் கிடைத்த விபரங்கள் பல.

துளசி விவாஹம் தீபாவளி அமாவாசைக்குப் பிறகு 11 அல்லது 12ஆம் நாள் வரும் பிரபோதினி ஏகாதசி முதல் கார்த்திக் பூர்ணிமாவிற்குள் நடத்தப்படுகிறது.

பகவான் விஷ்ணுவிற்குப் பிரியமான துளசி, 'விஷ்ணுப்பிரியா' என்றும் அழைக்கப்படுகிறாள். அநேக வீடுகளில் துளசிக்கு பூஜை செய்து வழிபட்டு வருகிறார்கள்.

துளசி விவாஹக் கதை :
இந்தியாவில் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகளின் பின்னணியில் சுவாரசியமான கதை இருக்கும். அதுபோல, துளசி விவாஹத்திற்கு மராட்டிய மாநிலத்தில் கூறப்படும் கதை இது.

இந்து வேதப்படி விருந்தா (பிருந்தா) என்கிற பெண்மணி பகவான் விஷ்ணுவின் மீது மிகவும் பக்தி கொண்டவள். அசுரன் ஜலந்தர், விருந்தாவைத் திருமணம் செய்து கொண்டான். விருந்தாவின் பூஜைகள் அவனுக்கு ரட்சை மாதிரி அமைந்தன. ஜலந்தரின் அட்டூழியங்களைத் தாங்க இயலாமல், தேவர்கள் பகவானிடம் முறையிட்டனர். ஆனால், ஜலந்தரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஒரு சமயம் ஜலந்தர் யுத்தத்திற்குச் செல்கையில் அவனது வெற்றியின் உத்தரவாதத்திற்கு விருந்தா சங்கல்பம் செய்து கொடுத்தாள்.

ஜலந்தர் புறப்பட்டுச் சென்ற பின் மகாவிஷ்ணு ஜலந்தர் உருக்கொண்டு விருந்தா கண்ணெதிரே தோன்ற, கணவரென எண்ணி மகிழ்ச்சியுடன் அவரது பாதத்தைத் தொட்டு வணங்கிய சமயம், அவளது சங்கல்பம் தடைப்பட்டு விட்டது.

ஜலந்தரின் சக்தி போய்விட, சிவபெருமானால் அவன் கொல்லப்பட்டான். அவனது தலை விருந்தாவின் அரண்மனையில் விழுந்தபோதுதான், அவளுக்குப் புரிந்தது.

பதிவிரதையாகிய விருந்தா கோபமடைந்து, விஷ்ணுவை சாளக்ராமமாக (கல்) போகும்படியாகவும், மனைவி லக்ஷ்மி தேவியை விட்டுப் பிரிய வேண்டுமென்றும் சாபமிட்டாள். இதுவே பிற்காலத்தில் ராம அவதாரத்தில், ராவணன் சீதா தேவியை சிறையெடுக்கையில் பிரிய நேர்ந்தது.

ஜலந்தர் இறந்துபோனதால், விருந்தா கடலுக்குள் மூழ்கி உயிர் நீத்தாள். அப்போது விஷ்ணு, அவளது ஆத்மாவைச் செடியாக மாற்ற, அதுவே துளசிச் செடியானது.

விஷ்ணுவின் பக்தையான விருந்தா, தனது மறுபிறப்பில் சாளக்ராம ரூபத்தில் இருக்கும் விஷ்ணுவை திருமணம் செய்துகொள்வாள் எனக் கூறப்பட்டதால், 'துளசி விவாஹம்' நடைபெறுகிறது.

நடைபெறும் முறை :
வீடுகள் மற்றும் கோயில்களில் இருக்கும் துளசிச் செடி மற்றும் சாளக்ராமத்திற்கு புதுத் துணிகள் அணிவிக்கப்படுகின்றன. துளசி மாதாவிற்கு மாலை, வளைகள் போட்டு தேவி முகமொன்றினை பேப்பரில் வரைந்து துளசிச் செடி மீது வைக்கப்படுகிறது.

இருவருக்குமிடையே வெள்ளைத் துணியைத் திரையாகப் போட்டு, பூஜாரிகளால் மங்களாஷ்டக மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. பின்னர் முறைப்படி விவாஹம் நடத்தப்பட்டு, அட்சதைகள் தூவப்படுகின்றன. பொங்கல், கரும்பு, பழங்கள் போன்றவை நிவேதனமாகப் படைக்கப்பட்டு, ஆரத்தி எடுத்து, விவாஹத்திற்கு வந்திருப்போருக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

பெண் குழந்தை இல்லாத தம்பதிகள் பலர் இந்தக் கல்யாணச் செலவை ஏற்றுக்கொண்டு, துளசியை வணங்கி ஆசிகள் பெற்றுச் செல்கின்றனர்.

பீஹார் மாநிலத்தின் தென்பகுதியில் இருக்கும் ஸௌன்ஜா (Saunja) வில் உள்ள, 'ப்ரபு தாம்'ல் துளசி விவாஹம் மூன்று நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதில் அனைத்து கிராம மக்கள் மட்டுமல்லாது, பிற இடங்களிலுமிருந்தும் அநேகர் இந்த விவாஹ வைபவத்தில் கலந்து கொள்கின்றனர்.

முதல் நாள் : வேத கோஷங்கள் மற்றும் ராம சரிதமானஸ் அல்லது ராமாயணம் கிராமத்தினரால் கூறப்படுகின்றன.

இரண்டாம் நாள் : ஷோப யாத்ரா தினம், ஸ்பெஷல் பிரசாதமாக பொங்கல் செய்யப்பட்டு நிவேதனமாக அளிக்கப்படுகிறது.

மூன்றாம் நாள் : தில கோத்சவம் மற்றும் விவாஹோத்சவம் பகவான் விஷ்ணுவிற்கும் தேவி விருந்தாவிற்கும் விமரிசையாக நடத்தப்படுகின்றன. இன்று 56 வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டு (Chapan Bhog) வந்திருக்கும் அனைவருக்கும் பிரசாதமாக விநியோகிக்கப்படுகின்றன.

துளசி காயத்ரி மந்திரம் :

l ஓம் துளசியை வித்மஹி
விஷ்ணு ப்ரியை தீமஹி
தன்னோ விருந்தா ப்ரசோதயாத்!

l ஓம் துளசீயாயை வித்மஹே
திருபுராரியாய தீமஹி
தன்னோ துளசி ப்ரசோதயாத்!

l ஓம் ஸ்ரீ த்ரிபுராய வித்மஹே
துளசீ பத்ராய தீமஹி
தன்னோ துளசி ப்ரசோதயாத்!

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com