
-பி.சி.ரகு, விழுப்புரம்
மணமேடையில் உட்கார்ந்திருக்கும்
என் காதருகில்
தோழி வந்து
சொல்லிவிட்டுப் போகிறாள்
சிரித்த முகமாய்
இருக்கச் சொல்லி…
என் தாலி செய்வதற்காக
அம்மாவின் தாலி
விற்கப்பட்டதையும்…
என் திருமணச் சீர் செய்ய
அப்பா ஆசையாய் பயிரிட்ட
ஐந்து ஏக்கர் நிலம்
விற்கப்பட்டதையும்…
திருமணச் செலவிற்காக
இருந்த வீட்டையும்
அடமானம் வைத்த என்
குடும்பநிலையை எண்ணும்போது
எப்படிச் சிரிப்பேன்
மணமேடையில்?
**************
வாசல் கூட்டி
கோலம் போடுகையில்
அழகாய் கேட்கும்
அக்காவின் கொலுசொலி…
அடுப்படியில் நின்று அக்கா
அங்குமிங்கும் நடக்கையில்
சங்கீதம்போல் சத்தமிடும்
அக்காவின் கொலுசொலி
வரப்பில் நடக்கையில்,
நீர் எடுக்கையில்,
கடைக்குப் போகையில்,
களை எடுக்கையில்,
விதவிதமாய் சத்தமிடும்
அக்காவின் கொலுசு!
தங்கை பூப்பெய்திய
நாளில் இருந்து
கேட்பதே இல்லை
அக்காவின் கொலுசொலி…
அக்காவிடம் கேட்டேன்
கொலுசு எங்கே என்று
அக்கா சிரித்தபடி சொன்னாள்
அப்பா செலவிற்காக
கொலுசை அடகு வைத்துவிட்டதாய்…
வீடுமுழுக்க சத்தமிட்ட
அக்காவின் கொலுசு
அழுதிருக்குமோ
அடகு வைக்கையில்?